சிலை உடைப்புகளை மக்கள்தான் தடுக்க வேண்டும்! - ஒரு துளி மணலில் ஓர் உலகு!



Letter, Girl, Read, Painting, Cartoon, Black And White
pixabay



அன்புள்ள தோழர் ராமமுர்த்திக்கு, வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்?

ராமராஜ்ய யாத்திரைக்கு நிதி வசூலித்து வருகிறார்கள். உங்களுக்கு நிதி தரும் எண்ணம் இருக்கிறதா? புதிய இந்தியாவை இந்த நிதியில்தான் எழுப்ப போகிறார்கள் போல. இந்து தமிழ் நாளிதழின் காமதேனு வார இதழ் திங்கள்தோறும் வெளியாகிறது. படித்துப்பார்த்தேன். அதன் எழுத்துரு படிக்க இணக்கமாக இல்லை. அதன் பகுதிகளும், செய்திகளும் இலக்கிய காலாண்டிதழ் போன்று இருக்கிறது. மிகவும் கடினமான மொழியைக் கையாள்கிறார்கள்.

இதழில் மாநில சுய உரிமைக்குரல் எழுப்பும் சித்தராமையா கட்டுரை நன்றாக இருக்கிறது. அதை அட்டைப்படமாக போடாமால் அனுஷ்காவை அட்டைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். பிரியாணிதான் செய்கிறார்கள். ஆனால் நிறைய செஃப்கள் செய்வார்கள் போல. அகோரமாக இருக்கிறது. எங்கள் வார இதழின் பொறுப்பாசிரியர் நா. கதிர்வேலனிடம், எடிட்டர். இதழ் எப்படி என்று கேட்டார். அதற்கு, ஒரே வரியில் இறந்தே பிறந்த குழந்தை என்று சொன்னது என்னை அதிர வைத்துவிட்டது. இலக்கிய வாதிகள் மட்டுமே இப்படி நறுக்கென்ற லொள்ளு பேச முடியும்.

இந்துவின் வார இதழ் பொங்கல் மலர் போல இருப்பதுதான் பிரசனை என்று நினைக்கிறேன். பிற விஷயங்களை மாற்றிக்கொள்ள இன்னும் நேரம் இருக்கிறது. நீங்கள் வேறென்ன படித்தீர்கள்? நான் தற்போது காந்தியார் சாந்தியடைய என்ற நூலை படித்து வருகிறேன். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது காந்தி, ஜின்னா, நேரு ஆகியோர் என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்று பேசுகிறது இந்த நூல். வரலாற்று நூல்களின் கட்டுரைகளை கருத்தூன்றி படிக்கத் தொடங்கியுள்ளேன்.


நன்றி!


சந்திப்போம்!


.அன்பரசு


23.3.2028

********************************************


அன்புத்தோழர் ராமுவுக்கு, வணக்கம். நலமாக இருக்க இறையை வேண்டுகிறேன்.

பெரியாரின் பேச்சுகளை கேட்டவர்களுக்கு, இன்று மாற்றுக்குரல்கள் எழுவது ஆச்சரியமாக இருக்கலாம். தமிழகத்தில் நிறைய இடங்களில் சிலை உடைப்புகள் நடந்து வருகின்றன. சுயலாபத்திற்கான இங்குள்ளவர்கள் அவர்களுக்கு உதவியவர்களே காட்டிக்கொடுப்பவர்களாக தெரிகிறார்கள்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின்பால் ஆர்வம் கொண்ட வல்லபாய் படேல், தடை விதிக்கப்பட அமைப்பை மீண்டெழ உதவினார். இதற்காக மக்கள் பணத்தை செலவிட்டு சிலை எழுப்பி உள்ளது மத்திய அரசு. ஏழைகளுக்கு சேரவேண்டிய உணவு தானியத்தை எலிகள் கொறித்துக்கொண்டிருக்க, அவர்களுக்கு உணவிட அரசுக்கு எண்ணமில்லை. மருத்துவ வசதிகளை செய்ய எண்ணமிக்கை. ஆனால் சுற்றுலாவுக்கான அடையாளமாக சிலை உருவாக்குகிறது. இதற்கான வேலைகளை சீன நிறுவனத்திற்கு அளித்துள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்கு இதை விட சிறந்த உதாரணத்தை நாம் பார்க்கவே முடியாது அல்லவா?

இன்றும் நாம் செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்க, தியரியை உருப்போட்டுக கொண்டிருந்தால் எப்படி என்று புரியவில்லை. சிலைகளை தனிமனித வழிபாட்டை ஊக்குவிக்கும் அடையாளமாக நான் பார்க்கிறேன். மக்கள் செயல்களுக்கான விளைவுகளை உணர்வதில்லை. சிலை உடைப்பு போன்ற விஷயங்கள் நம் சிந்தனையை முக்கியமான பிரச்னைகளிலிருந்து திசை திருப்பவது போல படுகிறது. இதைப்பற்றி பேசீனால் நமக்கு இட ஒதுக்கீடு மறந்துவிடும். அதைப்பற்றி பேசும்போது இன்னொரு பிர்ச்னையை கிளப்பி இதனை மறக்க வைப்பார்கள்.

