நிதி வழங்காமல் செலவுகளைக் குறைக்க இந்திய அரசு வற்புறுத்துகிறது - கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக்
தாமஸ் ஐசக், மாத்ருபூமி |
தாமஸ் ஐசக், கேரள நிதியமைச்சர்
பெருந்தொற்று பாதிப்பால் பொருளாதாரம் நலிந்துள்ளது. இதனை சரிசெய்ய எவ்வளவு காலம் பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்?
நாட்டில் உடனே நிலைமை சீராக வாய்ப்பில்லை. தொழில்துறைகள் இயங்கத் தொடங்கி நிலைமை இயல்புக்கு திரும்ப ஓராண்டு ஆகலாம். எங்கள் கேரள மாநிலத்தில் ஊரங்கு காலத்தில் ஜிஎஸ்டி 50 சதவீதம்தான் வசூலானது. இது மிகவும் குறைவான தொகையாகும். சிறு, குறு தொழில்கள் பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடங்கி காணாமல் போகத் தொடங்கின. பெருந்தொற்று காலத்தில் அவை ஆதார வளங்கள் சரிவர கிடைக்காமல் தங்கள் தொழிலகங்களை மூடத்தொடங்கியுள்ளனர். நினைத்துப் பார்க்க முடியாத பொருளாதார சீர்குலைவு காலம்தான் இது.
மாநிலங்கள் நிதி ஆதாரத்தை பெறுவதற்கான விதிகளை மாற்றிக்கொள்ள மத்திய அரசு உதவ வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளது பற்றி உங்களது கருத்து?
அது சரியானதுதான். மாநிலங்கள் கடன் பெறுவதற்கான வரம்பை மத்திய அரசு உயர்த்தினால் பெருந்தொற்று காலத்தில் பல்வேறு உதவிகளை எளிதாக மக்களுக்கு வழங்க முடியும். பட்ஜெட்டிற்கு முன்னர் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் மத்திய அரசின் நிதி அமைச்சர் அதிகாரிகளோடு சந்தித்து பேசினோம். அதில் மத்திய அரசுக்கு இருந்த பற்றாக்குறை 4 சதவீதமாக இருந்தது. தற்போது ஐந்து சதவீதமாக அதிகரித்துள்ளது.
நாங்கள் நேரடியாக வங்கிகளிடம் மாநில அரசு கடனைப் பெறாமல் ரிசர்வ் வங்கியிடம் பெறுவது பாதுகாப்பானது. சந்தையில் கடனை தருவதை விட அவர்கள் தங்களது பணத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே நினைக்கிறார்கள். அடுத்து, இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான செலவை மத்திய அரசு ஏற்கவேண்டும். ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகையை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கவேண்டும். கடந்த ஏப்ரலில் ஜிஎஸ்டி வரி பெறப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள இழப்பை செஸ் வரித்தொகையில் இருந்து மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். செஸ் வரி விதிப்பு வரம்பை மத்திய அரசு நீட்டித்துக்கொள்ள முடியும். இந்த சிறிய விஷயத்தை கூட மத்திய அரசு யோசிக்காதது ஆச்சரியமாக உள்ளது. பீகார் துணை முதல்வரான சுஷில்குமார் மோடி, நாட்டின் பற்றாக்குறை அளவை அதிகரித்து உத்தரவிட மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். நான் இந்த நடவடிக்கையை ஆதரிக்கிறேன்.
நீங்கள் கூறிய விதிகள் தளர்வு, பற்றாக்குறை வரம்பு உயர்த்துதல் தவிர பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான வேறு வழிகள் உள்ளனவா?
மத்திய அரசு மாநிலங்களுக்கு அதிக நிதியை வழங்க மறுத்து, செலவுகளை கட்டுப்படுத்த சொல்லுகிறது. ஊரடங்கு காலம் முடிந்தாலும் கூட தேவைகளை மக்கள் சுருக்கிக்கொள்வார்கள். இதன் விளைவாக பொருட்கள் சந்தையில் கிடைத்தாலும் அதனை அவர்கள் பயன்படுத்துவது சொற்பமாக இருக்கும். வங்கிகள் இப்போதுள்ள தேவை குறைந்த நிலையை கருத்தில்கொண்டு நிறுவனங்களுக்கு கடன் வழங்க அஞ்சும். முடிந்தளவு நிதியை தன் கையில் பாதுகாப்பாக வைத்திருக்க நினைக்கும். எப்படி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்? மாநில அரசுகள் கடன் உச்சவரம்பை எட்டினாலும் கூட பெருந்தொற்று காலத்தில் மக்களைக் காப்பாற்ற ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறலாம். அமெரிக்கா அதைத்தான் செய்கிறது. ஐரோப்பிய நாடுகளும் இம்முறையை பின்பற்றி வருகின்றன. இந்திய அரசு இதனை கருத்தில்கொள்வது அவசியம். அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்காதபோது பொருளாதார இழப்பு மட்டுமல்ல மனித வள இழப்பும் ஏற்படக்கூடும்
மாநில அரசுகளின் செலவுகளைக் குறைக்க மத்திய அரசு வற்புறுத்துகிறதா? விளக்கமாக சொல்லுங்களேன்.
