மனநல குறைபாடுகளுக்கான பல்வேறு சிகிச்சை முறைகள்!


Psychology, Psyche, Mask, Wire Rack, Face
pixabay

சைகோடைனமிக் தெரபி

ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த உளவியல் மருத்துவரான சிக்மண்ட் ஃப்ராய்டின் விழிப்புற்ற மனம், விழிப்புணர்வற்ற மனம் எனும் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது இந்த தெரபி.

நோயாளியின் விழிப்புணர்வற்ற மனநிலையில் அவரின் குழந்தைப் பருவ, பள்ளிப்பருவ நினைவுகள் இருக்கும். ஆனால் இவற்றில் நடந்த ஏதாவது விஷயங்கள் தற்கால வாழ்க்கையை வாழவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும். அந்த சம்பவம் சார்ந்த கோபம், ஆற்றாமை, விரக்தி, துயரம், வலி, வேதனை மனதில் இருப்பது ஒருவரின் நிகழ்காலத்தை நாசமாக்கும் திறன் பெற்றது. எனவே உளவியல் வல்லுநர்கள் தெரபியில் நோயாளியை பேச வைத்து அவரின் மனதிலுள்ள வலியை துல்லியமாக தெரிந்துகொண்டு, அந்நினைவுகள் அவரின் வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன என்பதை பேசி புரிய வைக்கின்றனர்.

தெரபி வகுப்பை உளவியல் வல்லுநர் ஒருவர் நடத்துவர். ஒருவரை மட்டுமே அவர் சந்தித்து பேசுவார். அவருக்காக ஒதுக்கும் நேரம் ஒரு மணிநேரம்.

நோயாளி தனக்கு வரும் கனவுகளைப் பற்றி சொல்லவேண்டும். இதன் விளைவாக, அவர் மனதில் உள்ள எண்ணங்களை உளவியலாளர் குறிப்புகள் எடுத்துக்கொள்வார். கனவுகள் உணர்ச்சிகளின் குறியீடு என்பது ஃபிராய்டின் கோட்பாடுகளில் ஒன்று. நோயாளி நாற்காலியில் அமர்ந்து நேராக அமர்ந்து உளவியலாளரின் கண்களைப் பார்த்து பேசுவது முக்கியம். இல்லையெனில் அவர் பொய் சொல்கிறார் என்று பொருள்.

நோயாளி தன் மனதில் உள்ளவற்றை எந்த தடையுமில்லாமல் நேரடியாக பேசுவது முக்கியம். அப்போதுதான் அவரின் பிரச்னையை உளவியலாளர் அறிய முடியும். அவர் சில விஷயங்களை தீவிரமாக மறுத்தும் பேசலாம். இதற்கான காரணங்களை அவர்களே சொல்ல உளவியலாளர்கள் ஊக்குவிக்கின்றனர். அதிர்ச்சிகரமான, அபாயகரமான சம்பங்களை நிகழ்ச்சிகளை ரகசியங்களை நோயாளி உளவியலாளரிடம் சொல்லத் தயங்க கூடாது. உளவியலாளர், கூறுபவரை ஊக்குவித்தபடி அமைதியாக இருப்பது முக்கியம்.

சைக்கோஅனாலிசிஸ்

இம்முறையை சிக்மண்ட் ஃப்ராய்ட் மற்றும் ஜீன் மார்ட்டின் சார்கோட் ஆகிய உளவியலாளர்களும் மேம்படுத்தினர். இந்த தெரபியும் மேற்சொன்ன சைக்கோ டைனமிக் தெரபியும் அடிப்படையில் ஒன்றுபோலத்தான். இரண்டிலும் நோயாளியின் விழிப்புணர்வற்ற, விழிப்பு மனம் ஆகியவற்றோடு கேள்விகள் கேட்டு பேச வைப்பதே நோக்கம். பயம், பதற்றம், உறவுகளில் ஏற்படும் தடுமாற்றம், உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியாத இயல்பு கொண்டவர்களுக்கு சைக்கோ அனாலிசிஸ் தெரபி வழங்கப்படுகிறது. இது பல்லாண்டுகளுக்கு நீளும்.

