இளமையில் வறுமை உணவின் ருசியை அழிக்கிறது! - ஒரு துளி மணலில் ஓர் உலகு!


அன்புத்தோழர் ராமமூர்த்திக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?


சர்க்கரைப் பொங்கலை சமைத்து சாப்பிட்டு கிறக்கத்தில் இருப்பீர்கள். உங்களிடம் இருந்து படிக்க கடன் வாங்கிய இந்தியப் பொருளாதாரம் என்ற நூலை நான் படித்துவிட்டேன். அரசியல், பொருளாதாரம் பற்றிய நிறைய விஷயங்களை இந்த நூல் சொல்லுகிறது.


சென்னை புத்தகத் திருவிழாவில் சில நூல்களை வாசிக்கவென வாங்கினேன். சில நாவல்கள், சிறுகதைகள், காமிக்ஸ் என வாங்கினேன். கட்டுரை நூல்களை வாங்க மெனக்கெடவில்லை. அதனை எங்கள் இதழின் ஆசிரியரே போதும் போதுமென்ற அளவுக்கு கொடுத்துவிடுகிறார். இந்த ஆண்டு நான் கே.கே.நகரிலிருந்து தனியாக பிரிந்து மயிலாப்பூருக்கு செல்கிறேன்.


சென்னையில் படிக்கவரும்போது மயிலாப்பூரில் தங்கியிருந்தேன். சில மாதங்கள் அங்கிருந்து வேலை தேடி அலைந்தேன். பிறகு எதுவும் விளங்காமல் உடல்நலம் கெட்டு ஊருக்குத் திரும்பினேன். இன்று திரும்ப அதே ஊருக்கு சென்று மேன்ஷனில் தங்கப்போகிறேன். கையில் காசு குறைவாக இருக்கிறது. எனவே இந்த முடிவு. கே.கே.நகரில் அறைநண்பராக என்னை அனுமதித்த மெய்யருள் அண்ணாவுக்கு கல்யாணம். 36 வயதான அவர் காதலித்து மணம் முடிக்கிறார். சந்தோஷப்படவேண்டிய விஷயம்தானே!


முதன்முதலில் அறைக்கு வந்தபோது அவர் சொன்ன கண்டிஷன் இதுதான். எனக்கு திருமணம் ஆகும்போது நீ வேறு அறை பார்த்து போய்க்கொள் என்றார். 12ஜி பஸ்ஸிலும் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு மேல் முட்டி முனகி பயணித்திருக்கிறேன். இனி எனக்கு விடுதலை.


அதுவும் நான் 12ஜி பஸ்ஸிற்கு பாஸ் எடுத்த நேரம். பேருந்து பணியாளர்கள் ஊதியப் போராட்டத்தை தொடங்கினர். இதன் விளைவாக பஸ்ஸில் மயிலாப்பூருகு சொகுசாக இல்லை.. அடித்துப்பிடித்துதான் செல்லவேண்டியவன். நடந்து சென்று வருகிறேன். நேரத்திற்கு பஸ் வருவதில்லை. இதை எடிட்டரிடம் எப்படி சொல்லுவது? வண்டி ஓட்டப் பழகுங்க அன்பு. நான் வாங்கித்தரட்டா? என்பார் எடிட்டர். இது தேவையா? வண்டி ஓட்டுவதில் முக்கியமான விஷயம் நாம் போய்ச்சேரும் இடம். எனக்கு இப்போது இருக்கும் நம்பிக்கைப்படி கூட இருவரை அழைத்துக்கொண்டு வைகுந்தம் செல்ல வாய்ப்பிருக்கிறதோ?


திருமணத்திற்கான பெண்களை பார்த்து வருவீர்கள். உடற்பயிற்சியை கைவிட்டு பூரிப்பில் இருக்கிறீர்கள். தொப்பை வளர்ந்து பேண்ட் சைஸை மாற்ற நேரிடுவதற்குள் திருமணத்தை முடித்துவிடுங்கள். அப்புறம் பீர் பெல்லி என்று சொல்லி உறவுகளை சமாளித்து விடலாம்.

