சொந்தக்கரங்களால் சொர்க்கம் தொட்டவர்! - ஒரு துளி மணலில் ஓர் உலகு!







Pair, Man, Woman, Love, Romance, Lovers, Sex, Naked
pixabay



அன்பு நண்பர் ராமுவுக்கு, வணக்கம். வேலை ஒழிந்த நேரத்தில் கடிதத்தை படிப்பீர்கள் என நம்புகிறேன். தங்குவதற்கான இடத்தை, தலைக்கு மேல் கூரையை தேடுவது என்பது பெரிய வேலை. மனச்சோர்வை எளிதில் உண்டாக்குவதும் கூட


நானும் இன்னொரு ந்ண்பரும் தங்குவதற்கான இடம் தேடினோம். ஆனால் அவர் திருமணம் செய்து மனைவியுடன் தங்குவதற்கான இடத்தை தேடுகிறார் என பிறகே தெரிந்தார். சில இடங்களில் வேகமாக பதில் சொல்லவும், சில கருத்துகளை அவர் வெளிப்படையாக சொல்லுவார் என அவரை கூட்டிப்போனது பெரும் குழப்பமாகி போனது. நான் மேன்ஷனில் இடம் தேடினால், அவர் வீடு தேடும் முயற்சியில் இருந்தார். அப்படி இருப்பது பிரச்னையில்லை. மயிலாப்பூரில் வீடு தேடும் அவரது எண்ணமும், அதற்கான பட்ஜெட்டும் எனக்கு பயங்கர குழப்பத்தைத் தந்தது.

ஒரு கட்டத்தில் நான் அவரிடம் நீங்கள் எனக்கு உதவி செய்வீர்கள் என்றுதான் கூட்டி வந்தேன். உங்களுக்கு மனைவியுடன் தங்குவதற்கான வீடு வேண்டுமென்றால் தனியாக தேடிக்கொள்ளலாம். அதற்கு தனியாக ஆட்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி முண்டக்கண்ணி அம்மன் கோவில் ஆர்ச் அருகிலுள்ள சேட்டா ஜெகன் அண்ணாவிடம் அழைத்துச் சென்றேன். ஆனால் அதற்கான பட்ஜெட்டில் நண்பர் நம்பிக்கையின்றி இருந்தார். பிறகு அவர் வாயாலேயே நான் கோயம்பேடு அருகே வீடு பார்த்துக்கொள்கிறேன் என்றார்.


அப்பாடா என்று இருந்தது. நான் தங்கியுள்ள அறையில் இருப்பவர்கள் அந்த அறைக்கு சொந்தக்காரர்கள் போல தெரிந்தார்கள். குறுக்கும் மறுக்குமாக கட்டில்களை போட்டு இருந்தார்கள். எப்படி அதில் தங்கியிருந்து நம் வேலைகளை செய்வது என்று எனக்கு ஏதும் புரியவில்லை. வேறுவழியில்லை சமாளிக்க வேண்டியதுதான். விழித்துக்கொண்டே கனவு காண்பது போல இருக்கும் நிலை இனி கைகூடாது. அறையில் எப்போது மின் விளக்கு எரிவது என்பது கூட நம் கட்டுப்பாட்டில் இல்லை. அதற்கு அறை உறுப்பினர்களின் ஒப்புதல் பெறவேண்டும். குளியறையில் இருந்தால் கூட உள்ளே வருபவர்களுக்கு உடனே கதவு நீக்கிவிடவேண்டும் என்பது எரிச்சலாக இருக்கிறது.


அலுவலகத்தில் ஆசிரியரின் முயற்சியால் சனிக்கிழமை விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பல்வேறு துறையினர் அதனை மறைமுகமாக எதிர்க்கின்றனர். இதனால் அந்த விடுமுறை நடவடிக்கை உடனே வாபஸ் பெறப்பட்டுவிட்டது.


எனக்கு உங்களை போன் செய்து அழைப்பதை விட கடிதங்கள் எழுவது சரியாகப்படுகிறது. அவசரத்திற்கு போன் செய்கிறேன். படித்தால் படிக்கலாம். இல்லையெனில் எழுத்தாளர் ஸ்ரீராம் போல சிரித்துக்கொண்டே கிழித்து எறிந்துவிட்டு அடுத்த சோலியைப் பார்க்கலாம். அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம் என்ற நூலைப் படித்து வருகிறேன்.


நன்றி!


சந்திப்போம்.


.அன்பரசு

5.2.2018

**************


அன்புத்தோழர் ராமுவுக்கு, அன்பரசு எழுதுவது.


நலமாக இருக்கிறீர்களா?


இரவுகளில் சொந்தக்கரங்களில் சொர்க்கம் தொட்டு மீளும் உங்களுக்கு இத்தனை பிரச்னைகளா? நீங்கள் போனில் அழைத்துப் பேசியதைத் தான் சொல்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விவகாரத்தை சிறித நாட்கள் கழித்து பெண்களின் பெயர்களை மாற்றி சொன்னால் அப்படியே புத்தம் புதிதாக இருக்கிறது என்று கேட்டு நம்பிவிடுவேன். அதுதான் என்னுடைய ஞாபகசக்தியின் சக்தி.


அந்தரங்கமான காதல் சிக்கல்களுக்கு ரேடியோவில் வரும் ரகசிய ஸ்னேகிதி தீர்வு சொல்லலாம். மற்றவர்களுடைய காதல் கதைகளை கேட்டு வரும் என்னிடம் என்ன தீர்வு இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்.


உங்களது ஒப்பீனியன் மாறுவது சரி. ஆனால் லட்சியத்தை சீசனுக்கு சீசன் மாற்றினால் எப்படி? எனக்கு நீங்கள் சொல்லும் காதல் ரகசியங்களை, சாகசங்களை நீங்கள் முழுக்க பேசி முடித்தபிறகு அரைமணி நேரத்திற்கு பிறகுதான் புரிகிறது. உங்களின் தடுமாற்றத்தை பெண்கள் எப்படி புரிந்துகொள்வார்களோ?


ஆனால் தங்கள் வாழ்க்கையை சரியாக தேர்ந்தெடுப்பதில் அவர்கள் புத்திசாலிகள்தான். கைத்தொழில் மன்னராக உங்களின் சாகசங்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடியது அல்ல. இன்று நான் மயிலாப்பூரிலுள்ள கிரசன்ட் ஹாஸ்டலில் முறையாக இணைந்து விட்டேன். பணம் இன்னும் பாக்கி 5,500 ரூபாய் கட்டவேண்டியிருக்கிறது. விடுதி அறையில் புது இடம் என்பதாலோ என்னவோ தூக்கம் வரவில்லை. முடிந்தளவு அறையில் இல்லாமல் இருப்பது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அறையில் உள்ளவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். நானும் இன்னொருவரும் மட்டுமே வேலைக்குச் செல்கிறோம். இரவில் வேலைபார்த்துவிட்டு பகலில் தூங்குபவர் ஒருவர் இருக்கிறார். அதிகாலை எழுந்து படிப்பது என்பது வேலைக்கு ஆகாது போல. இங்கு எழுவது, படிப்பது ஆகியவற்றுக்கான வாய்ப்பு குறைவு. ஆழமான இருளில் அறை வௌவால்கள் துயில் கொள்ளும் குகை போல தோற்றமளிக்கிறது.


நன்றி!


சந்திப்போம்!


அன்பரசு

5.2.2018




கருத்துகள்