கிளாசிக் நேர்காணல் - ஆர்.கே. லக்ஷ்மணன் - முதல்பகுதி
ராசிபுரம் கிருஷ்ணசாமி லக்ஷ்மணன்
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் காமன்மேன் என்ற தொடர்வரிசை கார்டூன்களை உருவாக்கியவர். இவரது கார்டூன்களில் நாம் இடம்பெறவேண்டும் என பல்வேறு அரசியல்வாதிகள் ஆசைப்பட்டனர். தான் கூற வந்ததை நாசுக்காகவும், சம்பந்தப்பட்டவர்கள் ரசிக்கும்படியும் தன் கார்ட்டூன்களை அமைத்துக்கொண்டவர் லக்ஷ்மணன். 2004ஆம் ஆண்டு ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழில் வெளியான நேர்காணல் இதோ இங்கே.
பக்கவாத பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறீர்கள். உடனே பணிக்குத் திரும்பிவிட்டீர்களே?
நான் சிறுவயதிலிருந்து கார்டூன்களை வரைந்துகொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை நாட்கள் எனது கார்ட்டூன்களை பதிப்பிப்பார்களோ தெரியவில்லை. பக்கவாதம் தாக்கியதில் இடதுபுறம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இடது கையை பயன்படுத்தி செய்த விஷயங்கள் இப்போது செய்யமுடியவில்லை. குறிப்பாக நாளிதழ்களை பிடித்து படிக்கமுடியவில்லை. நான் தினந்தோறும் நிறைய நாளிதழ்களைப் படிப்பேன். இப்போது மின்விசிறியை நிறுத்திவிட்டு, நாளிதழ்களில் பேப்பர் வெயிட்டை வைத்து படிக்கவேண்டியதிருக்கிறது.
எதற்கு நிறைய நாளிதழ்களை படிக்கிறீர்கள்
ஏதேனும் ஐடியாக்கள் கிடைக்கவேண்டும் என்றுதான்.
கார்ட்டூன்களை வரையும்போது இடையே இடைவேளைகள் எடுத்துக்கொள்வீர்களா?
நான் நேரம் பார்த்து வேலையை செய்வதில்லை. அந்த வேலை முடியும்போதுதான் அடுத்த வேலையின் மீது கவனம் திரும்பும்.
நீங்கள் கைக்கடிகாரத்தைக் கட்டிக்கொள்ளலாமே?
இயந்திரத்தை எதற்கு கையில் கட்டிக்கொள்ளவேண்டும்? மணி என்ன என்று கேட்டால் போதும். வீட்டில் சொல்லப்போகிறார்கள்.
உங்களுடைய சுயசரிதையில் இயந்திரங்கள் மீது ஈடுபாடு உண்டு என்று கேள்விப்பட்டோம்.
எங்கள் வீட்டிலுள்ள கடிகாரங்கள், எலக்ட்ரிகல் விஷயங்களை நான் சரிசெய்வேன். அதை முன்னர் பொழுதுபோக்காக செய்துவந்தேன். இப்போது அதனை தொடர்வதில்லை.
நீங்கள் பத்திரிகைத்துறையில் கார்ட்டூன் வரைவதில் மட்டும் ஐம்பதிற்கும் மேலான ஆண்டுகளை செலவிட்டிருக்கிறீர்கள்.
நான் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் மட்டும் 54 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன்.
இத்தனை ஆண்டுகளாக அரசியலில் என்னவிதமாக மாற்றங்களை கண்டுள்ளீர்கள்.
மோசத்திலிருந்து படுமோசமான கட்டத்திற்கு அரசியல் நகர்ந்துள்ளது. மொரார்ஜி தேசாய், தேவகௌடா போன்றோர் நான் கார்ட்டூன் வரைவதற்கான விஷயங்களை எப்போதும் தருகிறார்கள்.
சிறந்த அரசியல்வாதிக்கு உதாரணம்....
மன்மோகன்சிங்
நீங்கள் அரசு நிர்வாகம் செயல்படும் டில்லியில் அதனை நேரடியாக கவனித்திருக்கிறீர்களா?
நான் டில்லிக்கு சென்றிருக்கிறேன். அங்கு மக்களவை, மாநிலங்களவை நிகழ்ச்சிகளை கவனித்திருக்கிறேன். ஆனால் அவற்றை தூரத்திலிருந்து பார்த்தால்தான் எனக்கு வேலை செய்வதற்கான பார்வை கிடைக்கும்.
நீங்கள் எந்தெந்த அரசியல்வாதிகளை சந்தித்திருக்கிறீர்கள்ழ
நேரு, இந்திராகாந்தி மற்றும் ராஜீவ் காந்தி..
நேருவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நேரு மிகவும் கண்ணியமானவர். அக்கறையாக பேசக்கூடியவர். எனக்கு பத்து நிமிடங்கள் நேரம் ஒதுக்கினார். ஆனால் நாங்கள் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
தலைவர்கள் மாறவேண்டுமென சொன்னால் மக்களும் மாறவேண்டும் அல்லவா?
மக்கள் எப்போதும் போல ஆதரவற்றவர்களாகவே நிற்கிறார்கள். அவர்கள் பெருமளவு அரசியல்வாதிகள் மாறவேண்டுமென்று கூட பேசுவதில்லை.