இடதுசாரிகள் புள்ளிவிவரங்களை முன்வைக்க, வலதுசாரிகள் எளிமையாக அவர்களை முட்டாள்கள், லூசு என சொன்னால் பேச்சு வன்முறை பக்கம் திரும்பிவிடும். அப்புறமென்ன யாருடைய கருத்து முக்கியம் என்ன அடித்து காண்பிக்க வேண்டி வன்முறையைத் தொடங்குவார்கள்.

தான், தன் குடும்பம், தன் வாழ்க்கை என்று ஒருவன் வாழ்ந்தால் அது நாட்டிற்கு பெரும் சாபக்கேடாக அமையும் என்றே நினைக்கிறேன்.

இதைத்தவிர சொல்ல என்னிடம் வேறு சொற்கள் இல்லை.


நன்றி!

.அன்பரசு


*****************************************************************

தோழர் ராமமூர்த்திக்கு, வணக்கம்.


இன்று நாங்கள் தங்கியுள்ள அறையை காலி செய்யச் சொன்னார்கள். ஹாஸ்டலை நிர்வாகம் செய்பவர் ஏழை முஸ்லீம். இதனால் அவர் எங்களிடம் காலி செய்ய முடியாது என்று மறுப்பு சொல்லுங்கள் என அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தனர். மில்லினிய குழந்தைகள் எதற்கும் மறுப்பே சொல்வதில்லை. அப்படியா? அடுத்த ஏற்பாடு என்ன என்று அடுத்து கேட்டு அப்படியே ராயப்பேட்டைக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். எனக்கு தோன்றிய விஷயம், காலி செய்து அட்வான்ஸ் வாங்கி மயிலாப்பூரிலேயே வேறு ஹாஸ்டலில் சேர வேண்டும் என்பதுதான்.


காலி செய்ய சொல்லி சமரசம் செய்ய மூவர் ஹாஸ்டலுக்கு வந்து பேசினார்கள். அவர்களுடைய எண்ணம் ஒன்றுதான். மாணவர்களை அவர்களின் வாடகைக் காசுடன் அப்படியே புது இடத்திற்கு மாற்றவேண்டும். முடிந்தவரை மாணவர்களை வெளியே விடக்கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள். ஏறத்தாழ 38 பேர் அப்படியே ராயப்பேட்டைக்கு செல்வதாக சொல்லி விட்டனர். அறைகளில் இருந்த செட்டப்புகளை உடைத்து பிரிக்கத் தொடங்கிவிட்டனர். நான் இந்த விடுதிக்கு வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகியிருக்கிறது.

எங்கள் வார இதழுக்கு கிடைக்கும் விஷயங்கள் அனைத்தும் இரண்டாம், மூன்றாம் தரமாகவே இருக்கின்றன. எனக்கு சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுத வாய்ப்பு தந்திருக்கின்றனர். கிடைத்த இடத்தில் என்ன செய்ய முடியுமோ அதனை செய்து வருகிறேன். மற்றபடி பீச்சுக்கு சென்ற நாயகி, அவரின் நாய்க்குட்டிக்கு வைத்த பெயர் என்று சமூகத்திற்கு தேவைப்படும் விஷயங்களை நிறைத்து 144 பக்கங்களை நிரப்புகின்றனர். நல்ல திறமையான லே -அவுட் கலைஞர்கள்தான், பணியாளர்கள்தான். ஆனால் அவர்களின் திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்படியும் சம்பளம் அளிப்பதில்லை. எல்லோரும் தீவிரமான புலம்பல்களோடு பணிகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

வாசகர்கள் காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கான விஷயங்களை பத்திரிகையில் எழுதவேண்டும். வரும் தமிழ்ப்புத்தாண்டு வந்தால் சன்டிவிக்கு 25 ஆவது ஆண்டு பிறந்த தினம். விமரிசையாக கொண்டாடுவார்கள். பணியாளர்களுக்கு அதனால் கிஞ்சித்தும் பிரயோஜனம் கிடையாது. குறிப்பாக அதன் நாளிதழ் பிரிவில் இருப்பவர்களுக்கு.

வேறுபணிகளுக்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளேன். பார்ப்போம்.

நன்றி!

சந்திப்போம்!

.அன்பரசு

*******************************************************************


(அலைபேசி வழியாக)


அன்பரசு வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

வேலை பல்வேறு தவறான தகவல்களால் நிரப்பப்பட்டுள்ளது. இதனால் அவற்றை சரிசெய்து களமதிப்பீடுகள் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. இதற்காக ஹீரோ வண்டி ஒன்றை வாங்கியுள்ளேன். இதில்தான் இனி களமதிப்பீடு செய்வதற்கு செல்லவேண்டும். திருப்பூர் மாவட்ட அலுவலகத்திற்கும் எளிதாக சென்று வர முடியும். வண்டிக்கு மாத தவணை கட்டிக்கொண்டிருக்கிறேன்.

