மதூக மலர் பரப்பும் காதலின் பித்தேறிய மணம் - கன்னி நிலம் - ஜெயமோகன்



கன்னிநிலம் by Jeyamohan


கன்னி நிலம் - ஜெயமோகன்


மணிப்பூரில் ராணுவத்தில் பணிபுரியும் நெல்லையப்பனுக்குக்கும், அங்காமி இனக்குழுவைச் சேர்ந்த பெண் ஜ்வாலாமுகிக்கும் இடையிலான காதல் உறவைப் பற்றி பித்தேறிய மொழியில் பேசும் நாவல்தான் கன்னி நிலம்.


நாவலின் அனைத்து சம்பவங்களும் நடைபெறுவது காடு என்பதால், ஜெயமோகன் உற்சாகவே இருக்கிறார். பொதுவாகவே காடு பற்றிய எழுதும்போது, அவரின் எழுத்துக்ளுக்கு சிறகு முளைக்கும். இதில் முழுக்க அவரது எழுத்துக்கான கொண்டாட்டம் தெரிகிறது.


கதை, தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்கச் செல்லும்போது தொடங்கிவிடுகிறது. அங்குள்ள பழங்குடிமக்கள் ஆயுதங்களுடன் இருந்தால், அப்போதே சுட்டுக்கொல்ல அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால், கையில் கத்தியுடன் உளவறிய வந்த பெண்ணை லெப்டினென்ட் நெல்லையப்பன் கொல்லத் தயங்குகிறான். காரணம் என்னவென்றால், பெண் என்பதும், தேவையின்றி யாரையும் கொல்லக்கூடாது என்பதுதான் அவனது எண்ணமுமாக இருக்கிறது. அதற்கான பலனை அங்கிருந்து செல்லும்போதே அவனது படைப்பிரிவு அனுபவிக்கிறது. ஏறத்தாழ பாதிப்பேர் இறக்கின்றனர். கேப்டன் உட்பட மூன்றுபேர். அடுத்து நடக்கும் விசாரணையும் அந்த இளம்பெண் தன் பெயரைக் கூட சொல்லுவதில்லை. ஆனால் தீவிரவாதக் குழுவில் முக்கியமான பெண் என்று மட்டும் தெரிந்துகொள்கிறான் நெல்லையப்பன். விசாரணையின் போது அந்த பர்மிய சாயல் கொண்ட பிடிப்பட்ட பெண்ணும், நெல்லையப்பனும் ஒருவரையொருவர் அகத்தில் அறிகின்றனர்.


தீவிரவாதிகளின் தாக்குதலில் அங்குள்ள முக்கியமான வீரர்களும் இறந்துபோகின்றன்றர். மிஞ்சுபவர்களும் தப்பித்து ஓடிவிடுகின்றனர். ஆனால் நெல்லையப்பன் முதலில் பெண்ணினாலும், பின்னர் அவளது குழுவாலும் கடுமையாக காயம்படுகிறார். இருந்தாலும் அந்தப்பெண்ணை விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்று அவருக்கு மேலிட ஆணை வர, கூட்டிக்கொண்டு காட்டுக்கு ஓடிவிடுகிறார். அங்குதான் கதையின் முக்கியமான பகுதிகளை நடைபெறுகின்றன.


நெல்லையப்பனின் உள்ளே இருக்கும் மனது, ஜ்வாலாவை தொடக்கத்திலிருந்தே விரும்பத் தொடங்குகிறது. அதற்கு காரணம், அவளின் செய்கை போராளியுடையதாக இருந்தாலும் அதில் திடமாக இல்லை என்பதை உணர்வது என்றுதான் படுகிறது. இதுபற்றிய விவரங்கள் பின்னர், காடுகளில் இருவரும் அலைந்து திரியும்போது உரையாடலில் இவை வெளிப்படுகின்றன. ஜ்வாலா முதலில் நெல்லையப்பை வெறுத்தாலும், அவரது நண்பர் மூலம் தன்னைக் காதலிப்பதை உணர்ந்து காயமுற்றவனை காப்பாற்றுகிறாள். அவர் ஆறு வழியாக செல்ல வழிகாட்டுகிறாள். இறுதியில் நெல்லையப்பன் தன் படையை அடைந்தாரா, ஜ்வாலா தன் குழுவினரிடம் சென்று சேர்ந்தாளா, இருவரும் தம் காதலை ஒருவருக்கொருவர் சொன்னார்களா என்பதை பித்தேறும் மொழியில் ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.



மனிதர்கள் அதிகாரத்திற்காக செய்யும் செயல்கள் அனைத்தும் இந்நாவலில் பொருளற்றதாக கூறப்படுகின்றன. பெண்கள் நாட்டிற்காக என்று சொல்லி போராளியாக போராடி இறப்பது, குறிப்பிட்ட நிலத்தை ஆக்கிரமிக்க அங்குள்ளவர்களைப் பற்றி தெரியாமல் உள்ளே வந்து போரிடுவது, வாழ்வதற்காக இறப்பதற்கும் தயாராவது என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குகிற நாவல்.


கதை முழுவதும் மதூக மலர் வீசுகிறது. காதலை வெளிப்படுத்துவதாக அனைத்து இடங்களிலும் இந்த மலரின் மணம் வீசுகிறது. காதலை உணரும் இடங்களிலும், காதல் பிரிவிலும், சித்திரவதை இடங்களிலும், பின்னர் சேரும்போதும் மதூக மலர் வருகிறது. வாசிப்பவர்களையும் களிப்பூட்டி பித்தேற வைக்கிறது. கன்னி நிலத்தில் பூத்த மதூக மலரின் மணம் மறக்க முடியாத இருக்கிறது. வாழ்வதற்கான விருப்பத்தை குறியீடாக காட்டுகிறது இந்த மலர். 259 பக்க நூலை ஒரே மூச்சில் படித்துவிடலாம். ஜெயமோகனின் எழுத்து நூலை கீழே வைக்க முடியாதபடி செய்கிறது.


கருத்துகள்