நகைச்சுவை, பொய்யை பிரித்தறிய முடியாத ஆட்டிசக் குறைபாடு!


Happy, Boy, Autism, Kid, Childhood, Summer, Outdoor

ஏஎஸ்டி - ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்

இக்குறைபாட்டுக்கு தீர்வு கிடையாது. வாழ்க்கை முழுவதும் பிறருடன் தகவல் தொடர்பு செய்வதில் தடுமாறியபடி இருப்பார்கள். சமூகத்தோடு இணைந்து செல்வது இவர்களுக்கு கடினம்.

குழந்தைகளுக்கு ஏதேனும் வார்த்தைகளைச் சொல்லுவதில் கடினம், வயது வந்தவர்களுக்கு சமூகத்தோடு இணைந்து செல்வதில் தடுமாற்றம் என்றால் அவர்களுக்கு ஏஎஸ்டி பிரச்னை இருக்கிறது என புரிந்துகொள்ளலாம்.

குழந்தைகள் சில வார்த்தைகள், சொற்களை மட்டுமே திரும்ப திரும்பச் சொல்லுவார்கள். உடல் இயக்க முறையில் தடுமாற்றம் இருக்கும். கண்களைப் பார்த்து பேச மாட்டார்கள். தூக்க குறைபாடுகள் ஆகியவை பொதுவான அறிகுறிகள். இதில் நிலைமை தீவிரமடைந்தால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள்.

பெற்றோருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பது, மரபணு சார்ந்த சிக்கல், திட்டமிட்ட காலத்திற்கு முன்பே குழந்தை பிறப்பது ஆகிய காரணங்களால் குழந்தைகளுக்கு ஆட்டிச பாதிப்பு ஏற்படலாம். ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் எழுத்தாளர் பாலபாரதி தன்முனைப்பு குறைபாடு என இதனை தன்னுடைய நூலில் கூறுகிறார். ஆனால் இங்கு அனைவருக்கும் புரியவேண்டும் என்பதற்காக ஆட்டிசம் என்றே குறிப்பிடுகிறோம். தசைச்சிதைவு நோய், டவுண் சிண்ட்ரோம், செரிப்ரல் பால்சி ஆகியவை ஆட்டிசத்தோடு தொடர்புடைய குறைபாடுகளாகும்.

அறிகுறிகள்

மொழியை தாமதமாகவே கற்கத்தொடங்குவார்கள். அதன் பொருளை உணர்ந்துகொள்வது கடினம். எனவே குறிப்பிட்ட கட்டுரையைப் படித்தால் அதிலுள்ள நகைச்சுவையை இவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

சமூகத்தோடு இணைந்து பழக முடியாது. ஒருவரின் அந்தரங்கம் அவரின் மொழி, உடல்மொழி ஆகியவற்றை இவர்களால் புரிந்துகொள்ள முடியாது. இவர்கள் தனக்குத் தோன்றியதை சொல்லிக்கொண்டிருப்பார்கள் அல்லது பிறர் பேசியதை திரும்ப சொல்லிக்கொண்டிருப்பார்கள். சில உடல் அசைவுகளை திரும்ப திரும்ப சலிப்பேயின்றி செய்வார்கள். அதைப்பற்றிய உணர்வு இவர்களிடம் இருக்காது.

ஒலி இவர்களைக் கட்டுப்படுத்தும். அதிக இரைச்சலான இடங்களைக் கண்டால் பதறி ஓடுவார்கள். உடலின் மோட்டார் அமைப்புகள் சரியாக செயல்படாது என்பதால் இவர்களால் பேனா பிடித்து அழகாக முத்துபோல எல்லாம் எழுத முடியாது. கண்களில் தூசு விழுகிறது என்றால் அதனை முன்கூட்டியே தடுக்கத் தெரியாது.

பிறரின் கோணத்திலிருந்து விஷயங்களை அணுகத் தெரியாது. அதனால் இவர்களிடம் பொய் சொன்னால் கூட அதனை பொய் என வேறுபடுத்தி புரிந்துகொள்ள முடியாது.

ஆட்டிசம் என்ற குறைபாட்டை குணப்படுத்த முடியாது. பல்வேறு தெரபிகளை ஆட்டிச வல்லுநர்கள் நடத்துகின்றனர். இதற்கான கட்டணம் என்பது அதிகம் என்றாலும் குழந்தைகளை இவ்வுலகில் சமூகத்தோடு இணைந்து வாழ வைக்க இவற்றை நீங்கள் செய்துதான் ஆகவேண்டும்.

இவற்றை முழுமையாக அறிய எழுத்தாளர், ஆட்டிச செயல்பாட்டாளர் பாலபாரதி, அவரது மனைவி லஷ்மி ஆகியோர் எழுதிய நூல்கள் உதவும்.

 

கருத்துகள்