காமதேனு இதழ் பற்றி கூறியிருந்தீர்கள். இத்தனை வார இதழ் இருக்கும்போது கேட்டதெல்லாம் தரும் என்று இதழை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் வாசகர்கள் நினைத்த விஷயங்கள் இருக்குமா என்று தெரியவில்லை. எனக்கு அவர்களின் கருத்தியலில் உடன்பாடு கிடையாது. அனேகமாக நீங்கள் சொல்வதைப் பார்த்தால் காபி டேபிள் புக் போல இருக்கும் என்று நினைக்கிறேன். காசிருக்கிறது பல்வேறு சோதனை முயற்சிகளை செய்யலாம். தவறில்லை.

சிலை என்பது தனிநபர் வழிபாட்டிற்கானதாக மாறிவிட்டது என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் கூறும் கருத்தை நான் மறுக்கிறேன். அதாவது, சிலைகள் தேவையில்லை என்பதை. இன்று லெனின் சிலை இருக்கிறது. அது சிலை மட்டுமல்ல, அவர் கம்யூனிச கொள்கைகளை தனது அரசு மூலம் செயல்படுத்திக் காட்டினார். அதனால் பயன் பெற்றவர்கள், அவரது ஆட்சி மூலம் சுகத்தை அனுபவித்த மக்கள் அவரது சிலையை உருவாக்கி ஏதாவதொரு சதுக்கத்தில் வைக்கின்றனர். இதன் அர்த்தம் என்ன? அடுத்து வரும் தலைமுறையினர் அதனை பார்த்து அவர் யார்? என்ன செய்தார்? என்பதை கேட்டு புரிந்துகொள்வார்கள். அவர்களுக்கு குறிப்பிட்ட நாளில் மரியாதை செய்வதும் உண்டு. சிலைகளே வைக்காமல் இருந்தால் அவர்களை நாம் எப்படி நினைவுகூர்வது? பாடநூல்களில் உள்ள பாடங்கள் மாற்றப்படக்கூடியவை. அதிலும் கூட சமுகத்திற்கு உழைத்தவர்களை அதற்கு எதிர் கருத்தியல் கொண்ட கட்சி வரும்போது மாற்றிவிட வாய்ப்பிருக்கிறது.

சிலை உடைப்பு என்றால் அங்குள்ள மக்களுக்கு தெரியாமல் நிகழ வாய்ப்பில்லை. தி.. தொண்டர்கள் என்றில்லை. மக்களே முனைந்து வந்து அந்த பிரிவினைவாத சக்திகளை தடுக்கவேண்டும். அடித்துவிரட்டவேண்டும். அந்த மனோபாவம் வராவிட்டால் விரைவில் தமிழகம் கூட பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற வளர்ச்சி குறைந்த மாநிலமாக மாற வாய்ப்பிருக்கிறது. உங்களுக்காக உழைத்த தலைவர்களின் அடையாளங்களைக் கூட காப்பாற்ற முடியவில்லை என்றால் எப்படி? சிலைகள் வைப்பது எனபது அதிகாரம் சார்ந்தமாக மாறி ஜாதிக் கட்சிகள் முதல் ஊரைக் கொள்ளையடித்தவர்கள் வரை முன்னேறியிருக்கிறது. பிரிட்டிஷ்காரர்களின் காலை நக்கிய சுயநலவாதிகளின் பெயர்கள் இன்று ரயில்வே பெட்டிகளுக்கு வைக்கிறார்கள். அதையெல்லாம் நாம்தான் தட்டிக்கேட்க வேண்டும். காரணம், ரயில்வே தனிப்பட்ட நிறுவனம் அல்ல. மக்களின் பொதுப்பணத்தில் இயங்கும் பொது நிறுவனம். அதைவிடுத்து ஒட்டுமொத்தமாக சிலைகள் கூடாது என்பது பார்ப்பன அதிகாரத்திற்கு பாலீஷ் போடும் பேச்சு போலவே படுகிறது.

உங்களது மனப்போக்கு நிறைய பேரிடம் சேர்ந்து இணங்கி இருப்பது போல படவில்லை. எனவே நீங்கள் தனியாக தங்கும் அறையை தேர்ந்தெடுங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது, பிறருக்கும் நல்லது. எழுத்துக்காரனுக்கு மனதில் எண்ணங்கள் ஊற்றாக பெருகினாலும், அதனை எழுத வெளிப்புற சூழலில் அமைதி தேவை. அங்கேயும் வெள்ளிக்கிழமை சந்தை போல கூட்டம் கும்மினால் மூளையில் ட்ராபிக் ஜாம் ஏற்பட்டுவிடும். கவனமாக இடத்தைத் தேர்ந்தெடுத்து தங்குங்கள். திமுக வரலாறு என்ற நூலைப் படித்து வருகிறேன்.

நன்றி!

.ராமமூர்த்தி

10.4.2018


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்