கொரோனா பாதிப்பால் சூழல் மேம்பட்டுள்ளதா?




கொரோனா பாதிப்பும் சூழலும்


பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலாகியிருக்கிறது. இந்தநேரத்தில் சூழலியலாளர்கள் சும்மாயிருக்காமல் பறவைகள், காற்று மாசுபாடு குறைவு, இயற்கை தன் இயல்பு நிலைக்கு திரும்புகிறது என்று பல்வேறு செய்திகளை வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் வைரசால் ஏற்பட்டுள்ள இந்த நிலை பேரிடர் நிலை. இதில் இயற்கை தன் சுயமான நிலைக்கு திரும்புகிறது என்று எப்படி கூற முடியும்?


உலகிலேயே அதிக காற்று மாசுபாடு கொண்ட சீனாவில் நிலைமை மாறியுள்ளதை சுட்டிக்காட்டி சூழலியல் பாடங்களை பலரும் போதிக்கத் தொடங்கியுள்ளனர். உண்மையில் இது வளர்ச்சிதானா? இயற்கை பேரிடர் போன்ற நிலையை நீங்கள் இயற்கைக்கு சிறப்பான சூழல் என்று சொல்ல முடியாது. இதனை சூழல்சார்ந்த கொள்கையாகவும் வகைப்படுத்த முடியாது என்கிறார் லண்டன் பொருளாதார பள்ளியைச்சேர்ந்த பேராசிரியர் சாம் ஃபான்காசர்.


சீனாவில் காற்றிலுள்ள நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு 30 சதவீதமும், இத்தாலியில் 50 சதவீதமும் குறைந்துள்ளதாக ஐரோப்பாவைச்சேர்ந்த காம்ஸ் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் பெர்லின் சுவர் இடிப்பின்போது, அங்குள்ள நிறுவனங்கள் பசுமை சூழலைக்காக்கும் வகையில் தொழில்நுட்பங்களை நிறுவத் தொடங்கிவிட்டனர்.


சூழல் மாற்றங்களை நாம் முன்னதாகவே அளவிடுவது தவறானது. காரணம், இப்போது பெருமளவு பொதுப்போக்குவரத்து தடைபட்டுள்ளது. பலரும் காரில் பயணிக்கின்றனர். அதோடு பசுமை சூழல் சார்ந்த முதலீட்டிலும் தனியார் கார் தயாரிப்பாளர்களின் பங்களிப்பு உலகளவில் குறைவாகவே இருக்கிறது. இதில் அவர்கள் முதலீடு செய்தால், ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைகளை முற்றாக மாற்றவேண்டி வரும் என்பதால் பலரும் புதிய தொழில்நுட்பங்களை அமல்படுத்த முன்வருவதில்லை என்கிறது ஐரோப்பிய சூழல் அமைப்பு.


தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பால் உலகளவில் வாகனப்போக்குவரத்து, விமானசேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. உடனே சிலர் கார்பன் அளவு குறைந்துவிடும், பூமி இயல்பாகிவிடும் என நினைப்பார்கள். வெப்பமயமாதல் காரணமாக உயர்ந்து வரும் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் குறைக்க கார்பன் அளவு 7.6 சதவீதம் அளவுக்கு குறையவேண்டும். தற்காலிகமாக குறைந்துள்ள அளவு 0.5 முதல் 2.2 சதவீதம் வரைதான் என்கிறது நார்வேயைச் சேர்ந்த உலக சூழல் அமைப்பு.


உலகளவில் பெட்ரோலிய நிறுவனங்கள் 131 பில்லியன் அளவுக்கான திட்டங்களை செயல்படுத்த இருந்தன. ஆனால் எதிர்பாராத வைரஸ் பாதிப்பால் அவற்றை ஒத்திவைத்துவிட்டன. மேலும் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 30 டாலர்கள் அளவுக்கு சரியும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. எண்ணெய் நிறுவனங்கள் இக்காலத்தைப் பயன்படுத்தி கரிம எரிபொருட்களை விட்டுவிட்டு பசுமை சார்ந்த தொழில்நுட்பத்திற்கு மாறலாம். இதனால் கார்பன் அளவு உயராது என்கிறார் ஐ.நாவின் சூழல் அமைப்புத் தலைவர் கிறிஸ்டியானா ஃபிகரஸ். வைரஸ் பாதிப்பு தற்காலிகமானதுதான். இச்சூழலிலேயே அடுத்து செய்யவேண்டிய பசுமை திட்டங்களை பற்றி யோசிப்பது வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் சூழல் மாநாட்டில் சரியான முடிவுகளூக்கு நகர்ந்து அவற்றை அறிவிப்பதற்கு சரியாக இருக்கும்.


நன்றி - நியூ சயின்டிஸ்ட் ஆடம் வாகன் 4.4.2020



கருத்துகள்