கற்பனையும் அழியும் நினைவுகளும் - டெல்யூஸ்னல் டிஸ்ஆர்டர் - டிமென்ஷியா
டெல்யூஸ்னல் டிஸ்ஆர்டர்
கற்பனையான விஷயங்களை உருவாக்கி அதை நிஜத்துடன் கலக்கி குழம்புவதுதான் இப்பிரச்னை. அரிதாகவே மனிதர்களுக்கு நேருகிறது. கற்பனையாக நடக்கும் விஷயங்களை நடைமுறை வாழ்க்கையோடு குழப்பிக்கொள்வதால் இவர்களுக்கு சமூக வாழ்க்கை அமையாது. தன்னை யாரோ பின்தொடர்கிறார்கள், உணவில் விஷம் கலந்துவிட்டார்கள் என நினைத்து பயந்துகொண்டிருப்பார்கள். அயல்கிரகவாசிகள் பூமிக்கு வந்துவிட்டதாக நினைத்துக்கூட பயப்படுவார்கள்.
உலகில் 0.2 சதவீத மக்கள் மட்டுமே இந்த கற்பனை ஏற்படுத்தும் மனப்பிரச்னைக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
மதுபானம், போதைப்பொருட்கள் பயன்பாடு இப்பிரச்னையை தூண்டிவிடும் முக்கியமான காரணி.
அறிகுறிகள்
தங்களின் தோலில் ஏதாவது எறும்புகள் ஊர்ந்துகொண்டிருப்பதாக அடிக்கடி சொல்லுவார்கள்.
பிரபலமாக உள்ள நடிகை தன்னை காதலிப்பதாக சொல்லுவார்கள். அதீத தைரியத்தில் பிற பெண்களை காதலிக்கச் சொல்லி மிரட்டுவார்கள்.
உலகிலேயே அரியதும், பிரமிப்பூட்டும் திறமைகள் தன்னிடம் இருப்பதாக நம்புவார்கள். உலகை உய்விக்க வந்த கடவுளின் தூதர் நான் என்பார்கள்.
அவமானப்படுத்தப்பட்டதாக, உளவு பார்க்கப்படுவதாக நினைத்துக்கொள்வார்கள்.
தங்களின் கணவர் அல்லது மனைவி தன்னை ஏமாற்றுவதாக எண்ணுவார்கள்.
*****************************************************************************************************************
டிமென்ஷியா
மூளை நியூரான்களில் ஏற்படும் பாதிப்பால் இக்குறைபாடு ஏற்படுகிறது. இவர்களால் தேதி, கிழமை, நாட்கள் என நினைவ வைத்துக்கொள்ள முடியாது. முடிவெடுக்க தடுமாறுவார்கள். பேசும்போது அடுத்த வார்த்தை என்ன பேசுவது என தெரியாமல் தடுமாறுவார்கள். இதனால் இவர்களின் தன்னம்பிக்கை தளரும். மன அழுத்தத்தில் வீழ்வார்கள்.
அல்சீமர் நோய் தாக்குதல் டிமென்ஷியாவை உருவாக்கும். மூளையில் செல்களுக்கு வெளியே ஏற்படும் புரதம், பிற செல்களைத் தாக்கி அழிக்கும். இதன் காரணமாக டிமென்ஷியா ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது. முதிய வயதில்தான் டிமென்ஷிய தொடங்குகிறது. ஆனால் ஐம்பது வயதில் இருப்பவர்களுக்கும் இப்போது இந்நோய் வரத்தொடங்கியுள்ளது.
வஸ்குலர் டிமென்ஷியா நோய் பாதிப்பு ஏற்பட்டால், புதிருக்கு விடை சொல்லுவது, காரண அறிவு, நினைவுத்திறன் ஆகியவை பாதிக்கப்படும்.
அல்சீமர் மற்றும் பார்க்கின்சன் நோய் பாதிப்பு உடலில் ஏற்படும்போது, பல்வேறு கற்பனையான விஷயங்கள் நோயாளிகளுக்கு தெரிய தொடங்கும்.
பிரன்ட்டெம்பொரல் டிமென்ஷியா
இந்த பாதிப்பு ஏற்படும்போது தெரிந்த பேசிவந்த மொழியை பேச முடியாது. நடவடிக்கை, குணங்களில் மாற்றம் ஏற்படும்.
அறிகுறிகள்
பிறருக்கு டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவது புரியாது. மொழியை பேசுவதும் கடினமாகவே இருக்கும்.
பிறர் பேசுவதை இவர்களால் புரிந்துகொள்ள முடியாது.
எதிலும் கவனம் இருக்காது. எனவே, இவர்களால் எந்த பிரச்னையிலும் முடிவு எடுக்க முடியாது. தனியாக வாழ்வதும் கடினமாகிக்கொண்டே வரும்.
டிமென்ஷியா நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பொதுமைப்படுத்தப்பட்டதல்ல. எனவே, அவர்களுக்கு தினசரி செய்யவேண்டிய பணிகளை அடிக்கடி நினைவுபடுத்தவேண்டும். அவர்களுக்கு பல்வேறு வாக்கியங்களை, உரையாடல்களை படித்துக்காட்டலாம். இச்செயல்பாடுகள் மூலம் நினைவுத்திறனை அதிகரிக்க முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக