பாரதி மெஸ் சாப்பாடும், செந்தில்நாதன் ஹோட்டல் சப்பாத்தியும்! - ஓரு துளி மணலில் ஓர் உலகு!


Fountain Pens, Fountain Pen, Filler, Ink, Write
பிக்சாபே



அன்புத்தோழர் ராமமூர்த்திக்கு வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?


என்னிடம் நீங்கள் யோசனை கேட்பத ஓர் நண்பராக எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் இறுதியான முடிவை நீங்கள்தான் எடுக்கவேஎண்டும். உங்களை விட உங்களுக்கு நெருக்கடி காலத்தில் யாருமே உதவ முடியாது. பிரச்னை உங்களுடையது. அதைத் தீர்க்கும் செயல்பாடும் உங்களுடையதுதான். காலம் தலையில் எமல்ஷன் பெயிண்டை அடிக்கும் முன்பு முடிவெடுத்து விடுங்கள். ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்ககு உலகமே மாறிக்கொண்டிருக்கிறது. நாம் தாள்களை ஒளித்து சேர்த்து வைக்கும் காலத்தை கடந்து வந்துவிட்டோம்.


தற்போது நான் தங்கியுள்ள விடுதியில் பிரதீப் என்ற நண்பர் கிடைத்திருக்கிறார். நெய்வேலியைச் சேர்ந்தவர். ஜெர்மன் மொழியைக் கற்று வருகிற மாணவராம். முன்னர் இங்குள்ள மாமி மெஸ்ஸின் மேலுள்ள விடுதியில் தங்கியிருந்திருக்கிறார். வாயைத் திறந்தால் அவராக மூடினால்தான் உண்டு,. எப்படி வந்து சிக்கியிருக்கிறேன் பார்த்தீர்களா? நாம் கொடுக்கும் ரியாக்சன்களுக்கும் அவரே டப்பிங் பேச தயாராக இருக்கிறார்.


இங்குள்ள மனிதர்கள், அறையின் நிலை அனைத்துமாக சேர்ந்து மனதில் மனநல சிக்கல்களை ஏற்படுத்திவிடும் போல. அப்படி இருக்கிறது அறை. கறுப்பு அடிமைகளின் கதை என்ற நாவலைப் படித்து வருகிறேன். வான் முகிலன் என்பவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அங்கிள் டாம் கேபிள் என்ற புகழ்பெற்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு இது. வளவளவென்று இவரது தமிழ்மொழிபெயர்ப்பு சிவ சிவா சொல்ல வைக்கிறது.


கபாலீஸ்வரர் கோவில் அருகே உள்ள பாரதி மெஸ் சாப்பாடும், மத்தளநாராயணன் தெருவில் ஜெயின் கோவிலருகே உள்ள செந்தில்நாதன் மெஸ்ஸின் சப்பாத்தியுமாக வாழ்க்கை ஓடுகிறது.


4.2.2018 அன்று கே.கே.நகர் மெய்யருள் அண்ணாவின் திருமணம் நடைபெற்றது. திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் அருகேயுள்ள சிறிய கோவிலில் நடைபெற்றது. மணப்பெண்ணும், அவரின் வீட்டாரும் வித்தியாசமாக இருந்தார்கள், என மனதிற்கு அவர்க்ள வேண்டாவெறுப்பாக கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டது போல தெரிந்தது. சாப்பாடு போட்டது மிகவும் அமெச்சூர்தனமாக இருந்தது. சாப்பாட்டை இத்தனை என்று எண்ணி வந்து சோறு போட்டிருந்தால் கூட பிரச்னை இல்லை. காசுகொடுத்து சாப்பிடுபவர்களும் உள்ளே விட்டு, கல்யாண சாப்பாடு சாப்பிட வந்தவர்களையும் உள்ளே விட்டு ஒரே குழப்பமாகிவிட்டது.