ஜங்கியன் தெரபி

கார்ல் ஜங்க், ஒரு மனிதரின் ஆளுமை என்பது அவரது மூளையில் தொகுப்பட்ட நினைவுகளில் இருக்கிறது என கூறினார். வெளியுலகிற்கு ஒருவர் வெளிப்படுத்தும் பிம்பம் தனி. அதற்கு பின்னால் உள்ள நமக்கு தெரியாத அவரது சிறுவயது நினைவுகள், உணர்வுகளை அவர் நிழல் என்று குறித்தார். ஆணுக்குள் பெண்ணும், பெண்ணுக்குள் ஆணும் உண்டு என்பதை சொன்னார்.

இந்த தெரபியை செய்பவர்கள் நோயாளிகள் சொல்லும் கனவுகளை ஆழமாக கவனித்து உள்வாங்குகின்றனர். அதில் அவர்கள் நோயாளிகளின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர்.

செல்ஃப் சைக்காலஜி, ஆப்ஜெக்ட் ரிலேஷன்

இந்த தெரபி நோயாளியின் குழந்தைப்பருவம், சிறுவராக இருந்தபோது நடந்த சம்பவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவற்றை தெரிந்துகொண்டு நடப்பு நிகழ்வுகளில் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு, தடுமாற்றங்கள், குறைபாடுகளை ஆராய்கின்றனர்.

டிரான்ஸாக்ஷனல் அனாலிசிஸ்

ஒருவரின் ஆளுமையில் மூன்று ஈகோ நிலைகள் உள்ளன. அவை பேரன்ட், அடல்ட், சைல்ட். இந்நிலைகளை கவனம் குவித்து ஆராய்வதே இந்த தெரபியின் நோக்கம். அடல்ட் என்ற நிலை நிகழ்காலம் பற்றியது. இம்மூன்று நிலைகளிலும் இருந்து ஒருவரின் நிலைமை, எண்ணங்கள் ஆகியவற்றை உளவியலாளர் அறிகிறார்.

காக்னிட்டிவ் பிஹேபியரல் தெரபி

ஒருவரின் மனதில் தோன்றும் எண்ணங்கள் எப்படி அவரின் ஆளுமையை பாதிக்கிறது என்பதை அறியவே இந்த தெரபி பயன்படுகிறது. இத்தெரபியில் உளவியல் வல்லுநர், ஒருவர் உலகைப் பார்க்கும் பார்வையை மாற்றி அமைக்கிறார். இதனால் அவரின் எதிர்வினைகளும், இயல்பும், பழக்க வழக்கங்களும் மாறுகின்றன.

அ, ஆ என இருவரின் குணங்களையும் ஒரு செயலை எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்று பார்ப்போம்.

அ நபர், நம்பிக்கையுள்ளவர். தன்னுடைய பிற செயல்களில் நம்பிக்கை உள்ளவர். சமூக உறவுகளை வலுவாக கொண்டவர்.

ஆ நபர், நம்பிக்கையில்லாதவர். தயக்கமும், கூச்சமும் கொண்டவர். தன்னம்பிக்கை குறைந்தவர். குறைந்த சமூக உறவு கொண்டவர்.

இவர்கள் இருவருக்கும் பொதுவான நபர் இவர்களை விருந்து ஒன்றை நடத்துகிறார். அந்த தகவல் இவர்களுக்கு தெரிந்தாலும் அவர் நேரடியாக அழைப்பிதழை இவர்கள் இருவருக்கும் வழங்கவில்லை. இவர்கள் இருவரும் என்னவாக இருக்கும் என்று பார்ப்போம்.

தவறுதலாக அழைப்பிதழ் விடுபட்டு போயிருக்கலாம் என்று நினைப்பார்கள்.

