உடலையும் உள்ளத்தையும் பாதிக்கும் தூக்க குறைபாட்டு நோய்கள் ஓர் பார்வை!


Break, Sleeping, Cute, Girl, Baby, Portraits
pixabay

தூக்க குறைபாடு நோய்கள்

நமது உடல் சூரிய வெளிச்சத்தின் அடிப்படையில் இயங்குகிறது. இதன் அடிப்படையில் உணவு உண்பதை நாம அமைத்துக்கொண்டுள்ளோம். காலையில் உற்சாக வேலை செய்யத் தொடங்குகிறோம். மாலையில் சூரியன் மறையும்போது உடல், மனம் இரண்டுமே ஓய்வுக்கு ஏங்கும் நிலையில் இருக்கும். பிறகு இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுகிறோம். இந்த ஓய்வு செயல்பாடு தற்போது மாறி வருகிறது. காரணம், பல்வேறு ஐ.டி சார்ந்த வேலைகளால் பகலில் தூங்கிவிட்டு இரவில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்ய கிளம்பி வருகின்றனர். இதன்விளைவாக முதலில் உடல் அளவிலும் பின்னர் உள்ள அளவிலும் பல்வேறு அழுத்தங்களை சந்திக்கே நேரிடுகிறது. உடலில் தூக்க அளவு, ஆரோக்கியம் ஆகியவற்றை உயிரியல் கடிகாரம் கண்காணிக்கிறது. இந்த அமைப்பு குழம்பும்போது நம் வாழ்க்கை இடியாப்ப சிக்கலில் சிக்குகிறது.

இதனால் அலுவலக பணியில் கவனமின்மை, யோசிக்க முடியாமை, தெளிவான முடிவுகளை எடுக்க திணறுவது, பணியின்போது தூங்குவது, சோர்வாகவே நாள் முழுவதும் இருப்பது, மலம் கழிப்பதில் சிக்கல், பசி மந்தம் ஆகிய பிரச்னைகள் உருவாகின்றன. பின்னாளில், இப்பிரச்னை காரணமாக நோய்கள் உருவாகின்றன. அமெரிக்காவில் வாழும் மக்களில் 70 மில்லியன் பேர் (1 மில்லியன் = பத்து லட்சம்) உறக்க குறைபாடு பிரச்னையில் சிக்கியுள்ளனர்.

இன்சோம்னியா

இந்த உறக்க குறைபாடு பிரச்னை இப்போது இளைஞர்களுக்கும் தொற்றி வருகிறது. இவர்களுக்கு இரவில் தூக்கம் வருவது கடினம். தூங்காமல் ஆனால் உற்சாகமாகவே இருப்பார்கள். இந்த நிலை சில நாட்கள், வாரம், மாதம் என நீண்டு ஆண்டுகணக்காக செல்வதும் உண்டு.

வாழ்க்கையில் நேரும் அனுபவங்களின் காரணமாக கவலை, கடன்தொல்லை, மது, போதைப்பொருட்கள் பழக்கம் உறக்க குறைபாட்டுக்கு முக்கியமான காரணம். இதன் விளைவாக, இவர்களால் வேகமாக யோசிக்க முடியாது. செய்ல்பட முடியாது. பகல் பொழுதில் சோர்வாக இருப்பார்கள். மன அழுத்தம் கூடும்போது இன்சோம்னியாவின் இன்னும் தீவிரமாகும். பொதுவாக வயதானவர்கள் இதுபோல இரவுகளில் தூக்கம் குறைந்து விழித்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் இன்று பெருகிய இணைய வசதிகளால் பலரும் உறங்கச்செல்லும் நேரமும் அதிகாலையாக மாறி வருகிறது. நாட்பட செல்லும்போது தூக்கமின்மை இவர்களுக்கு ஏற்படும். இவர்களுக்கு தூக்கம் வரவழைக்க கூடிய உணவுமுறைகளோடு பல்வேறு பயிற்சிகளையும் உளவில் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பாராசோம்னியா

வாழ்க்கையில் நடைபெறும் பல்வேறு இன்பகரமான, துக்ககரமான சம்பவங்களின் தாக்கத்தால் தூக்கம் தடைபடுவது. இவர்கள் ஏதாவது பயணத்தில், பணிபுரியும்போது தூங்கி வழிவார்கள். அப்போது அப்படி தூங்கினார்களா என்று கேட்டால் எனக்கு அதுபற்றி தெரியவில்லை என்பார்கள்.

