உலகைக் காப்பாற்றும் பொறுப்பு நம் கைகளில்தான் உள்ளது! - கிறிஸ்டியானா, டாம் கார்னாக்

உலகை பத்தே ஆண்டுகளில் காப்பாற்ற முடியும்!

கிறிஸ்டியானா ஃபிகரஸ், முன்னாள் ஐ.நா சூழல் அமைப்புச் செயலர்.

டாம் ரிவெட் கார்னாக் முன்னாள், ஐ.நா அமைப்பின் அரசியல் ஆலோசகர், கொள்கை வகுப்பாளர்.

இவர்கள் இருவரும் குளோபல் ஆப்டிமிஷம் எனும் அமைப்பைத் தொடங்கி சூழல் மேம்பட பாடுபட்டு வருகிறார்கள். கிரேட்டா துன்பெர்க், அல்கோர், டேவிட் அட்டன்பரோ போன்ற புகழ்பெற்ற சூழலியலாளர்களோடு இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் எழுதிய தி ஃப்யூச்சர் வீ சூஸ்: சர்வைவிங் கிளைமேட் கிரிசிஸ் என்ற நூலில், 2050ஆம் ஆண்டு இந்த உலகம் எப்படியிருக்கும் என பல்வேறு காரணிகளை அடுக்கி எழுதியுள்ளனர். அவர்களிடம் பேசினோம்.

பாரிஸ் சூழல் ஒப்பந்தத்தை முன்னுதாரணமாக காட்டியுள்ள நீங்கள், அந்த லட்சியத்தை அடைய தனிமனிதர்கள் உதவ முடியும் என்று கூறியுள்ளீர்கள். எப்படி?

பாரிஸ் ஒப்பந்தப்படி நாம் 2030ஆம் ஆண்டுக்குள் தற்போது வெளியிட்டு வரும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை பாதியாக குறைத்தே ஆகவேண்டும். நம் உலகம் சென்றுகொண்டிருக்கும் நிலையை நாம் புரிந்துகொள்ளவில்லையெனில் அதற்கான பின்விளைவை நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

நாம் செய்யும் வணிக விவகாரங்களை சிறிதும் மாற்றாமல் அப்படியே தொடர்ந்தால் விரைவில் உலகம் முடிவுக்கு வந்துவிடும். இதற்காக அதிகமாக ஒன்றும் செய்யவேண்டியதில்லை. நாம் செய்யும் விஷயங்களை நமக்கும் சூழலுக்கும் பாதிப்பின்றி செய்ய முயன்றாலே போதுமானது.

நூலின் தொடக்கத்தில் உலகம் 2050ஆம் ஆண்டு எப்படியிருக்கும் என்று மோசமான வரைபடத்தை காட்டுகிறீர்கள். உலகம் வெள்ளத்தாலும் பல்வேறு தொற்றுநோய்களாலும், ஊட்டச்சத்துக்குறைவு பிரச்னையாலும் பாதிக்கப்பட்டுள்ளது.. இதை சற்று விளக்க முடியுமா?

நாங்கள் அதில் கூறியுள்ளது எதுவும் தேவையில்லாத அதிகப்படுத்தப்பட்ட பிரச்னையல்ல. அடுத்த முப்பது ஆண்டுகளுக்குள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களை குறைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பிடித்தது என்றால் அது நம்மை பாதிக்காது என்று பிற நாடுகள் விட்டேற்றியாக இருந்துவிட முடியாது. காரணம், இனி வரும் காலங்களில் பல்வேறு இய்ற்கை வள ஆதாரங்களை நாம் பகிர்ந்துகொண்டுதான் வாழப் போகிறாம். அதுதான் எதிர்காலத்தில் நமக்கு இருக்கும் ஒரே வழி. இது எதிர்மறையான கருத்து அல்ல. நேர்மறையான கருத்துதானே? நாங்கள் தனிப்பட்ட மனிதர்கள் யார் மீதும் குற்றஞ்சாட்டவில்லை. ஆனால் நமக்கிருப்பது ஒரு உலகம்தான். அதனைக் காப்பாற்ற இப்போது விழிப்புணர்வாக இல்லையென்றால் பிறகு அதனை காப்பாற்றவே முடியாமல் போய்விடும்.  அதற்கான முதலீடும், தொழில்நுட்பங்களும் நம்மிடம் இப்போது கிடையாது.

அடுத்த பத்தாண்டுகளில் நாம் சரியான முடிவுக்கு வராவிட்டால் அடுத்தடுத்த தலைமுறையினர் சூழல் பிரச்னைகளால் வாழவே சிரமப்படுவார்கள் என்பது உண்மை. நம் கையிலுள்ள பொறுப்பை மறந்துவிட்டு குருடர்கள் போல நாம் நிற்க கூடாது என்றே நான் சொல்ல விரும்புகிறோம்.

சூழல் பற்றிய அழுத்தம் கிரேட்டா துன்பெர்க் போன்றவர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட நாடுகள் பசுமை இல்ல வாயுக்களை குறைத்துக்கொள்ளவில்லையே?

