ஆளுமை குறைபாடுகளின் வகைகள், பிரிவுகள், அறிகுறிகள் - ஓர் அலசல்


People, Portrait, Man, Male, Black, Smiling, Happy
pixabay



ஆளுமை குறைபாடுகள்

தனிநபர் நடந்துகொள்ளும் முறைகள், அவர்களின் பழக்க வழக்கங்கள், சமூகத்தோடு இணைந்து செயல்படும் செயல்பாடுகள் வேறுபட்டு இருக்கும்.

ஆளுமை குறைபாடு இருப்பவர்கள் தனக்கு அப்படி ஒரு பிரச்னை இருப்பதாகவே நம்ப மாட்டார்கள். இவர்களை பிறரால் புரிந்துகொள்ள முடியாது. எந்த மாதிரி யோசிப்பார்கள், பேசுவார்கள் என்று யாராலும் கூறமுடியாது. காரணம். அவர்களாலேயே இதனை முடிவு செய்ய முடியாத பரிதாப நிலை இருக்கும். இவர்கள் யாருடனும் நட்பு, காதல் கொள்ளாமலிருக்க மாட்டார்கள். ஆனால் அந்த உறவு என்பது புரிந்துகொள்ள முடியாததாக இருக்கும். சமூகத்தோடு எதையும் இணைந்து செய்ய மாட்டார்கள்.

இவர்களிடன் கேள்விகளைக் கேட்டு ஆளுமை குறைபாடுகளை அறிவதோடு, இவர்களின் குடும்ப வரலாற்றையும் உளவியல் வல்லுநர்களிடம் கூறவேண்டும். அப்போதுதான் சிகிச்சையை உறுதியாக செய்ய முடியும். குடும்பத்தில் யாரேனும் தீவிர மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றுக்கு சிகிச்சை எடுத்தால், அது பிறருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆளுமை குறைபாடு என்பதில் ஏறத்தாழ 10 வகைகள் உள்ளன.

பாரனாய்டு பிடி

இந்த வகை குறைபாடு உள்ளவர்கள் யாரையும் நம்ப மாட்டார்கள். மிகவும் சந்தேகத்திற்குரியவராக நடந்துகொள்வார்கள்.

மற்றவர்கள் தன்னிடம் பொய் சொல்லுகிறார்கள் என்று நம்புவார்கள். பிறர் சொல்லும் தகவல்களை எக்ஸ்ட்ராவாக நான்கைந்து போட்டு நங்கூரம் போல கேட்பவர்களிடம் சொல்லி மாட்டிவிடுவார்கள்.

சொல்லிலும் செய்கையிலும் ஏராளமான அர்த்தங்களை மறைத்து வைத்திருப்பார்கள்.

தங்களின்  மனைவி, பெண்தோழி, நண்பர்கள் என பலரிடமும் உரசி சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். பின்னணியில் ஒருவரை பயன்படுத்தி ஏதாவது செய்கிறாரா என்ற சந்தேகத்தை இவர்களின் செயல்பாடுகள் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

ஸிஸாய்டு பிடி

இந்த வகை குறைபாடு உடையவர்கள் அனைத்து இடங்களிலும் சில்க் சட்டை போட்டவர்களைப் போலவே தனியாக தெரிவார்கள். செயல்பாடுகளிலும், குணங்களிலும் அப்படித்தான்.

குழுவாக செய்ய சொல்லும் செயல்பாடுகளைக் கூட தனியாக செய்கிறேனே என முயல்வார்கள்.

சமூகம் சார்ந்த எந்த பிரச்னைகளிலும் பங்கேற்க மாட்டார்கள்.

நட்பு பாலுறவு சார்ந உறவுகளில் கொஞ்சமே கொஞ்சம் ஆர்வம் கொண்டிருப்பார்கள். இவர்களின் நட்பு வட்டம் மிக சிறியது.

பெண்களை விட ஆண்களின் அண்மையையே விரும்புவார்கள்.

