கொரோனாவுக்குப் பிறகு உலகம் முன்னைப் போல இருக்காது! - இத்தாலி எழுத்தாளர் பிரான்சிஸ்கா மெலான்திரி


மொழிபெயர்ப்பு நேர்காணல் 

உலகம் இனி முன்னைப்போல இருக்காது!

 

பிரான்சிஸ்கா மெலான்திரி, இத்தாலி எழுத்தாளர்.

இவர் அண்மையில் இணையத்தில் எழுதிவெளியிட்ட கடிதம் இங்கிலாந்தில் வைரலாகி பரவியது. கோவிட் -19 ஏன் நம் சூழலை மோசமாக்கியது, இதனை எப்படி எதிர்கொள்வது என்று அவரிடம் பேசினோம். மின்னஞ்சல் மூலம் இவரிடம் பேசி எடுத்த நேர்காணல் இது.

 கோவிட் -19 சூழலில், இந்தியாவுக்கு நீங்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி என்ன?

நோய் வேகமாக பரவி வருவதால் மக்கள் யாரும் குழுவாக அலைந்து திரியாதீர்கள். இது நோய்பரவலை இன்னும் வேகமாக்கும். அதேசமயம் உங்கள் அரசோ, அல்லது குழுக்களோ பயத்தை பற்றவைத்து முடங்க வைத்தால் அதை தீவிராக எதிர்க்கத் தொடங்குங்கள். அரசு அதிகாரம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி பயத்தை ஏற்படுத்தி உங்களை வலுவிழக்கச் செய்யலாம். அதை எப்போதும் அனுமதிக்காதீர்கள்.

நோய் பரவிவரும் சூழலில் இலக்கியம் எப்படி உதவும் என்று கூறுகிறீர்கள்?

உலகில் நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்டு ஒரே சமயத்தில் கோடிக்கணக்கானோர் வீட்டிற்குள்ளே அடைந்து கிடக்கின்றனர். இந்த சூழ்நிலை நம் அனைவருக்கும் மிகவும் புதிதானது. பயம் தருவது கூட. இந்த அபாயகர நிலையில் நாம் எழுதும் இலக்கியங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் முக்கியமான இடத்தைப் பிடிக்கலாம்.

நீங்கள் கார்டியன் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் இனி உலகம் முன்னைப் போல இருக்காது என்று கூறியிருக்கிறீர்களே?

உலகில் நடைபெறும் புவியியல் சார்ந்த அரசியல், நாடுகளுக்கு இடையிலான உறவுகள், அறிவியல் ஆராய்ச்சிகள் என பலவும் மாற்றங்களை சந்திக்கவுள்ளன. காரணம், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எளிமையான வைரஸ்தான் காரணம். இப்பிரச்னையில் உலகம் நிறைய விஷயங்களில் மாறியுள்ளது. அதேசமயம் எதிர்காலத்தை யாருமே கணித்துக்கூறிவிடமுடியாது.

ஊரடங்கு உத்தரவின் விளைவாக நீங்கள் எத்தனை நாட்கள் வீட்டிலேயே இருந்தீர்கள்? உங்கள் தினசரி செயல்பாடுகள் என்னென்ன?

நான் ரோமில் ஏறத்தாழ ஒருமாதகாலமாக ஊரடங்கு உத்தரவால் வீட்டில் அடைந்து கிடக்கிறேன். அதாவது இன்றுவரை. அதிர்ஷ்டவசமாக எனக்கு வீடு பெரிதாக அமைந்திருக்கிறது. என்னால் சூரிய ஒளியை ரசிக்க முடிகிறது. அதோடு தினசரி நான் செய்யும் விஷயங்கள் பெரியளவு மாறுதல்களை சந்திக்கவில்லை. நான் ஒரு நாளின் பெரும்பகுதியை எழுதுவதில் செலவிட்டு வருகிறேன். இது அனைவருக்கும் பொதுவான நடைமுறையாக இருக்காது. வன்முறையான கணவர், அடம்பிடிக்கும் குழந்தைகள், குடிசைப்பகுதியில் வீடு என அனைத்தையும் முடிவு செய்வது வர்க்கம்தான். இது இந்தியாவுக்கும் பொருந்தும். இதனை நான் எழுதிய கடிதத்தில் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தேன். ஊரடங்கு உத்தரவுப்படி நாம் கவனமாக வீட்டில் இருந்தால் மட்டுமே, நம்மையும் நம் அன்புக்கு உரியவர்களையும் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஏப்ரல் 12, 2020

ஆங்கிலத்தில்: அவ்ஜித் கோஷ்

 

 

 

 


கருத்துகள்