மனநிலையில் மாறுதல்களை ஏற்படுத்தும் பருவகாலங்கள்! - கவனமாக இருப்பது எப்படி?


டிஎம்டிடி - டிஸ்ரப்டிவ் மூட் டிஸ்ரெகுலேஷன் டிஸ்ஆர்டர்

குழந்தைகளுக்கு ஏற்படும் எரிமலை போன்ற கோபக் குறைபாடு. பள்ளி, வீடு என பல்வேறு இடங்களில் இக்குறைபாடு உள்ள குழந்தைகள் கோபத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் நடந்துகொள்வார்கள். 2013ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட குறைபாட்டால், குழந்தைகள் பொருட்களை தூக்கி எறிவார்கள். என் பெயர் சூர்யா என் நாடு இந்தியா படத்தின் அல்லு அர்ஜூன் போல நெஞ்சில் எரியும் கோபத்துடன் இருப்பார்கள். பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள்  என அனைவருடன் சண்டை போட்டு கத்துவார்கள். இவர்கள் இச்சூழலில் சிகிச்சை அளிக்காதபோது கட்டுப்படுத்துவது மிக கடினம்.

ஆறு வயதிலிருந்து பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த குறைபாடு ஏற்படுகிறது. இவர்களின் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகள், செயல்பாடுகளை வைத்து உடனடியாக சிகிச்சையை தொடங்குவது அவசியம். அப்படி அல்லாதபோது, சிறுவர்களுக்கு சில ஆண்டுகள் மன அழுத்தம், பதற்றம் ஏற்பட்டு ஆளுமை பிறழ்வு குறைபாடு ஏற்படும்.

இவர்களுக்கான சிகிச்சை என்பது அவர்களை எரிச்சல்படுத்தும் சூழலைத் தவிர்ப்பதும், அவர்களோடு பெற்றோர் தொடர்ச்சியாக பாதுகாப்பாக உணரச்செய்வதும்தான். கூடுதலாக மனநிலையை சமப்படுத்தும் மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரைப்படி சாப்பிடவேண்டும்.

 

**********************************************************************

எஸ்ஏடி – சீசனல் அஃபெக்டிவ் டிஸ்ஆர்டர்

சிலருக்கு வெயில் அடித்தால்தான் வேலை பார்க்க பிடிக்கும். சிலருக்கு மேகமூட்டமாக இருந்தால், மழை பெய்தால் உற்சாகமாக வேலை செய்வார்கள். சூழல்கள், பருவகாலங்கள் மாறும்போது உற்சாகமிழந்து வேலையில் கவனம் இழந்து போவது இக்குறைபாட்டைக் காட்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டும் இந்த குறைபாடு தலைகாட்டும். இதனை நீங்கள் அடையாளம் கண்டுபிடித்தால் கவனமாக விழிப்பாக இருந்து உங்களைக் காத்துக்கொள்ளலாம். இக்காலகட்டத்தில் ஒருவரின் இயல்பான உறக்க நேரம் நீளும். ஞாயிற்றுக்கிழமை போல காலையில் எழவே தோன்றாது. இயல்பான வேலைகளில் மனம் செல்லாது.

இதனை சரிசெய்ய நீங்கள் வெளிப்புறங்களுக்கு அடிக்கடி செல்லவேண்டும். அப்படி செல்லமுடியாதபோது, ஜன்னலின் அருகே நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். இது மனநிலையை சற்று அமைதிப்படுத்தும். அடிக்கடி உடல் மீது சூரிய ஒளி, வெளிப்புற காற்று படும்படி சூழலை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ப்ளூஸ்டார் ஏசிக்காற்றே சொர்க்கம் என்றால் உளவியல் மருத்துவரின் தெரபி, வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றை நீங்கள் பின்பற்ற வேண்டியிருக்கும்.

பொதுவாக பனிக்காலத்தில் இந்த அறிகுறிகளை சிலர் உணர்ந்திருப்பார்கள். சூரிய ஒளி நம் உடலில் படும்போது, மெலடோனின், செரடோனின் ஆகிய சுரப்பை அதிகரிக்கிறது. இதனால் தூக்கம், மற்றும் மனநிலை மாற்றம் ஆகியவை ஏற்படுகின்றன.

பனிக்காலத்தில் ஏற்படும் அறிகுறிகளுக்கு மாற்றாக கோடைக்காலத்தில் சூழல்கள் மாறுவதால் அப்படியே விஷயங்கள் தலைகீழாகின்றன. இதனால் வெயில் அடிப்பதால் தூக்கம் சரியாகும். சாப்பிடுவது குறைந்தாலும் வெளிப்புறத்தில் நண்பர்களைச் சந்திக்கச் செல்வது, விளையாடுவது என சுறுசுறுப்பு கூடியிருக்கும்.


கருத்துகள்