நன்றி!


சந்திப்போம்!


.அன்பரசு

17.1.2018

*****************************************8&***********************************


அன்புள்ள தோழர் ராமுவுக்கு, வணக்கம்.


பேருந்து கட்டணம் உயர்கிறது. அதற்கு முன்னமே ஹீரோஹோண்டா வாங்கிய கிராமத்து கெட்டிக்காரத்தனம் ஆசம். பஸ் டிக்கெட்டுக்கே முப்பது ரூபாய் ஆகிவிடும் போல. வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து மயிலாப்பூரிலுள்ள கிரசன்ட் ஹாஸ்டலுக்கு இடம்பெயர்கிறேன். முன்னமே சொன்னதுபோல கல்யாண வீட்டுக்கு அலங்காரம் செய்து வருகிறார். அதனால் நான் அவரோடு சேர்ந்து வீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.


முதலியார் சாதியைச் சேர்ந்தவர் செட்டியார் சாதிப்பெண்ணை காதலித்து மணம் செய்கிறார். இருதரப்பிலும் சற்று பூசல்கள் இருந்தன. எப்படியே சமாளித்து அனுசரித்து மெய்யருள் அண்ணன் இதனை திருமணத்தில் முடித்திருக்கிறார். அதாவது அதுவரையில் கொண்டு வந்துவிட்டார். காதலனாக பெண்ணின் மனதை வென்று அப்புறம் புருஷ் சாமர்த்தியம் காட்டுவதில்தானே வாழ்க்கை இருக்கிறது. புத்தகத் திருவிழாவில் இந்திராகாந்தி பற்றிய நூல் ஒன்றை வாங்கினேன். அதைத்தான் தற்போது வாசித்து வருகிறேன்.


ஜப்பானைச் சேர்ந்த எழுத்தாளர் ஹாருகி முரகாமியின் சிறுகதைகளை தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்தேன். பனிமூடிய மலைப்பகுதியில் காதலியின் கைபிடித்து நிற்பது போல இருக்கிறது இவரது கதைகளின் சூழல்கள். நகரத்தின் சலிப்புற்ற வாழ்க்கையில் இவரது நாவல்கள் சுவாரசியமாக உள்ளன. அந்த தைரியத்தில்தான் நோர்வீஜியன் வுட் என்ற நாவலைப் படித்தேன். 32 வயதான டோரு வாட்டனபி விமானத்தில் பயணிக்கிறார். அப்போது தன் இருபது வயது வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறார். கதை மெல்ல பள்ளிப்பருவத்திற்குள் நுழைகிறது. மிடோரி, நவோகோ, நவாகாடா, கிஸூ என குறைந்த கதாபாத்திரங்கள்தான் நாவலை வலுமைப்படுத்துகிறார்கள். நம்மை ஊக்கம் கொடுத்து வாசிக்க வைக்கிறார்கள்.


சிறுவயதில் சந்திக்கும் மூன்று நண்பர்கள். அதில் வாட்டனபியின் தோழனும் நவோகோவும் காதல்ன் காதலி. ஆனால் ஒருகட்டத்தில் வாட்டனபியின் தோழன் காரை புகையால் நிறைத்து அதனுள் படுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறான். வாட்டனபிக்கு ஏன் அப்படி நண்பன் செய்துகொண்டான். மனதில் அப்படி என்ன துயர் என்று தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறான். ஆனால் அவனுக்கு எதுவும் புரிவதில்லை. பின்னர், நண்பனின் காதலி நவோகோவுடன் பழக்கம் ஏற்படுகிறது. அது உடல் உறவுவரை தொடர்கிறது.