மக்கள் இதுபற்றிய விழிப்புணர்வைப் பெற்றாலும் அரசியல்வாதிகளை எளிதாக சூழல் கொள்கைகளை வகுக்குச் செய்துவிடமுடியாது. இந்த இருவிஷயங்களும் இரு துருவங்களைப் போல பொருந்தாமல்தான் இருக்கின்றன. இதற்கு நாம் தொடர்ச்சியாக சூழல் பற்றிய கவனத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டே இருந்தால்தான் சடக்கென நிலைமையை மாற்ற முடியும். மக்கள்தொகையில் மூன்று முதல் ஐந்து சதவீதம் வரையில் விழிப்புணர்வு பெற்று மக்கள் அமைப்புகளுடன் இணைந்து போராடினால்தான் மாற்றம் சாத்தியம். காலனி ஆட்சியை எப்படி மக்கள் இணைந்து போராடி அகற்றினார்களோ அதைப்போலவே உழைத்தால்தான் மாற்றம் சாத்தியம். கிரேட்டா துன்பெர்க் போன்ற சூழலியலாளர்கள் மக்களை ஒன்றுகூட்டி போராடுவதற்கான உத்வேகத்தை வழங்குகிறார்கள்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், 2017ஆம் ஆண்டு பாரிஸ் சூழல் ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக அமெரிக்காவின் அதிபர் இப்படி பேசுவார் என்று நான் நினைக்கவில்லை. இது பிற நாடுகளுக்கு தவறான முன்னுதாரணமாகிவிட வாய்ப்பு உள்ளது. நடைமுறையில் அமெரிக்க நடப்பு ஆண்டில் நவம்பர் மாதம்தான் சூழல் ஒப்பந்த த்திலிருந்து வெளியேறுகிறது. அப்படி வெளியேறினாலும் கூட அந்நாட்டிலுள்ள நிறுவனங்கள் கார்பனை வெளியிடுவது பற்றி கவனம் செலுத்தும் என்று நினைக்கிறேன். அமெரிக்கா சூழல் ஒப்பந்தத்திலிருந்து

விலகும் முடிவை எடுத்தால் பசுமை சார்ந்த தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வரும் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் போட்டியை அந்நாடு சமாளிப்பது கடினம். இதற்கான போட்டியிலும் அந்நாட்டு நிறுவனங்கள் சந்தைப் பங்களிப்பை இழக்கும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், 2050க்குள் லட்சம் கோடியில் மரங்களை வளர்ப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 அவரின் அறிவிப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது உண்மைதான். லட்சக்கணக்கான மக்களை வைத்து கோடிக்கணக்கான மரங்களை நடுவது நல்ல விஷயம்தான். அதேசமயத்தில் தற்போது பூமியிலுள்ள கார்பனை நாம் உறிஞ்சி மாசுபாட்டை குறைப்பதற்கான செயல்பாடுகளை செய்யவேண்டும். மரங்களை வைத்து கார்பனை உறிஞ்சுவது தொன்மையான முறை, செயல்படுத்த சரியானதும், மலிவானதுமாகும். டிரம்ப் சொன்னபடியே நடந்தால் அதனை பின்பற்றுவது தவறு ஏதுமில்லை.

டாம் நீங்கள் கொஞ்சகாலம் காட்டுக்குள் சென்று துறவு வாழ்க்கையை மேற்கொண்டீர்கள் அல்லவா? கிழக்காசிய காட்டுக்குள் வாழ்ந்த உங்களையும் கிறிஸ்டியானாவையும் ஒன்றிணைத்தது எது?

நம் நோக்கத்தை அடைய தெளிமான மனமும், புத்தியும் அவசியம் என்று பௌத்தம் கூறுகிறது. நான் அதன்படி என் மனதை தெளிவாக்க துறவு வாழ்க்கையை நாடினேன். பாரிஸ் சூழல் ஒப்பந்தம் எளிமையானது. ஆனால் அதனைப் பற்றிய தெளிவில்லாததால் பலரும் இது சாத்தியமில்லை என்று கூக்குரலிட்டு வருகின்றனர். இதற்கு காரணம் மனம், புத்தி இரண்டும் தெளிவில்லாமல் இருப்பதுதான்.

அடுத்து வரவிருக்கும் காலங்களில் மக்கள் செய்யவேண்டிய செயல்பாடாக நீங்கள் கூறவிரும்புவது என்ன?

நம் அடுத்த தலைமுறையினர், நம் செயல்பாடுகளை மகத்தான மாற்றம் என்று பாராட்டவேண்டும். அதற்கான செயல்பாடுகளை நாம் ஒருங்கிணைந்து செய்யவேண்டும். பதிலாக தங்களது பொறுப்பை நம் பெற்றோர் உணரவில்லை என்று நினைக்க கூடாது. இந்த முடிவெடுக்கும் பொறுப்பு நம் பெற்றோருக்கு இல்லை. அடுத்த தலைமுறையினரான நம் பிள்ளைகளுக்கு கூட இல்லை. ஆனால் நம் கையில் அந்த பொறுப்பு உள்ளது. அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

 

நன்றி: நியூ சயின்டிஸ்ட் மார்ச், 2020+

ஆங்கிலத்தில்: ரோவன் ஹூப்பர்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்