சோஷியல் போபியாவால் ஏற்படும் பிரச்னைகள்!



சோஷியல் ஆன்சைட்டி டிஸ்ஆர்டர்

பள்ளிகளில், அலுவலகங்களில் அனைவரின் முன்னேயும் பேசுவது வெகு சிலர்தான். பலர் தான் மேடையேறி பேசினால் பிறர் என்ன நினைப்பார்களோ என தயங்கி பேசுவதைத் தவிர்ப்பார்கள். தைரியமாக தனது ஐடியாவை சொல்ல முடியாமல் போவதால், இவர்களைப் பற்றிய நம்பிக்கையை பிறரிடம் உருவாக்க முடியாமல் போவது இவர்களது கல்வி, வேலைவாய்ப்பு, முன்னேற்றம் ஆகியவற்றில் தடைக்கற்களாக மாறும்.

சோஷியல் போபியா இருந்தாலும் திறமையானவர்கள்தான். ஆனால் தன் சிந்தனையை வெளிப்படையாக சொல்ல முடியாது போவதால் இவர்களால் பிறருடன் சரியானபடி தொடர்புகொள்ள முடியாது போகிறது.

அறிகுறிகள்

பேசுவதற்கு முன்னர் பல நூறு முறை பயிற்சி செய்து மேடையில் சொதப்புவார்கள். தலைப்பை தேர்ந்தெடுத்து பேசுவதற்காக நீளும் சந்திப்புகள் நண்பர்களை குற்றுயிராக்கும். இதயத்துடிப்பு அதிகரிப்பது, வாய் குளறுவது, அதிக வியர்வை சுரப்பது ஆகிய அறிகுறிகள் வெளிப்படும்.

தீர்வு

நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதற்கான பயிற்சியை உளவியல் வல்லுநர் வழங்குவார். தங்களது பிரச்னையை பிறரிடம் சொல்வதற்காக குழு தெரபி வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பேசுவதற்கு முன்னால் பலமுறை ஒத்திகை பார்ப்பது பலன்தருகிறது. இவர்கள் பேசிய வீடியோவை எடுத்து அதில் திருத்தங்களை சொல்லி மேடை பயத்தை, கூச்சத்தை போக்கலாம்.

 

 

செபரேஷன் ஆன்சைட்டி டிஸ்ஆர்டர்

குழந்தைகளுக்கு நேரும் பதற்றக் குறைபாடு. பெற்றோர்கள் முதலில் குழந்தைகளை பாசமாக பராமரித்துவிட்டு பின்னர் அவர்களை விட்டு வேறு பணிகளுக்கு நகருவதால் குழந்தைகளுக்கு இந்த குறைபாடு ஏற்படுகிறது.

ஒருமாதத்திற்கு மேல் குழந்தைகள் எங்கும் செல்வதற்கு பயப்படுவது, தூக்கம் வராமல் தவிப்பது ஆகிய அறிகுறிகளைக் கொண்டிருந்தால் நீங்கள் உளவியல் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்கவேண்டியது அவசியம்.

இது பொதுவான பதற்றக் குறைபாடுதான். பன்னிரெண்டு வயதிற்கும் கீழான குழந்தைகளுக்கு இக்குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைகளை தீவிரமாக பாதுகாப்பது, பெற்றோர் விவகாரத்து பெற்று பிரிவது, பள்ளியை மாற்றுவது ஆகியவற்றை செய்யும்போது குழந்தைகள் இந்த மாற்றங்களை உடனே ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறுவார்கள். இதன் விளைவாக,  தலைவலி, வயிற்றுவலி என பல்வேறு உடல் உபாதைகளைச் சொல்லி அழுவார்கள். பள்ளிக்குச் செல்ல மறுப்பார்கள்.

இதற்கான சிகிச்சைக்கு பெற்றோரின் உதவி அவசியம். குழந்தைகளை குறிப்பிட்ட இடைவெளியில் தனித்திருக்க செய்து அவர்களின் பயத்தை குறைக்க முடியும். பதற்ற மேலாண்மை பற்றிய பயிற்சியை உளவியல் வல்லுநர்கள் வழங்குவர்.

 

 

 

 

 

கருத்துகள்