இதனை ஸிசோபெரெனியாவோடு தொடர்புபடுத்தினாலும், இவர்களின் நிலை அப்படிப்பட்டதல்ல.

ஸிசோடைபல் பிடி

பழகிய சமூக நிகழ்ச்சிகளுக்கு கூட தீவிரமான பதற்றத்தோடுதான் வந்து கலந்துகொள்வார்கள். பிறரோடு பேசுவது மிகவும் குறைவாகவே இருக்கும்.

சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு நாம் எதிர்பார்க்க முடியாத பதிலை, கருத்தை உருவாக்கி திகைக்க வைப்பார்கள்.

நிறைய கற்பனையான கருத்துகளை உருவாக்கிக்கொள்வார்கள். தினத்தந்தி படித்தால் கூட அதன் தலைப்பில், நிமல் அல்லது மதியின் கார்ட்டூனில் தனக்கு ஏதோ ரகசிய செய்தி இருக்கிறது என நினைத்துக்கொண்டு அதனை நம்புவார்கள்.

டெலிபதி, ஈஎஸ்பி ஆகிய சக்திகள் இருப்பதாகவும். அதனால் பக்கத்து வீட்டு ஆன்ட்டி முதல் அலுவலக நணபர்கள் வரை வசீகரித்து விட முடியும் என நம்புவார்கள்.

சிலசமயம் இவர்கள் பேசுவது சூப்பர் பாஸ்ட் ரயில் பெட்டிகளை விட நீளமாக இருக்கும்.  பேசும்போதே விஷயங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். எதிரே இருப்பவர்களுக்கு தலைசுற்றிப்போகும்.

இதற்கு சிகிச்சை என்பது நோயாளிக்கு மருத்துவர் மீது நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே நடைபெறும். இல்லையெனில் இடையில் எழுந்து ஓடிவிட வாய்ப்பு உள்ளது. எனவே அவரின் நம்பிக்கை பெற்று பின்னர், அவரின் சிறுவயது நினைவுகள், ஏற்பட்ட மன அழுத்தம் பிரச்னைகளைப் பற்றி பேசலாம். ஆனால் சிகிச்சைக்கான மருந்துகள், தெரபிகள் என நீண்டகாலம் மன வலிமையுடன் தொடர்வது அவசியம்.

மேலே நாம் பார்த்தது அ வகை ஆளுமை குறைபாடு ஆகும்.

அடுத்து ஆ வகை.

இதில் ஆளுமை குறைபாட்டிற்கு உட்பட்டவரால் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவே முடியாது. கோபம் வந்தால் நாக்கை துறுத்தி விஜயகாந்த் போல கண்கள் சிவந்து கொந்தளித்து விடுவார். இதன் காரணத்தால் இவர்களைக் கையாள்வது கடினம். எப்போது எரிமலை வெடிக்குமோ என அலுவலக நண்பர்கள் முதல் மனைவி வரை திகிலிலேயே இருப்பார்கள்.

உணர்ச்சிகளின் எல்லை

எளிதில் உடைந்துவிடும் மனம் கொண்டவர்கள்.

ஜாடைப் பேச்சு அல்லது நேரடியாக எப்படி பேசினாலும் உணர்ச்சி கொந்தளிப்புடன் எழுந்து தாண்டவம் ஆடிவிடுவார்கள். தனிப்பட்ட சந்திப்பு, அலுவலக சந்திப்பு என்ற இடத்திலும் எரிமலை போலத்தான் இருப்பார்கள். இதனால் இவர்களால் உறவுகளை பாதுகாக்க முடியாது.

தனியாக இருக்கிறோம். ஆதரவற்று இருக்கிறோம் என்ற எண்ணங்கள் எழும்போது மனப் பதற்றம் கொள்வார்கள்.

கோபத்தில் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளவும் தயங்க மாட்டார்கள். தற்கொலை செய்துகொள்ளவும் முயல்வார்கள்.

கவன ஈர்ப்பு குறைபாடு

கல்யாணமோ இழவோ அனைத்திலும் கவனம் தன்னை நோக்கியோ இருக்கவேண்டும் என நினைப்பார்கள். அதற்கான விஷயங்களை செய்துகொண்டே இருப்பார்கள்.