நீங்கள் வரையும் காமன்மேன் பாத்திரம் கூட இத்தனை ஆண்டுகளில் மாறவில்லையே?
அவர் மாறமாட்டார். காரணம் அவர் அமைதியாக மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனித்துக்கொண்டிருக்கிறார்.
அவர் ஒரு வார்த்தை கூட பேச மாட்டாரா?
மாட்டார்.
நீங்கள் அவரை பேச வைக்கலாமே?
இல்லை. அதிகாரம் ஒருவரது வாயை மூட வைக்கும். பேச வைக்காது.
அவசர காலநிலை நினைவிருக்கிறதா?
கடவுளே, அதை நினைவுபடுத்தாதீர்கள்.
நீங்கள் அந்த நேரத்தில் இந்திரா காந்தியை சந்தித்தீர்கள் அல்லவா?
அவர் என்னை அழைத்திருந்தார். அதனால் அவரை சந்தித்து பேசினேன். அப்போது பகடியும் ஜனநாயகத் தன்மையும் கொண்ட கார்ட்டூன்கள் அவசியம். அதற்கு தடை இல்லை என்று கூறினார். ஆனால் தகவல்தொடர்புத் துறை அமைச்சர் வி.சி. சுக்லா எனது கார்ட்டூன்களை விமர்சித்து கடுமையாக எச்சரித்தார். நான் இந்திராகாந்தி அனுமதி அளித்திருக்கிறார் என்றேன். அவரது பெயரை சொல்லிக்கொண்டு நிறையப்பேர் தவறுகளை செய்து தப்பித்துக்கொள்ள நினைக்கிறார்கள் என்றார். காமன்மேன் சித்திரத்தை டி.கே. பருவா தள்ளுவது போன்ற படம் அது.
வி.சி. சுக்லாவின் எச்சரிக்கைக்கு பிறகு என்ன செய்தீர்கள்?
நான் மொரிஷியஸூக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றேன். சிலநாட்கள் ஓய்வு கிடைத்தது. தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள நாளிதழ்களை படித்து வந்தேன். அதில் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என இந்திராகாந்தி கூறியிருந்தார். தேர்தலில் இந்திராகாந்தி தோற்றார். நான் வென்றேன். பிறகு எனது பணியைத் தொடர்ந்து செய்தேன்.
மீண்டும் பிற்காலங்களில் அவசரநிலை அமல்படுத்தப்படும் என நினைக்கிறீர்களா?
இல்லை. நாட்டைச்சுற்றிலும் ஏராளமான தீவிரவாதிகள் உள்ளனர். அப்படியொரு ஆபத்தான முயற்சியை செய்யமாட்டார்கள் என நினைக்கிறேன்.
நீங்கள் குடும்பத்தில் கடைக்குட்டியாக இருந்தது எந்த வகையிலாவது உதவியாக இருந்ததா?
எனது குடும்பத்தில் நான் எட்டாவது குழந்தை. அதனால் நான் செய்த குறும்புகளை பெற்றோர் கண்டுகொள்ளவில்லை. கணக்கில் நான் படுவீக். எனவே தேர்வில் ஃபெயிலாகி ஓவியம் பழகியபோதும் பெற்றோர் ஏதும் சொல்லவில்லை.
உங்கள் அப்பா கறாரான தலைமையாசிரியர் அல்லவா?
உண்மைதான். ஆனால் அவர் நான் ஓவியத்தை பழகத் தொடங்கியபோது என்னை தடுக்கவில்லை. இன்றைக்கு பெற்றோர் குழந்தைகளை அடித்து உதைத்து தங்கள் ஆசைகளை திணிப்பதை பார்க்க பரிதாபமாக இருக்கிறது.
நீங்கள் உங்களது அம்மாவோடு நெருக்கமாக இருந்தீர்களா?
ஆமாம். அம்மாவுக்கு நான் நெருக்கமானவன்தான். அம்மா அதிகம் படிக்கவில்லையென்றால் மகாபாரதம், ராமாயணம், ஷேக்ஸ்பியர் ஆகியவற்றை படித்தவர். டென்னிஸ் மற்றும் செஸ் விளையாட்டில் வல்லவர். மைசூரு ராணிக்கு நெருங்கிய தோழி. அவரோடு விளையாடும்போது மட்டும் தானாகவே தோற்றுவிடுவார். இதனால் அவர்களுக்கு இடையில் ஈகோ பிரச்னை வந்ததே இல்லை.
உங்களது சகோதரர் ஆர்.கே. நாராயணம் உங்களுக்கு எப்படி உதவினார்?
அவர் எழுதிய சிறுகதைகளுக்கு நான் சிறுவயதிலேயே படங்களை வரைந்து தந்திருக்கிறேன்.
வேறு சகோதரர்கள் யாரேனும் உங்களுக்கு ஊக்கம் தந்திருக்கிறாரா?
ஒருமுறை நான் பன்ச் என்ற இதழிலிருந்து கார்ட்டூன் ஒன்றை காப்பி அடித்தக்கொண்டிருந்தேன். அதைப் பார்த்த எனது சகோதரர்களில் ஒருவர் காப்பி அடிக்காதே. சொந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து கார்ட்டூன்கள் உருவாக்கு என்று கூறினார். அதிலிருந்து எதையும் நான் காப்பி அடிப்பது கிடையாது.
கருத்துகள்
கருத்துரையிடுக