நவோகோவின் உடலிலும், மனதிலும் இருக்கும் குறைபாடு தன் நண்பனை சோர்வுறச்செய்து கொன்றது என்பதை பின்னர்தான் வாட்டனபி உணர்கிறான். நவோகோவின் உடல்நலம் சீர்கெடுகிறது. இதன்காரணமாக அவள் சொகுசா ன மனநல விடுதிக்கு சிகிச்சைக்கு செல்கிறாள். இந்த நேரத்தில் வாட்டனபிக்கு கல்லூரியில் தோழி ஒருத்தி கிடைக்கிறாள். இவள் மெல்ல வாட்டனபியை நெருங்கி காதலியாகிறாள். அதேசமயம் வாட்டனபிக்கு நவோகோ மீதுள்ள காதல் இருப்பதால், புதிய பெண் தோழியின் உடல் உறவைத் தவிர்க்கிறான். அது தீவிர குற்றவுணர்வாக மாறுகிறது. அவன் இறுதியாக என்ன முடிவு எடுத்தான், நவோகோ உடல்நலம் தேறி திரும்பி வந்தாளா, வாட்டனபி புதிய தோழியிடம் தன் இக்கட்டான நிலையைச் சொன்னானா என்பதுதான் மீதிக்கதை. முக்கியமான பகுதியும் அதுதான்.


டிசம்பர மாத பனி பெய்கிறது. எதிரே வருபவரின் முகம் தெரியாத பனியின் நீங்கள் நடந்து செல்கிறீர்கள். உங்கள் மனம் எப்படியிருக்கும்.? இந்த நாவலைப் படிக்கும்போது எனக்கு அப்படித்தான் இருந்தது. வினோதமான மனங்கள், ஒருவரின் இயல்பு, அதனை பாதிக்கும் சூழல், இயல்பாக உடலுறவை மருந்தாக்கி மன வலிகளை கடந்துபோகும் தன்மை, இசையின் மகத்துவம், உடலை கிளர்த்தி மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிற அதன் தன்மை என முரகாமியின் நாவல் திகைக்க வைத்து விட்டது. அதிலும் வாட்டனபி காதலியை இழந்து கதறும் காலவெளி நம்மை பயமுறுத்துகிறது. துறவை ஏற்கும் சமணர்கள் முடியை கொத்தாக தலையிலிருந்து பிடுங்கிப்போடும் போது அனுபவிக்கும் வலியும், வேதனையும் எப்படியிருக்கும்? அதேபோல இந்தப்பகுதிகள் இருந்தன. தமிழில். ஆர்.சிவகுமார் மொழிபெயர்த்திருந்தார். பிரமாதம்.


உங்கள் வேலைகளுக்கு இடையில் நீங்கள் ஏதாவது நூல்களைப் படித்தீர்களா? எனக்கு கிடைக்கும் நேரங்களில் நூல்களை வேகமாக படித்துவிட தோன்றுகிறது. பார்ப்போம்.


நன்றி


சந்திப்போம்


.அன்பரசு

27.1..2018

***************************************************************


அன்பரசுவுக்கு வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?


என்னை நீங்கள் பத்தாம் வகுப்பிலிருந்து அறிவீர்கள். பொதுவாக அறிவியல் வகுப்புகளை எடுத்து படிப்பவர்களை பார்த்தாலே எனக்கு அலர்ஜி. பயங்கர மூடி டைப்பாக இருப்பார்கள். கொஞ்சம் கூட பிற மனிதர்களை மதிக்க மாட்டார்கள். அதிலிருந்து நீங்கள் மாறுபட்டு இருந்தீர்கள். ஆச்சரியம்தான். ஆனாலும் முதல் பார்வைக்கு அந்த கூட்டத்தில் ஒருத்தரைப் போலவே தெரிந்தீர்கள். ரைட். அப்போது நான் தள்ளுவண்டி ஒன்றில் வேலை செய்து வந்தேன். எல்லாம் காசுக்காகத்தான். காலையில் பேப்பர் போடுவது, மாலையில் கொடுமுடியில் தள்ளுவண்டிக் கடையில் வேலை பார்ப்பது. இப்படி வேலை செய்தால் மட்டுமே நான் படிக்க முடியும் என்கிற நிலை.