சர்வர்கள் டோக்கன் எங்கே என்று கேட்டு துளைத்தெடுக்க, எனக்கு இதென்னடா ஈரோட்டுக்காரனுக்கு வந்த சோதனை? கல்யாண சோற்றுக்கு டோக்கன் வாங்கவேண்டுமா? மெய்யருள் அண்ணன் மொய் வாங்கித்தான் அந்த காசில் சோறு போடுவார் போல நினைத்தேன். அங்கு சூழல் பற்றி எழுதும் சுபவனம் என்பவரையும், காடு இதழ் ஆசிரியர் ஏ.சண்முகானந்தத்தையும் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. மெய்யருள் அண்ணனிடம் விடைபெற்றுக்கொண்டு வந்துவிட்டேன். அண்ணனின் வாழ்க்கை ஒருவழியாக டிராக்கில் ஓடும் ரயில் வண்டியாகிவிட்டது.


நன்றி!


.அன்பரசு

6.2.2018

*********************************************************************

அன்புத்தோழர் ராமமூர்த்திக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?


தங்களின் காதல் அனுபவங்கள் கேட்க நன்றாக இருக்கிறது. பின்னாளில் இதையெல்லாம் வைத்து வா.மு.கோமு போல கசமுசா கதைகளை நான் எழுதக்கூடும். ஆனால் உங்களது ஏராளமான் காதலிகளை அவரா, இவரா என்று நினைவில் நிறுத்துவது கடினமாக இருக்கிறது.


மெய்யருள் அண்ணாவின் கல்யாண வரவேற்பு அவரது ஊரில் நடக்கிறது. நான் அவர் தாலிகட்டுவதை இங்கேயே பார்த்துவிட்டேன். எனவே, நான் ஊருக்கு வரமாட்டேன் என்று முன்னமே சொல்லிவிட்டேன். எனக்கு கூட்டம் ஆகாது. எனவே அவரது வீட்டினர், மண்ணின் மைந்தர்கள் ஒன்றுகூடி வாழ்த்தி வாழ்வாங்கு வாழ்த்தியிருப்பார்கள். நன்றாக வாழ்ந்தால் சரி.


மேன்ஷன் அறையில் பிரதீப் என்பவர் ஜெர்மன் கற்கிறார். ராம்குமார் என்பவர் மருத்துவர், நீட் தேர்வுக்கு முக்கி வருகிறார். இன்னொருவர் இன்சோம்னியா விவேக். எப்போது தூங்குகிறார் என்றே தெரியாது. திடீரென எழுந்து ரயிலுக்கு ஓடுவார். அறையில் அதிக நாட்கள் தங்கியிருந்தவர் போல. தன்னுடைய வீட்டின் அறையைப் போலவே மேன்ஷன் அறையை கருதுகிறார். ரூம் பராமரிப்புக்கு வாடகை இல்லாமல் 1500 ரூபாய் தரவேண்டுமாம். முஸ்லீம் ஆட்கள் நடத்துகிறார்கள். இரக்கம் இன்றி தூங்குபவனை எழுப்பி காசைக் கொடு என்கிறார்கள். என்ன மனிதர்களோ?


நேர்மை என்பதற்கு நகரங்களில் இளிச்சவாய்த்தனம் என்று பெயரோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நகரங்களுக்கு வேலை தேடி வருபவனை தினசரி வங்கியை கொள்ளையடித்து வருபவனைப் போலவே நினைக்கிறார்கள். நமக்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது? சீக்கிரம் வேறு இடம் பார்த்து போகலாம் என்றால் அலுவலகத்தில் சம்பளத்தை ஏற்றும் முனைப்பே தெரியவில்லை.


கறுப்பு அடிமைகளின் கதை நூலை துக்கம் தொண்டையடைக்க படித்து வருகிறேன்.


நன்றி


.அன்பரசு


8.2.2018

*****************************************************************************

அன்புத்தோழர் ராமுவுக்கு, வணக்கம்.


தாய்மண்ணில் காற்று வாங்கிவிட்டு வந்திருப்பீர்கள். பெரும்பேறுதான் இது. நமக்கு பிடித்தவர்கள் அருகிலிருக்கும்போதுதானே சந்தோஷம் கிடைக்கும். உங்களது அனுபவம், மகிழ்ச்சி எனக்கு சற்றே பொறாமையைக்கூட தருகிறது. வெளிப்படையாக சொல்லிவிட்டேன். தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள்.