விருந்து என்பது குறிப்பிட்ட நபர்கள் மட்டும் கலந்துகொள்வதாக இருக்க வாய்ப்புள்ளது என புரிந்துகொள்வார்கள்.

விழா முடிவடைந்தபிறகு, குறிப்பிட்ட நண்பரை சந்திப்பார்கள். எப்போதும் போல இயல்பாக பேசுவார்கள். விழா பற்றி சாதாரணமாக கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.

 

தெரிந்து தனக்கு அழைப்பிதழை நண்பர் வழங்கவில்லை என்று புரிந்துகொள்வார்கள். சமூக உறவுகள் குறைவு என்பதால் தன்னை நண்பர் புறக்கணித்துள்ளார் என்று புரிந்துகொண்டு கோபப்படுவார்கள். தன்னால் தனது நண்பருக்கு எந்த பயனும் இல்லை என்று இப்படி நடந்துகொண்டுள்ளதாக நினைத்துக்கொள்வார்கள்.  

அழைப்பிதழை அனுப்ப மறந்த நண்பரை முடிந்தவரை சந்திக்க மறுப்பார்கள். சந்திப்பு நடந்தாலும அது இருவருக்கும் வேதனையைத் தருவதாகவே இருக்கும்.

பேசும்போது நண்பரை தீவிரமாக திட்டுவார்கள். கடிந்துகொள்வார்கள். நட்பே இல்லை என முறித்துக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

தெரபி

சுற்றியுள்ள சூழல்களை நிதானமாக ஆராயவும், கவனமாக முடிவெடுக்கவும் ஆலோசனை தருவார்கள்.

தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுவார்கள்.

விழிப்புணர்வோடு சிக்கலான சூழல்களை அணுகுவதற்கான அறிவுரைகளையும் பயிற்சிகளையும் வழங்குவார்கள்.

நடத்தை தெரபி

ஒருவரிடம் உள்ள எதிர்மறையான நடத்தையை அகற்றிவிட்டு ஆக்கப்பூர்வமான நடத்தைகளை மாற்ற உளவியலாளர் இந்த தெரபியை அளிக்கிறார். குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தை எப்படி கற்றுக்கொடுப்பது.? நல்ல பழக்கத்தை செய்தால் பரிசு கொடுப்பது. தவறான விஷயங்களை செய்தால் தண்டனை வ.ழங்குவது. இதன் மூலம் எளிதாக குழந்தை நல்ல செயல்பாடுகளை வேகமாக கற்றுக்கொள்ளும். எளிதில் மறக்காது.

காக்னிட்டிவ் தெரபி

இந்த தெரபி பாதிப்பு ஏற்படுத்தும் ஆளுமை பிரச்னைகளை சரிப்படுத்துவதற்கான உருவானது. 1960ஆம் ஆண்டு ஆரோன் பெக் என்ற உளவியலாளர் உருவாக்கினார்.

மனதில் எதிர்மறையான கருத்துகளை நினைக்கும்போது அவை உடலிலும் எதிரொலிக்கிறது. இது ஒருவரின் ஆளுமையை செயல்பாட்டை பாதிக்கிறது. இதை சரி செய்ய இத்தெரபி மூலம் முயல்கின்றனர். ஒருவர் தன்னுடைய எதிர்மறை எண்ணங்களை கண்டுபிடிக்க அவரின் டயரியை புரட்டிப்பார்த்தால் போதும். இதனை உளவியல் வல்லுநர்கள் அறிந்து அவற்றை எப்படி மாற்றிக்கொள்ள முடியும் என்று பரிந்துரைகளை வழங்குகின்றனர். பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றுக்கான சிகிச்சை முறை இது.

சிபிடி தெரபி

மேற்சொன்ன இரு பிரச்னைகளையும் அறிகுறிகளையும் இணைத்து அதனை தீர்க்கும் தெரபி. இதில் ஒருவரின் சிந்தனை, நடத்தை, எண்ணங்கள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.

 

 

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்