தற்போதுள்ள சூழலில் ரிசர்வ் வங்கி மற்றும் சந்தையில் கடன் வாங்குவது மத்திய அரசுக்கு மட்டுமே சாத்தியம். ஆனால் மாநில அரசுகளுக்கு கடனுக்கான தேவை இருந்தும், அவற்றைப் பெறுவதற்கு விதிகள் தடையாக உள்ளன. இந்நிலையில் மத்திய அரசு மாநில அரசுகளின் செலவுகளை குறைக்க வற்புறுத்துகிறது. நலத்திட்டங்களை அரசு எப்படி குறைக்க முடியும்? இதனால் சந்தையில் தேவை குறையும். அவற்றைத் தூண்டுவது மிகவும் கடினம். இதனால் பொருளாதாரம் மேலும் நலிவடைய வாய்ப்புள்ளது.
பொருளாதார அவசரநிலை என்று இச்சூழ்நிலையை இந்திய அரசு கருதவேண்டுமா?
பொருளாதார அவசரநிலை என்பது அத்துறை சார்ந்த சொல். இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பொருளாதாரத்தை ஊக்குவிப்பது போல இல்லை. இந்திய அரசு மாநில அரசுகளை செலவுகளைக் குறைக்கச்சொல்கிறது. எங்களுக்கு வருமான ஆதாரம் ஜிஎஸ்டி மட்டுமே. அதுவும் இல்லாதபோது வேறுவழியின்றி, அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்போம். மத்திய அரசும் தன் ஊழியர்களின் சம்பளத்தை வெட்ட வேண்டும். தனியார் நிறுவனங்களும் சம்பளத்தை குறைக்கும் இதன் விளைவாக, சந்தைப்படுத்தும் பொருட்களை மக்கள் பெருமளவு வாங்கமாட்டார்கள். காரணம், அவர்களிடம் பணம் கையில் இருக்காது. சமூகநிலை சார்ந்து பதற்றமான நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது.
பொருளாதார சிக்கல் பற்றி தனி கமிட்டி அமைத்து மாநில அரசுகளின் நிதி அமைச்சர்களோடு பேசவேண்டும் என்கிறீர்களா?
தனி கமிட்டி எல்லாம் அவசியமில்லை. ஜிஎஸ்டி கவுன்சிலே இருக்கிறதே? அனைத்து மாநில அரசுகளின் நிதியமைச்சர்களும் குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்தால் அதனைப் பற்றி பிரதமர் பேசவேண்டும். ஆனால் நாங்கள் ஜிஎஸ்டி சார்ந்து ஏற்படும் இழப்பீடு பற்றி பேசி ஒன்றரை மாதங்கள் ஆகிறது. ஆனாலும் இதற்கான சிறப்பு சந்திப்பும், இழப்பீட்டை வழங்குவதற்கான செயல்பாடுகளும் நடைபெறவே இல்லை. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதுபற்றி மத்திய அரசுக்கு நான் மூன்று கடிதங்கள் எழுதியும் ஒன்றுக்கு கூட அங்கிருந்து பதில் வரவே இல்லை. இதை நான் எப்படிப் புரிந்துகொள்வது?
கோவிட் -19 சூழலில் சீனா மற்றும் இந்தியாவில் தொழில் முதலீடுகள் உருவாக வாய்ப்பு குறைவுதானே?
தங்களின் அனைத்து முதலீடுகளை ஒரே நாட்டில் தொழில் நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் செய்ய மாட்டார்கள். தங்களுக்கு எங்கு அதிக சலுகைகள் கிடைக்கின்றனவோ அங்குதான் முதலீடுகளைச் செய்வார்கள். இச்சூழலில் சீனாவின் அந்நிய முதலீட்டை தடை செய்து உத்தரவிடுவது சரியான அறிகுறியாக எனக்குப் படவில்லை. நாங்கள் ஏப்ரல் 27, 28 தேதிகளில் அனைத்து மாநில அரசுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் நிதித்துறை சார்ந்த அதிகாரிகள் ஆகியோரை இணையம் வழியாக சந்தித்து உரையாடுவதற்கான நான்கு மாநாடுகளை நடத்தியுள்ளோம். ஆனால் இதில் பங்கேற்க பாஜக கட்சியைச்சேர்ந்த ஒரு அமைச்சர் கூட விரும்பவில்லை. அரசியல் கருத்துரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் நாட்டின் நலனை முன்வைத்தே நாங்கள் இச்சந்திப்பை நடத்தினோம். நிதி அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்தோம்.
பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்த அரசு அடுத்து என்ன செய்யவேண்டும்?
அனைத்து இந்தியர்களுக்கும் தலா குடும்பம் ஒன்றுக்கு 7500ரூபாய் வழங்கவேண்டும். தேசிய வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான நிதியை இதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இதனை முன்கூட்டியே வழங்கலாம். தனியார் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை அரசு ஏற்கெனவே தந்துவிட்டது. எனவே சிறு குறு தொழில்நிறுவனங்களுக்கு வட்டியில்லாத கடன்களை வழங்க முன்வரவேண்டும். இந்த ஆண்டு முழுவதும் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும்.
மாநில அரசுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்.
நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்,
ஆங்கிலத்தில்: ஜி. வாசு
கருத்துகள்
கருத்துரையிடுக