நெருப்பைப் பார்த்தால் மனம் மகிழ்ச்சியை உணருகிறதா? - மனதை கவனியுங்கள்!


பைரோமேனியா

ஆதிக்காலத்தில் வேலைகளை முடித்துவிட்டு ஆண்கள் நெருப்பை எரியவிட்டு பேசிக்கொண்டு இருப்பார்கள். அல்லது வெறுமனே அதைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பைரோமேனியா பிரச்னை உள்ளவர்கள் எங்கு தீப்பற்றி எரிந்தாலும் அட என நின்று ரசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பின்னர், சந்தோஷத்திற்காக பொருட்களை கொளுத்தும்போது அது மற்றவர்களுக்கும் பிரச்னையாகிறது. நெருப்பு சம்பந்தமான பொருட்களை பிடிக்கிறது என்று சொல்லுவார்கள். நெருப்பை பார்த்துக்கொண்டே இருப்பார்கள். நெருப்பை பார்ப்பது மன அழுத்தத்தை, கஷ்டத்தை மறக்க வைப்பதாக சொல்லுவார்கள். இந்நிலை தீவிரமாகும்போது நெருப்பை இவர்களே உருவாக்குவார்கள். இது ஆபத்தான நிலை.

மனதிலுள்ள தீவிரமான கவலைகளை, மன அழுத்தங்கள் ஒருவரை இந்த பிரச்னைக்கு உள்ளாக்குகிறது. கவனக்குறைபாடு, குடும்ப பிரச்னைகள், பெற்றோருடன் பாசம் இல்லாமை, சமூகத்தோடு பழக இயலாமை, சக நண்பர்களோடு போட்டு போடுவது, பிறரின் கவனத்தை ஈர்க்கத் துடிப்பது ஆகிய அறிகுறிகள் இவர்களுக்கு இருக்கும்..

கோபத்தை கட்டுப்படுத்துவது, சமூக செயல்பாடு ஆகியவற்றைப் புரிந்துகொள்ள பல்வேறு தெரபி வகுப்புகளை உளவியல் வல்லுநர்கள் வழங்குகின்றனர்.

 ************************************************************

டிட்

டிஸ்சோசியேட்டிவ் ஐடென்டி டிஸ்ஆர்டர்

இந்த மனநலப்பிரச்னை சற்று ஆழமானது. இந்தப் பிரச்னை உள்ளவர்கள் தன்னை நான் என்று சொல்லிக்கொள்ள மாட்டார்கள். நாம் என்பார்கள். தனக்குள் பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொள்வார்கள். அவர்கள் தனக்கென தனி கையெழுத்து, விருப்பு வெறுப்புகள், நடை, உடை, பாவனை என அனைத்தும் வேறுபடும். இதனை இவர்கள் நீண்டகாலமாக வளர்த்து வந்தால் இவர்களுக்கு சிகிச்சை செய்து மீட்பது கடினம்.

இவர்களுக்கு பல்வேறு பாத்திரங்கள் உள்ளே வந்து போவதால், தான் எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதை அடிக்கடி மறந்துவிடுவார்கள். தன் கண்களின் மூலம் வெளியே பார்ப்பதை விட தனக்குள் நடைபெறும் பல்வேறு ஆளுமை மோதல்களைக் கண்டு ரசிப்பார்கள். சினிமா பார்க்க போனாலும் கூட அதை ரசிக்காமல், தனக்குள்ளே எழும் உணர்ச்சிப் போராட்டங்களைப் பார்த்துக்க கொண்டிருப்பார்கள்.

இவர்களின் பல்வேறு கதாபாத்திர உருவாக்கத்தால் சமூக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை  என இரண்டையும் பராமரிக்க முடியாது. குழந்தைபோல பேசுவது, பிரச்னைகளை வேறு பாத்திரத்தின் கோணத்தில் இருந்து பார்ப்பது, குறிப்பிட்ட பாத்திரத்தின் முந்தைய நினைவுகள் இல்லாமல் இருப்பது என பல்வேறு அறிகுறிகளை இவர்கள் வெளிக்காட்டுவார்கள். பல்வேறு பாத்திரங்களுக்கான உடை, உருவ மாற்றம் என அனைத்தும் மாறுபட்டிருக்கும்.

நீண்டகால நோக்கில் பல்வேறு தெரபி, மன அழுத்த குறைப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டால் பாதிப்பு குறையும்.

பொதுவாக டிஸ்சோசியேட்டிவ் ஐடென்டி டிஸ்ஆர்டர் பிரச்னை கொண்டவர்கள்  எட்டு முதல் பதிமூன்று பாத்திரங்களை தங்களுக்குள் உருவாக்கிக் கொண்டு வாழ்வார்கள்.


கருத்துகள்