துரோக நண்பன், உடலைக் கொடுத்து புகழ்பெற துடிக்கும் காதலி! - அவள் எழுதிய பெஸ்ட்செல்லர்



அவள் எழுதிய பெஸ்ட்செல்லர் | Buy Tamil ...
காமன்ஃபோல்க்ஸ்



அவள் எழுதிய பெஸ்ட் செல்லர்

ரவி சுப்ரமணியன்

தமிழில் - மஹாரதி

வெஸ்ட்லேண்ட்


வங்கித்துறையில் பணியாற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆதித்யா கபூர், தன் வாசகி ஒருத்தியைக் காதலிக்கிறார். சூழ்ச்சியான அந்த காதலால் அவர் படும் பாடுகள்தான் கதை.  நூலில் தலைப்புதான் சரியில்லை. ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பு சரளமாக எளிதில் தடுமாற்றமின்றி படிக்கும் வகையில் மஹாரதி மொழிபெயர்த்திருக்கிறார். முக்கியமான அம்சம் இது.

வங்கியாளர் ஒருவர் புகழ் வெளிச்சத்தில் இருக்கிறார். அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியொன்றில் அவர் பேசும் பேச்சை பேத்தல் என்று வாசகி ஒருவர் ஊதாசீனப்படுத்தி பேசுகிறார். இதனால் எழுத்தாளர் ஆதித்யா கோபம் கொள்கிறார். தன்னுடைய நூல்களை படிக்குமாறு கேட்டுக்கொண்டு அங்கிருந்து சமாளித்து பேசி வெளியேறுகிறார். பின்னர் அடுத்த நாள் காலையில் அவருக்கு மின்னஞ்சல் வருகிறது. அதில் தங்களுடைய நாவல் பிரமாதமாக இருக்கிறது. நான் தங்களை அவமதித்து பேசியது தவறு என கூறுகிறாள் ஸ்ரேயா என்ற அந்த பெண். அவள் நடந்துகொண்ட முறையால் கோபத்தில் இருக்கும் நிர்வாகத்தையும் இந்த மின்னஞ்சலையும் அதற்கு பதிலிட்ட ஆதித்யாவின் மின்னஞ்சலையும் வைத்து சமாளிக்கிறாள் ஸ்ரேயா.

அவளுக்கு ஆதித்யாவின் எழுத்தை விட அவருக்கு கிடைக்கும் தனித்தன்மை, புகழ் மீது பேராசை ஏற்பட ஆதித்யாவை பின்தொடருகிறாள். அதன் விளைவாக ஆதித்யா ஸ்ரேயாவின் மீது கவனம் கொள்கிறார். அவளின் காதலும், புகழ்ச்சியான வார்தைகளும் இளமையான நெகிழ்ந்த உடலும் அவருக்கு தேவையாக இருக்கிறது. திருமணமாகி, அம்பானியின் கல்வி நிறுவனத்தில் பணி செய்யும் மனைவி, ஆறு வயது மகன் என்று நிம்மதியான வாழ்க்கை வாழும் ஆதித்யா இவற்றை விட்டுக்கொடுக்க மறுக்கிறார். அதேசமயம் இளமையான காதலியையும் விட்டுக்கொடுக்க மறுக்கிறார். இதன் விளைவாக அவரது குடும்ப வாழ்க்கை, எழுத்து வாழ்க்கை இரண்டும் பேரழிவைச் சந்திக்கிறது.இறுதியில்தான் தன்னை திட்டமிட்டு வீழ்த்தியது கூடவே இருந்த நட்பும், காதலும் என உணர்ந்துகொள்கிறார். ஆனால் அதற்குள் வாழ்க்கை அவரது கையை விட்டு போய்விட்டது. தொழில்ரீதியாகவும் அவரை வேலையை விட்டு விலக்கும் சூழலை அவரது இளமையான காதலி ஏற்படுத்துகிறாள். இவற்றை எப்படி சமாளித்து ஆதித்யா மீண்டெழுந்தார் என்பதுதான் கதை.

நாவலின் காதல் அத்தியாயங்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. வங்கி நடைமுறைகள், கேம்பஸ் இன்டர்வியூ பகுதிகள் சற்று பகடியாக உள்ளன. இறுதிப்பகுதியான  ஆதித்யா வாசகர்களிடம் உரையாற்றும் பகுதி கண்களில் நீரைப் பெருக்கும் வண்ணம் உணர்ச்சிகரமாக எழுதப்பட்டுள்ளது. சதியைக் கண்டுபிடிக்கும் இடமும் நன்றாக எழுதப்பட்டுள்ளது.

சதியைக் கண்டுபிடித்து ஆதித்யா பேசும் இடங்களை சற்று சுருக்கியிருக்கலாம்.

வங்கித்துறை சார்ந்த புதினம் என்ற வகையில் தமிழில் நன்றாகவே மொழிபெயர்த்திருக்கிறார்கள். சினிமாவாக எடுக்கப்படவிருக்கிறது என்பதை அட்டையில் போடவேண்டுமா என்று தெரியவில்லை. கதை நாவலாக நன்றாக இருக்கிறது.

கோமாளிமேடை டீம்








கருத்துகள்