குங்குமம் வார இதழில் ரிப்பேர் கஃபே என்ற கட்டுரையை மொழிபெயர்த்து எழுதினேன். அனேகமாக அது லிவ்மின்ட் பத்திரிகையில் வ்ந்த கட்டுரை என்று நினைக்கிறேன். ரிப்பேர் கஃபே என்பது பெங்களூருவில் உள்ள நிறுவனம். விரைவில் சென்னையில் தங்களின் கிளை ஒன்றை திறக்கவிருக்கிறார்கள். அந்த நிறுவனம் சமூகம் சார்ந்த முன்னேற்றத்திற்காக பாடுபடும் அமைப்பு. அதை எழுதிய சில நாட்களுக்குப் பிறகு அலுவலகத்திற்கு போன் வந்தது. போனில் ஆங்கிலமும் , தமிழுமாக ஒரு அம்மணி பேசினார். என்ன பேசினார் என்பதே பாதி புரியவில்லை.


பெங்களூருவிலுள்ள நிறுவனத்தைப் பற்றி தமிழில் ஏன் எழுதுகிறீர்கள். போலீசில் புகார் பண்ணுவேனாக்கும் என்றே பேசினார்கள். எனக்கென்றே எங்கிருந்து வருகிறார்களோ என்று நினைத்தவன், தாராளமாக புகார் செஞ்சுக்கோங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன். என்னுடைய நடத்தையை எடிட்டர் சிவராமன் கடிந்துகொண்டார். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தணும்ப்பா.. இப்படியா தடால்னு பேசறது என்றார். பெண்கள் என்றால் எனக்கு லைன் கொடுங்க, நான் அனுசரிச்சு பேசிக்கிறேன் என்கிறார் குங்குமம் உதவி ஆசிரியர் த.சக்திவேல். எனக்கு வருகிற ஆட்கள் ஹிஸ்டீரியா நோயாளிகள் போலவே வந்தால் என்னதான் செய்வது? என் நடத்தைக்கு நான் ஆசிரியரிடம் சென்று மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.


கறுப்பு அடிமைகளின் கதை நூல் இன்னும் நீண்டுகொண்டே போகிறது. அடிமைகள், இரக்கமின்றி நடத்தும் முதலாளிகள், வல்லுறவு, சித்திரவதை, கிறிஸ்துவ பிரசாரம், அடிமைகளின் குடும்பம், பிரிக்கப்பட்ட அம்மா, மகள் பாசம், பரிதவிப்பு என உணர்ச்சிகரமான காட்சிகள் ஏராளமாக உள்ளன. இந்தி நடிகர் அக்ஷய் குமாரின் செய்திகளும், படங்களும் ஒரு மாதிரியாக மாறிவிட்டன. பேடுமேன்,. கோல்டு என நடிக்கும் படங்கள் அனைத்தும் அரசை பாராட்டுவதாகவே இருப்பதாக உணர்கிறேன். அவரவர்க்கு அவரவர் எதிர்காலம் முக்கியம்தானே?


நன்றி!


.அன்பரசு

10.2.2018


***************************************************************************************

அன்புத்தோழர் அன்பரசுவுக்கு வணக்கம். நலம். நலம் நாடுகிறேன்.


உங்களது அறை நண்பருக்கு திருமணம் செய்ய ஒத்தாசை செய்தீர்கள் சரி. நீங்கள் எப்போது திருமணம் செய்யப்போகிறீர்கள். நாங்களும் கறிச்சோறு சாப்பிடவேண்டாமா?


