ராணுவ வீரனின் கடந்த கால நினைவுகளை வைத்து விளையாடும் மருத்துவர்! - பிளட்ஷாட்


பிளட்ஷாட்


எதிர்காலத்தில் ராணுவங்கள் எப்படி யோசிக்கும் என்பதை சொல்லும் சோனி நிறுவனம் தயாரித்துள்ள படம்.


வின் டீசல் தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் . அவர் தலைமையில் தீவிரவாதிகளை கொன்று அமெரிக்கர் ஒருவரைக் காப்பாற்றுகின்றனர். அப்புறம் அவர் தன் நாடு திரும்பி தன் மனைவியோடு ஜல்சா செய்கிறார். பின் வெளிநாட்டிற்கு சென்று அங்கேயும் ஜல்சா 2,3.4 பாகங்களைச் செய்கிறார்கள். அப்போது அங்கு புகும் தீவிரவாதிகள் அவரைத் தாக்கி தூக்கிச்செல்கின்றனர். அவரிடம் குறிப்பிட்ட தகவல்களைக் கேட்கின்றனர். அவர் தெரியவில்லை என மறுக்க அவர் முன்னாலேயே அவரது மனைவியைக் கொல்கின்றனர். பின்னர், வின் டீசலையும் சுட்டுக்கொல்கின்றனர்.


பிறகு தோன்றும் காட்சியில் ஆய்வகம் ஒன்றில் கண்விழிக்கும் வின்டீசலுக்கு மருத்துவர் ஒருவர் அவர் முன்னமே இறந்துபோய்விட்டார். அவரை தங்களது தொழில்நுட்பம் மூலம் பிழைக்க வைத்து இருக்கிறோம் என்று பவ்யமாக பேசுகிறார்கள். அவரது உடலை நானோமைட்ஸ் தொழில்நுட்பம் மூலம் வலிமைப்படுத்தி உள்ளனர். இதனால் அவருக்கு உடலில் காயம் ஆனாலும் வேகமாக ஆறும். துப்பாக்கி தோட்டா துளைத்தாலும், வெடிகுண்டு வெடித்து உடலே தூள் தூளாக சிதறினாலும் சரி. அங்குள்ள பெண் ஒருவரோடு பேசும்போது, அவரது மனைவியை கொலை செய்யும் ஒலித்த பாடல் ஒலிக்க உடனே நினைவுகள் தூண்டப்பட்டு கொலைகாரன் நினைவுக்கு வர கொலைசெய்ய கிளம்புகிறார். அதை டாக்டர் புன்னகையோடு பார்க்கிறார். உண்மையில் வின் டீசல் யார், மருத்துவரின் புன்னகைக்கு காரணம் என்ன? அவர் பேசும்போது குறிப்பாக அந்த பாடல் ஏன் ஒலிக்கிறது? என்ற கேள்விகளுக்கு ரத்தமும், வெடிகுண்டும், துப்பாக்கி குண்டுகளுமாக பதில் சொல்லியிருக்கிறார்கள்.


ஆஹா

வின் டீசல் இந்த வயதிலும் உடம்பை நன்றாக வைத்திருக்கிறார். நினைத்துப் பார்க்க முடியாத கிளைமேக்ஸ் சண்டையில் சாதிக்கிறார். அதிலும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை இந்த வயதில் ஏற்று செய்வது மிக கடினம். அவரின் நினைவுகளை அழித்து இதை செய்கிறார்கள் என புரோகிராமர் வேகன் மூலம் அறிபவர், மருத்துவரை எப்படி வீழ்த்துகிறார் என்பதுதான் இறுதிக்காட்சி.


ஐயையோ


இவ்வளவு சக்தி கொண்ட ஆள், சாதாரண விஞ்ஞானிகளை கொலை செய்ய அனுப்பப்படுவதில் சவால் என்ன இருக்கிறது? நுழையவே கஷ்டமான இடத்தில் சென்று யாரையாவது போட்டுத்தள்ளினால் அதை சாதனையாக சொல்லலாம். மருத்துவர் தனது தொழில் போட்டியாளர்களை ஒழித்துக்கட்ட வின்டீசலை பயன்படுத்துகிறார் என்பது கதையை பலவீனம் ஆக்குகிறது. ஒவ்வொருவராக கொலை செய்ய நினைவை ஒவ்வொரு முறையும் அழிக்காமல், யாரை அழிக்க நினைக்கிறோமோ அவர்களை சுற்றம் சூழ நிற்கவைத்துவிட்டால் வின்டீசல் கொலை சுற்றுலா நடத்திவிட்டு வருவார். நமக்கும் பார்க்க சுவாரசியமாக இருக்கும்.


விடுங்கள். அடுத்த பார்ட்டிற்கான விஷயத்தை கொடுத்துவிட்டார்கள். இன்னும் சண்டைகள், கொலைவேறி தாக்குதல், டெக்னிக் ஆட்கள் வருவார்கள் என நம்பலாம்.


பழிக்குப்பழி


கோமாளிமேடை டீம்


கருத்துகள்