நிறைய முறை உங்களைப் பார்த்தே பொறாமைப்பட்டிருக்கிறேன். எனக்கு உங்கள் அப்பாவைப் போல அப்பா வாய்க்கவில்லையென்று. பெற்றோர, நாம் பிறக்கும் சாதி, நிறம் இதெல்லாம் நாம் தேர்ந்தெடுக்க முடியாது என்று பின்னர் அறிவியல் நூல்களைப் படித்து அறிந்துகொண்டேன். உணவு, அதன் மீதான விருப்பம் பற்றி எழுதியிருந்தீர்கள். என்னைப் போன்றவர்களுக்கு சாப்பிட நல்ல பண்டம் என்று வாங்கிக் கொடுக்க யாரும் கிடையாது. கையிலும் காசு கிடையாது. கிடைக்கும்போது நிறைய சாப்பிட்டுக்கொள்வதுதான். நான் தள்ளுவண்டிக்கடையில் வேலை செய்வதில் நன்மை அங்கேயே சாப்பிட்டுக்கொள்வேன். சம்பளத்தோடு அது ஒரு லாபம். அங்கு நாங்கள் தயாரிக்கும் உணவு ஆரோக்கியம் என்று சொல்ல முடியாது. முழுக்க டாஸ்மார்க் ஆட்களை நம்பி நடத்தப்படும் கடை அது. குடல் வேகாமல் இருக்க சரக்கு அடிப்பவர்கள் அங்கு வந்து நாக்குக்கு உறைப்பாக ஒணத்தியாக எதையாவது சாப்பிடுவார்கள். நன்றாக இருக்கிறதா இல்லையா பழையதா என்று பார்க்கத்தான் அவர்களின் புத்தி திடமாக இருப்பதில்லையே. அதை வைத்துதான் அந்த கடை ஓடியது.


நான் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குச் செல்வேன். எங்கள் அப்பா வேலை செய்து சம்பாதிப்பதை தாமரைப்பாளையம் முச்சந்தியில் செலவழித்து விடுவார். அப்புறம் அவரை நம்பி வீட்டில் அம்மா, தங்கச்சி என இரு வயிறுகள் இருக்குமே! என்ன செய்வது? நான் அதற்கு அப்போது வழி செய்துகொண்டிருந்தேன். இந்த நிலையில் வாய்க்கு ருசியான உணவை எங்கே சாப்பிடுவது? அதனால்தான் கிடைக்கும்போது வெறித்தனமாக தின்பது. அப்புறம் உடல் எடை எகிறிவிடுகிறது. இன்றிருக்கும் நிலை பரவாயில்லை. அன்று எங்கள் ரத்தத்தை சுற்றிலுமிருந்த கவுண்டர்கள் உறிஞ்சிக் கொண்டிருந்தனர். எனக்கு அன்று என் வயிற்றில் எரிந்த பசிதான் என்னை உருவாக்கியது. நாங்கள் வாழ்ந்த நிலைமையை மாற்றியதும் அதுதான். கமல்ஹாசன் சொன்னதாக ஒரு வாசகம் உண்டு. நான் சோற்றுக்காக வேலை செய்திருந்தால், சினிமாவில் இந்தளவு முன்னேறி வந்திருக்க முடியாது என்று. அவரது பார்வையில் அது உண்மையாக இருக்கலாம். இங்கு பெரும்பான்மையாக இருப்பவர்கள் வாழ்க்கையில் வறுமை முக்கியமான அங்கமாகத்தானே இருக்கிறது. உங்கள் குடும்பத்தில் நீங்கள் வேறுபட்டவராக இருக்கிறீர்கள். உங்கள் சூழ்நிலையைப் போலவே அனைவரின் வீட்டுச்சூழுலும் இருக்கும் என்று நினைக்கிறீர்களா என்று தெரியவில்லை. நீங்கள் என்னை சந்தித்து பேசியது நெருக்கடியான காலகட்டத்தில் எவ்வளவு உற்சாகம் தந்தது தெரியுமா? உங்கள் கடிதத்தில் எழுதிய ஒற்றை வார்த்தை எங்கெங்கோ என்னை இழுத்துச்சென்றுவிட்டது. வாசிப்பது உங்களுக்கு மிகவும் முக்கியம். அப்போதுதானே எழுத முடியும்.


நன்றி!


.ராமமூர்த்தி



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்