நீங்கள் உங்கள் ந்ணபரின் திருமண விருந்தைப் பற்றி எழுதியதை படித்து சிரித்து வயிறு வலித்தது. டோக்கன் கேட்டபோது உங்களின் திருதிரு முழியை நினைத்து பார்த்தேன். உம். இப்படியும் திருமணம் செய்கிறார்கள் நகரங்களில் என நினைத்துக்கொண்டேன். காதல் திருமணம் என்று வேறு சொன்னீர்கள். சில தடுமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். இப்போது உறவு என்பதில் ஆண்கள் முடிவெடுப்பதில்லை. பெண்கள்தான் முடிவெடுப்பார்கள். ஆனால் எல்லாமே ஆண்கள் முடிவு செய்வது போல காட்டிக்கொண்டு பின்னாடி இருந்து சாவி கொடுப்பார்கள். அனேகமாக இந்த திருமணம் நடந்தது முழுக்க அந்த பெண்ணின் வற்புறுத்தலாகவே இருக்கும். காரணம், இந்த சம்பவங்களை பார்த்தால் அப்படி யோசிக்க தோன்றுகிறது.


புதிய அறை, அதிலுள்ளமனிதர்களைப் பற்றி சொல்லியிருந்தீர்கள். உங்களைப் போல அதிக மனிதர்களைப் பார்த்தால் அங்கிருந்து வெளியேறுகிற குணம் இருந்தால் சென்னையில் தங்கியிருப்பது கடினம்தான். எனக்கு செனைனயில் தேர்வு எழுத வந்தபோது கையில் ஹோட்டலில் தங்குமளவு காசில்லை. அதனால் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் ஒரு திண்ணையைப் பிடித்து அட்டைப் பூச்சியைப் போல சுருண்டிருந்தேன். சரியாக அங்கே ஒரு போலீஸ்காரர் வந்து லத்தியால் அடித்து என்னை எழுப்பி வேறிடம் போகச்சொன்னார். மறக்க முடியாத அனுபவம் அது. ஏனெனில் தூங்குபவர்களை பொதுவாக நம் ஊரில் எழுப்பவே தயங்குவோம். காரணம், அது மரியாதைக்குரிய ஒன்றல்ல. ஒருவன் கவலைகளை மறந்து நிம்மதியாக இருப்பதே தூங்கும்போதுதான் அல்லவா? மனிதர்களின் உள்ளே எப்போதும் பழைய மிருகம் ஒன்று தூங்கிகொண்டுதான் இருக்கிறது. அன்பு எந்தளவு இருக்கிறதோ, மறுபக்கத்தில் அந்தளவு குரூரமும் வக்கிரமும் இருக்கிறது.


உங்கள் கட்டுரைக்காக போன் செய்து அம்மணி பேசியதை பகிர்ந்து இருந்தீர்கள். விநோதமான பதிவு அது. பொதுவாக உங்கள் பேச்சில் தொனிக்கும் நகைச்சுவையை சிலசமங்களில்தான் எழுத்தில் கொண்டுவருகிறீர்கள். நிறையமுறை உங்களின் இயல்பான நக்கலும் நையாண்டியுமான எழுத்தை நீங்கள் கைவிட்டு, சீரியசாக எழுதுகிறீர்கள். இப்படி வறட்சியாக தகவல்களுடன் எழுத திராவிட எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அப்படி ஏன் எழுதவேண்டும்? விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதில்லை. ஆனால் உருப்படியான விஷயங்கள் ஏதேனும இருந்தால் அதனை கவனிக்கலாம். தவறில்லை. உங்கள் மூக்கு புடைப்பாக இருப்பதால் திடீரென கோபப்பட்டு விடுகிறார்கள். பத்திரிக்கையாளர்களாக இருப்பவர்கள் இப்படி உடனே தோள்களை உயர்த்தினால் என்னாவது? பேச்சின் தொனி ஒருவரை சந்தோஷப்படுத்தலாம், அல்லது அவரை கோபப்படுத்தலாம். அனைத்துக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் உங்கள் எடிட்டர் இதற்கு சொன்ன பதில் அவரது அனுபவத்தை காட்டுகிறது.


நீங்கள் தொடர்ச்சியாக வாசிப்பதையும், அதை என்னிடம் பகிர்வதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


நன்றி!


.ராமமூர்த்தி



















கருத்துகள்