அரசு வேலையில் மனசாட்சிப்படி வேலை செய்வது கடினம்! - ஒரு துளி மணலில் ஓர் உலகு!


அன்புத்தோழர் ராமமூர்த்திக்கு, வணக்கம். நலமா?


தங்களது அபிமான மாறுவேட நடிகரின் படம் எப்படியோ தயாரிப்பு செலவை ஈடுகட்டிவிட்டது. அவரின் பல்வேறு வேட ஆசைகளால் ஐ படத்தில் அவரைத் தாக்கியதை விட நிறைய வைரஸ்கள் பார்வையாளர்களைத் தாக்கிவிடுகிறது. இதைத் தொடங்கி வைத்தது பரமக்குடி வைணவத்தமிழன்தான். இவர்களுக்கு மக்கள் கூட்டத்திற்கு நடுவே மாஸ்டர்பேஷன் செய்வது வழக்கமாகிவிட்டது. என்னைப் பார், என் புத்திசாலித்தனத்தைப் பார் என்று எரிச்சலடைய வைக்கிறார்கள்.


கல்யாணம் சாப்பாடு பற்றி நிறைய முறை புகழ்ந்து பேசியிருக்கிறீர்கள். இனி உங்கள் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு மற்றவர்கள் பேசப்போகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏறத்தாழ உங்கள் பெற்றோர் மற்றும் நீங்கள் கல்விக்காக வாங்கி கடன்களை பெருமளவு அடைத்திருப்பீர்கள். மீதி சேமிப்பை வைத்து திருமணம் செய்வதற்கான முயற்சிகளை தொடங்குங்கள். திருமண மார்க்கெட்டில் அரசு ஊழியருக்கான சலுகைகள் அதிகம். எனவே, அமெரிக்க வலைத்தளங்களில் உள்ள அம்சங்களை இங்கு தேடாமல் இருந்தால் சீக்கிரமே உங்களுக்கு மனைவி அமைய வாய்ப்புகள் உண்டு.


நிலமற்று இருக்கிற ஒருவன் பொருளாதாரத்தில் பிறரை சார்ந்து இருக்கும்படி சூழல் இருக்கும். நீங்கள் விரைவிலேயே இந்த சிக்கல்களிலிருந்து விடுபட்டு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு விட்டீர்கள். என்னைப் பொறுத்தவரை இது சாதனைதான். அம்பானி சாதித்தால்தான் சாதனையா? எந்த உதவிகளும் இல்லாத ஒருவர் சாதித்தாலும் சாதனைதான் என நான் நம்புகிறேன். சு.வேணுகோபால் சிறுகதைகளை படித்திருக்கிறீர்களா? படித்தால் உங்களுக்குப் பிடிக்கும்.


உடலுக்கான தேவைகள் என்பது வேறு. அது இயல்பாகவே நம்மை ஏதோ ஒருவிதத்தில் துரத்துகிறது. எல்லோருக்கும் பொதுவான விஷயங்கள் ஒற்றுமை அமைவது கடினம். எனக்கு பலமாக சில விஷயங்களை சொன்னால், பலவீனமாக மற்றொன்று இருக்கும். எனக்கு இப்போது வயிற்றுப்பாடு தாண்டி யோசிக்க ஏதுமில்லை. உங்கள் கனவில் இளவன முலைகள் முதுகில் அழுத்த பெண் ஒருத்தி பேசிக்கொண்டிருக்கிறாள் என்பீர்கள். எனக்கு கனவில் கூட இட்லித் தட்டில் ஆவி பறக்கும் காட்சி தாண்டி வேறு எதுவும் தெரிவதில்லை. நம் இருவரின் வயது ஒன்றுதான். ஆனால் வாழ்வின் தன்மைகள் வேறுவேறு. இது நம்மை பிரிக்கவில்லை. ஒன்றாக இணைத்திருக்கிறது என்பது பெரிய விந்தைதானே!


நன்றி!

சந்திப்போம்


.அன்பரசு


12.9.2016

******************************************************************************

இனிய தோழர் ராமமூர்த்திக்கு, வணக்கம். நலமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


நாம் இனி கடந்து வந்த இடங்களுக்கு நாமே நினைத்தாலும் செல்ல முடியாது. அந்தளவுக்கு அனைத்து சூழல்களும் மாறிவிட்டன. கடந்தவை கடந்தவைதான். கடந்தகால நினைவுகள் நமக்கு கிளர்ச்சி தரலாம். ஆனால் அதிலேயே நின்றுவிடமுடியாது. நிகழ்காலத்தின் மதிப்பு அதிகம். அதில் வாழ்வதுதான் சிறந்தது.


அரசுப் பணியாளராக நீங்கள் மக்களோடு மக்களாக இணைந்து பணி செய்வது நல்ல விஷயம். நிர்வாகரீதியாக அரசு அதிகாரிகளுக்கு கூறப்படுவது, நீங்கள் தனிச்சிறப்பானவர்கள். அவர்களிடமிருந்து விலகி இருந்தால்தான் அவர்கள் நிர்வகிக்க முடியும் என்று கூறப்படுவது உண்டு. கோப்புகள் இல்லாத அரசு அதிகாரிகளின் மேசையைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. அரசு என்றாலே தாமதமான நடவடிக்கை, உதவி என்பதால்தான் பலருக்கும் அதன் மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது.