இவர்களுக்கு இரவில் தூக்கத்தில் நடப்பது, பேசுவது, சாப்பிடுவது ஆகிய பிரச்னைகள் இருக்கும். ஆனால் காலையில் கேட்டால் அதுபற்றி தங்களுக்குத் தெரியாது என்பார்கள். சோர்வாக இருப்பார்கள். பல்வேறு விஷயங்களை மறந்துவிடுவார்கள். இக்குறைபாடு தீவிரமாகும் வன்முறையில் இறங்கவும் வாய்ப்புள்ளது. தூக்கத்தில் நடக்கும் பிரச்னை உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் வீட்டை மாற்றி அமைப்பது முக்கியம். மெல்ல பல்வேறு பயிற்சிகளின் மூலமே இக்குறைபாட்டை சரி செய்ய முடியும்.

நார்கோலெப்ஸி

மூளையால் தூக்கத்தையும் விழிப்பையும் கட்டுப்படுத்த முடியாதபோது ஏற்படும் உறக்க குறைபாட்டு இது. இதனால் இரவில் விழித்திருப்பவர்கள், அலுவலகத்தில் கையைக் குவித்து சுகமாக தூங்கிக்கொண்டிருப்பார்கள். இதற்கு முக்கியக்காரணம், மரபணுவும் கூடத்தான். தூக்கத்தை ஏற்படுத்தும் மெலடோனின் சுரப்பு குறைவாக சுரந்தால் தூக்கம் வராது.

இக்குறைபாடு உள்ளவர்கள் தூங்குமூஞ்சியாகவே திரிவார்கள். பணிகளில் ஆர்வம் இருக்காது. தசைகளின் மீதான கட்டுப்பாடு குறையும், சிரிப்பது, அழுவது போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது குறைவாக இருக்கும். தைராய்டு சுரப்பு பாதிக்கப்படும். அலுவலக பணி சார்ந்த சிக்கல்கள் ஏற்படும். இதனை சமாளிக்க தினசரி குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச்செல்வதும், சரியான உணவுமுறைகளையும் கடைபிடிப்பது அவசியம்.

ஹைபர்சோம்னியன்ஸ்

இக்குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து பதினெட்டு மணிநேரம் தூங்கினாலும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வரவா என அழைப்பவர்களை கேட்பார்கள். அப்படி ஒரு தூக்கம் தூங்குவார்கள். எழுப்புவது கஷ்டம். இளைஞர்களும், வாலிபர்களும் தற்போது இக்குறைபாட்டுக்கு உள்ளாகி வருகிறார்கள். மரபணு, மது, போதைப்பொருட்கள் பயன்பாடு, மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டி ஆகியவையும் இக்குறைபாட்டை ஊக்குவிக்கின்றன.

மெதுவாக பேசுவார்கள். அதைவிட மெதுவாக யோசிப்பார்கள். இதனால் பல்வேறு அலுவலக, தனி வாழ்க்கை சார்ந்த பிரச்னைகளை சந்திக்க நேரிடும். பல மணி நேரங்கள் தூங்கினாலும் உடலில் புத்துணர்ச்சி இருக்காது. உடலில் வலிமையும் குறையும்.

இக்குறைபாட்டுக்கு தூங்குவதற்கான நேரத்தை திட்டமிட்டு கொடுத்து தூங்கவைத்து அதுபோலவே நடைமுறைப்படுத்துவது பயனளிக்கும். மேலும் தனிநபர்களின் அறிகுறிகளைப் பொறுத்து சிகிச்சையளிப்பதை உளவியல் வல்லுநர்கள் பின்பற்றுகின்றனர்.

 

 

 

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்