உடை, குணம் என அனைத்துமே பிறரைக் கவரவேண்டும் என்பதாகவே இருக்கும். இந்த விஷயங்களைப் பற்றி வெட்கமே பட மாட்டார்கள்.

தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் நிகழ்ச்சியையும் மெலோடிராமாவாக நடத்திக் காட்டுவார்கள். உணர்ச்சிகரமானவர்கள்.

பிறரிடம் தீவிரமான செல்வாக்கு, உறவு வைத்திருப்பதாக பிறரை நம்பச் செய்ய தலையால் தண்ணீர் குடிப்பார்கள்.

சுயவிருப்ப குறைபாடு

இந்த குறைபாடு கொண்டவர்கள் எந்த இடத்திலும் தன்னை, தன் பிம்பத்தை முக்கியமாக நினைப்பார்கள். அதைப் பராமரிக்க யாரையும் பலி கொடுப்பார்கள். தன் மேலதிகாரிகள் கூட தன் திறமைகள் பற்றி பேசவேண்டும் என எதிர்பார்பார்கள்.

அதிகாரம், வெற்றி, மரியாதை என அனைத்தை பற்றியும் ஏராளமான கற்பனைகள் இவர்களுக்கு உண்டு. அதனை இயக்குநர் விஷ்ணுவர்த்தன் தன் பட பாடல்களை ஃபேன்டசியாக உருவாக்கி, அதை நினைத்து பார்த்து சந்தோஷப்படுவார்கள்.  

மேலதிகாரியோ, கீழ்நிலை ஊழியரோ தனக்கு தேவையான விஷயங்களை செய்து தரவேண்டும் என்றால் தொந்தரவு கொடுக்க தயங்கவே மாட்டார்கள். சிறப்பு மரியாதை, செயல்பாடுகளை தனக்காக சிலர் செய்து தரவேண்டும் என வெட்கத்தை விட்டு கேட்பார்கள்.

பிறரின் உணர்ச்சிகள் அவர்களின் தேவைகள் பற்றிய அணுவளவும் கவலைப்படவே மாட்டார்கள். மற்றவர்கள் தன்னைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள் என்று நினைப்பார்கள்.

சமூகவிலகல் குறைபாடு

பிறர் சொல்லும் விதிகளை எப்போதுமே கடைபிடிக்கமாட்டார்கள். அனைத்து விஷயங்களையும் அடிக்கடி உடைத்துக்கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் தன்னைத் தவிர பிறரை ஆபத்தானவர்கள், கிண்டல் செய்பவர்கள் என்றே நினைப்பார்கள். எனவே அவர்களை ஆவேசமாக திட்டுவதோடு தாக்கவும் முயல்வார்கள்.

திருடுவது, பொய் சொல்வது பிறரை ஏமாற்றுவது என்பதை எளிமையாக எப்போதும் செய்து வருவார்கள்.

தாங்கள் செய்யும் விஷயங்கள், செயல்பாடுகளின் பின்விளைவுகளைப் பற்றி அணுவளவும் கவலைப்படவே மாட்டார்கள்.

ஒருவரின் இளம் வயது, நடுத்தரவயதில் இக்குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சைக்கோபதி