நீங்கள் உங்கள் பணியை நேர்மையாக செய்வீர்கள் என நம்புகிறேன். மனசாட்சிப்படி வாங்கும் ஊதியத்திற்கான உழைப்பைக் கொடுத்தால் போதும். நான் யார், மற்றவர்கள் யார் என்று விளக்கிக்கொண்டிருக்க அவசியமில்லை. இது உங்கள் மனநிம்மதிக்கு அவசியமானது. ஒருவர் தன் வேலையை சரியாக செய்யத்தொடங்கினாலே அவருக்கு ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பும். சதிகளை மெல்ல நம்மைச்சுற்றி அரங்கேற்றுவார்கள். கவனம். நான் எழுதும் இந்த எழுத்துகளிலுள்ள கிளர்ச்சி கூட தற்காலிகமானதுதான். நீங்கள் உங்கள் மனதில் கொள்ளும் நம்பிக்கையே உங்களை முன்னேற்றும்.


ஆதிதிராவிடர்களின் வரலாறு பற்றிய படிக்க நந்தனின் பிள்ளைகள் என்ற நூலை வாங்கி படியுங்கள. விலை ரூ. 500. கிழக்கு பதிப்பகத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.


நன்றி!


சந்திப்போம்


அன்பரசு


28.9.2016

***********************************************************************

இனிய தோழர் ராமுவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?


உங்கள் பகுதியிலும் சிவாண்ணாவின் ரெமோ சுனாமி வீசிக் கொண்டிருக்கும். உங்களுக்கு அலைபேசியில் கூறியபடி படிநிலை சார்ந்த கவலைகள் இருக்கலாம். அரசு அலுவலகங்களில் மனசாட்சிப்படி பணி செய்வது கடினம். நீங்ஙள் பணி செய்வதும் அப்படிப்பட்ட சூழலில்தான் என்று நினைக்கிறேன். பணம் கிடைக்கிறது என்பதைத்தாண்டி நீங்கள் ஆசைப்பட்ட பணி என்பதால் கிடைக்கும் சந்தோஷம் தனி. இதையும் பணியில் ஹீரோஹோண்டா போல மைலேஜ் காட்டி முன்னேறுவது உங்கள் சமர்த்து, உங்களை உலகமே மனம் திறந்து பாராட்டவேண்டுமென்ற ஆசை அல்பன்லீபித்தனமானது.


27 வயதாகும் நீங்கள் திருமணம் பற்றி யோசித்தால் விரைவில் இந்த தடைகளை தாண்டிச் செல்லலாம். குடும்ப உறவுகளை அமைத்துக்கொண்டால் உங்களால் அலுவலக விஷயங்களை எளிதாக செய்துவிட முடியும். அப்புறம் இருக்கவே இருக்கிறது ரியாலிட்டி கிங்ஸில் அனல் தெறிக்கும் படங்கள். பார்த்து பன்னீர் தெளித்து மகிழுங்கள். இதோ சரஸ்வதி பூஜை. அடுத்து தீபாவளி. சந்தோஷமாக மஜா பண்ணுங்கள் சார்.


பயணம் ஒன்று போதாது என்ற நூலை வாசித்தேன். தீபன் என்பவரின் சுயசரிதை நூல். டைரிக் குறிப்பு என கொள்ளலாம். குறும்பட ஹீரோ போல இருக்கிறார் எழுத்தாளர். இயற்கை விவசாயம் செய்பவர், அது பற்றி அறிய இந்தியா முழுவதும் 22 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து இருக்கிறார். இவரை ல்தாக சைஆ இருக்கா என இச்சையோடு நெருங்க, ஆள் பதறுகிறார். சேலம் டாக்டரிடம் போகவேண்டிய ஆள். ஒரு கட்டத்தில் பய ண நூல் அதன் டிராக்கைவிட்டு விலகி விடுகிறது. பாடாவதியாக இழுக்கிறது. நூல் கிடைத்தாலும் படிக்காதீர்கள். நன்றி.


சந்திப்போம்.


.அன்பரசு

11. 101.2016

******************************************************************************

அன்புள்ள தோழர் அன்பரசுவுக்கு, வணக்கம்.


எனது வேலைகள், முயற்சி, வெற்றி பற்றி பாராட்டி எழுதியிருந்தீர்கள். அதற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இப்படி யாரும் என்னை பாராட்டியதில்லை. வேறு உதவிகள் எதனையும் வேண்டாமல் பாராட்டுவதற்கு தனி மனசு தேவைதான்.


அரசு வேலையில் நேர்மை என்பது தேவைதான். அதற்காக நான் சகாயம் ஐஏஎஸ் போல தலைக்கு மேல் போர்டு தொங்கப்போட்டு வேலை செய்வதை வெறுக்கிறேன். வேலையை சரியாக செய்தால் போதுமானது. நான் இப்படித்தான் என்று காட்டிக்கொண்டு, அவர் சொல்ல வருவது என்ன?


உங்களைப் போன்ற ஊடக ஆட்களுக்கு எழுதுவதற்கு யாராவது ஒரு ஆள் வேண்டும். சும்மாயிருப்பவர்களை கூட உசுப்பேற்றி விகடன் போல உருப்படாத விருதைக் கையில் கொடுத்து ஏதாவது செய்யவைப்பீர்கள். தன் வாழ்வில் நேர்மையாக செயல்படும் ஆட்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பது ஊடக ஆட்களுக்கு தெரியவில்லையா என்ன? ஆனால் இதை நீங்கள் ஏற்கமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். எனக்கு அவரின் போர்டு செயல்பாட்டில் விருப்பமில்லை.


பத்தாவது படிக்கும் வயதிலிருந்து இன்றுவரை நீங்கள் படித்த பிடித்த நூல்களை பரிந்துரை செய்து வருகிறீர்கள். இந்த அன்புக்கு என்றும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?


நன்றி!


.ராமமூர்த்தி


15.10.2016



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்