மனநல மருத்துவமனையில் நடைபெறும் மருத்துவச்சோதனை ஊழல்! - மாதா - தெலுங்கு



மாதா - தெலுங்கு - 2020
இயக்கம் ஸ்ரீவித்யா பசவா
கதை, வசனம் - பிரசாந்த் சாகர் அட்லூரி
ஒளிப்பதிவு அபிராஜ் நாயர்

இசை - நரேஷ் குமரன்


கல்லூரி ஒன்றில் உளவியல் பேராசிரியர் வகுப்பு நடத்துகிறார். உலகிலேயே ஆபத்தான ஆயுதம் எது என்று கேட்கிறார். மனித மனம் என்று சொல்லி உதாரணங்களை சொல்லும்போது கதை தொடங்குகிறது. நிகழ்காலத்தில் நடக்கும் கதை, முன்னர் நடந்த கதை என முன்பின்னாக பயணிக்கிறது படம். 

பாரில் ஆண் ஒருவரோடு போட்டிபோட்டு நிஷா என்ற பெண் மது அருந்திக்கொண்டிருக்கிறாள். அவள்தான் போட்டியில் ஜெயிப்பாள் என்று சொல்லி 50 ஆயிரம் ரூபாய் பெட் கட்டுகிறான் ஓர் அந்நியன். நிஷா 13 ஷாட்ஸ் அடித்தும் போதை தாக்காமல் இருப்பதை வியக்கிறான். தனது பெயர் அர்ஜூன் என்றும், தன்னை புகைப்படக்காரன் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறான். அப்புறமென்ன, அந்த உறவு பூப்பூத்து காயாகி பழமாகிறது. ஆனால் அதற்குள் அர்ஜூனின் கதாபாத்திரம் நெருடலாக மாறுகிறது. தனது அறை ஒன்றில் நிஷா பற்றிய அத்தனை விஷயங்களையும் சேகரித்து வைத்திருக்கிறான். காதல் பழமாகும்போது, அவளது வீட்டிற்குள்ளும் கேமராக்களை பதுக்குகிறான். எதற்கு பிட்டு படம் ஹோம்மேடாக எடுக்கப் போகிறார்களோ எனும் போது காதலர்களுக்குள் முதல் சண்டை வருகிறது. அதற்குப்பிறகு அர்ஜூன் காணாமல் போகிறான். நிஷாவுக்கு வித்தியாசமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. வேலையில் கவனம் இல்லை. திடீரென அவளது நெருங்கிய தோழி அவளுக்கு ஸிசோபெரேனியா என்று சொல்லி மனநல மருத்துவமனை ஆட்களிடம் பிடித்துக்கொடுக்கிறாள். உண்மையில் அர்ஜூன் யார், ஆதரவற்றோர் காப்பகத்தில் வளரும் நிஷாவுக்கு உண்மையிலேயே மனநல வியாதியா? அர்ஜூன் நிஷாவின் அறை முழுக்க கேமராக்கள் வைப்பது ஏன் என அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்தால் மாதா படம் முடிந்துவிடும்.


ஆஹா


மருத்துவத்துறை சார்ந்த திரில்லர். படம் வேகமாக நகர்வது நிஷா மனநல மருத்துவமனைக்கு செல்லும் வரையில்தான். அதற்குப்பிறகு படம் படுத்துவிடுகிறது. நாயகி திரிஷ்னா முகர்ஜிதான் படத்தை தாங்குகிறார். ராகுல் வெங்கட் நெகட்டிவ் கேரக்டர் போல தோன்றும் ரொம்ப நல்லவன் பாத்திரமாக இறுதியில் மாறுகிறார். அசத்தலாக நடித்து மனதை கவருபவர் அனிஷ் கே குருவில்லாதான். அதுவும் எதற்காக நிஷாவை பயன்படுத்துகிறார்கள் என்று சொல்வது சூப்பர் ட்விஸ்ட்.


ஐயையோ


மனநல மருத்துவமனை அத்தியாயங்கள் அதிக நேரம் நீள்கிறது. இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் வேகம் இல்லை.


எடுத்துக்கொண்ட கதை, திரைக்கதை ஆகியவற்றால் மாதா நிமிர்ந்து நிற்கிறாள்.


கோமாளிமேடை டீம்



கருத்துகள்