வணிகத்துறையில் சிலரை வேலையை விட்டு நீக்குவது, ஒருவரை பொதுவெளியில் தேவையின்றி அவமானப்படுத்துவது, திருடுவது, இடையறாது பொய் சொல்லுவது, உணர்ச்சிகளை மையமாக கொண்டு பலரையும் மிரட்டி வேலை வாங்குவது ஆகிய விஷயங்களை இவர்கள் செய்வார்கள். எந்த உணர்ச்சியும் காட்டாமல் தன்னுடைய காரியங்களை சாதித்துக்கொள்வார்கள். இவர்களுக்கு ஏற்பட்ட்டிருக்கும் மனநல பாதிப்பை யார் சொன்னாலும் ஏற்க மாட்டார்கள். இதுபற்றி மருத்துவர் ராபர்ட் ஹரே, ஓர் பட்டியலை தயாரித்துள்ளார். அதிலுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுவதற்கு கிடைக்கும் மதிப்பெண்களைப் பொறுத்து அவர்களின் தன்மையை தீர்மானிக்க முடியும். இந்த குறைபாட்டை பொறுத்தவரையில் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இக்குறைபாடுகளுக்கு நோயாளிகளின் நண்பர்கள், பெற்றோர்களின் உதவியும் ஆதரவும் தேவை. இவை தவிர நோயாளியின் நம்பிக்கையை உளவியல் மருத்துவர் பெற்றால் மட்டுமே சிகிச்சை தொடர்ந்து நடைபெற வாய்ப்புள்ளது.

இ வகை

இது முழுக்க கண்ணீரும் கவலையும் சேர்ந்த குறைபாட்டு பிரிவு, இவர்களின் செயல்பாடு குணம் என அனைத்திலும் கவலையும் பதற்றமும் நிறைந்து இருக்கும்.

சார்ந்திருக்கும் குறைபாடு

இவர்களால் தங்களால் எதையும் செய்ய முடியும் என நம்ப மாட்டார்கள். பிறரைச் சார்ந்திருப்பார்கள்.

இவர்களால் எதையும் மறுத்தே பேச மாட்டார்கள். மறுத்தால் பிறர் எப்படி நடந்துகொள்வார்களோ என பயப்படுவார்கள்.

விமர்சனத்தைக் கண்டு பயப்படுவார்கள். தன் மீதான நம்பிக்கையும் இருக்காது. இவர்களை துன்புறுத்தினால் கேலி செய்தால் கூட பொறுத்துக்கொள்வார்கள். எதையும் எதிர்க்க மாட்டார்கள்.

அவர்கள் நம்பும் உறவு தோற்றுப்போனால் உடனடியாக மாற்று உறவை தயார் செய்வார்கள். எதிலும் தோற்றுப்போகும் பயம் இருப்பதால், ஒரு செயல்பாட்டை இவர்களாக தொடங்குவது கடினம்.

தவிர்க்கும் குறைபாடு

பிறரின் விமர்சனம், புறக்கணிப்பு ஆகியவற்றை நினைத்து பயப்படுவார்கள்.இதனால் புதிய உறவுகளை இவர்களால் உருவாக்கிக்கொள்ள முடியாது.

எந்த உறவிலும் மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், கவனமாகவும் இருப்பார்கள்.

தங்களின் உணர்வுகளை யாரிடமும் பகிர மாட்டார்கள். இதனால் பிறர் இவர்களோடு பழகுவது கடினம்.

பிறர் தன்னை அவமானப்படுத்துவார்கள், கிண்டல் செய்வார்கள் என்று நினைத்துக்கொண்டே இருப்பார்கள். இதனால் பல்வேறு சமூக நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொள்ள  மாட்டார்கள்.

விதிகளின் படி வாழ்க்கை

இக்ககுறைபாடு கொண்டவர்கள் தங்களுக்கென உள்ள விதிகளின்படிதான் வாழ்வார்கள். அதனை மீறவே மாட்டார்கள்.

எப்போதும் வேலை சார்ந்தே யோசிப்பார்கள். நண்பர்கள் கூப்பிட்டாலும் எங்கேயும் செல்லமாட்டார்கள். இதனால் தனிப்பட்ட உறவுகள் என்பதே இருக்காது.,

அவர்களின் விதிகள், டெட்லைன் சார்ந்தே அனைத்தையும் யோசிப்பார்கள். மனிதர்களை பொருட்களுக்கும், விதிகளுக்குமே நிறைய மதிப்பு கொடுப்பார்கள்.

இவர்களுக்கான சிகிச்சைக்கு தெரபிகள், பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்வது, ஊக்கப்படுத்துவது, மனப்பதற்றத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

 

 

 

 

 

 

 

கருத்துகள்