டில்லியில் நடந்த கலவரத்தில் மக்களைக் காப்பாற்றிய நாயகர்கள்!

மனிதாபிமான நாயகர்கள்

தலைநகரான டில்லியில் ஆளும்கட்சியான பாஜகவின் ஆதரவுடன் தூண்டிவிடப்பட்ட கலவரங்கள் ஏராளமான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டது. பொருட்களை காப்பாற்ற முடியாதபோதும் மனிதர்களை காப்பாற்ற பல மனிதாபிமானிகள் முயன்றனர். அவர்களில் சிலரைப் பார்ப்போம்.

முஸ்தாரி காட்டூன்

சந்து நகர், டில்லி

பிப்ரவரி 25ஆம் தேதி இரவில் முஸ்தாரி தனது மூன்று வயது வந்த பிள்ளைகள் மற்றும் கணவருடன் தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென அவரது போன் திரை பளிச்சிட, அழைப்பு ஒன்று வந்தது. முஸ்தாரியின் கணவர் தூக்கச்சடவோடு அதனை முஸ்தாரிக்கு கொடுத்தார்.

மறுமுனையில் பயம் தொனிக்க முஸ்தாரியின் உறவுக்காரர் மொகம்மது நியாய் பேசினார். எங்களைக் கொன்னுடுவாங்க போல பாட்டி. எப்படியாவது எங்களைக் காப்பாத்துங்க என பேசிய குரலில் பதற்றமும் பயமும் நிரம்பி வழிந்தது. முஸ்தாரி யோசிக்கவேயில்லை. வேகமாக எழுந்தவர், உடனே தெருவில் பாய்ந்தார். அப்போது அவருக்கு போனில் குரல் பேசிய செய்தி மட்டும்தான் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. முஸ்தாரி வசித்த பகுதி, டில்லியின் வடகிழக்கு பகுதியாகும். கஜூரி காஸ் பகுதியிருந்துதான் அவரது உறவினர் உதவி கேட்டிருந்தார். அப்போதுதான் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தரவிருந்தார். இந்துத்துவ வெறியர்கள் முஸ்லீம்கள் மீது நடத்திய வெறியாட்டத்தில் இந்து – முஸ்லீம்கள் என 53 பேர்களின் உயிர் பறிபோனது. ஏராளமான இந்து முஸ்லீம் வீடுகளும் நெருப்பால் பொசுக்கப்பட்டன.  

தன் உறவினர் வீடருகே போனபோதுதான் முஸ்தாரி கவனித்தார். கலவரத்தை அடக்கும் போலீசாரின் உடையில் சிலர் கொண்டிருப்பதை. அவர்களின் கையில் பெட்ரோல் குண்டு வைத்திருந்தனர். கண்ணீர் புகைகுண்டு. லத்தி ஆகியவையும் அவர்களிடம் இருந்தது. முக்கியமாக ஜெய் ஸ்ரீராம் என அடிவயிற்றிலிருது கத்திக்கொண்டிருந்தனர். அங்கிருந்த உறவினர்களைக் கூட்டிக்கொண்டு முஸ்தாரி வேகமாக தப்பி ஓடினார். தங்கள் வீட்டில் தங்கவைத்து உறவினர்களின் உயிரைக் காப்பாற்றினார். முஸ்தாரி பத்து முறைக்கு மேல் காவல்துறையினரை உதவிக்கு அழைத்தும் அவர்கள் உதவிக்கு வரவில்லை. வீடுகளின் மாடி வழியாக தப்பித்தவர்களில் ஒன்பது குடும்பங்களை தனது வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார் முஸ்தாரி. அவர் வீட்டை விட்டு வெளியே வந்தால் நெருப்பில் எரிக்கப்பட்ட வீடுகளும், உடைந்த கண்ணாடிகளுமாக போர்க்களம் போல அந்த இடம் காட்சி அளிக்கிறது.

பிரேம்காந்த் பாகல், ஃப்யூடா சாலை, டில்லி

இருபத்தைந்து வயதான பிரேம்காந்திற்கு 26ஆம் தேதி பிப்ரவரி சுயநினைவு திரும்பியது. உடல் முழுக்க இருந்த நெருப்புக்காயங்களால் வலி பொறுக்கமுடியாமல் முனகத் தொடங்கினார். ஏறத்தாழ ஏழு பேர்களை நெருப்பு சூழ்ந்த கட்டட்டத்திலிருந்து பிரேம்காந்த் காப்பாற்றி இருக்கிறார். இந்த முயற்சிக்காக அவரது உடலில் எழுபது சதவீதம் நெருப்பு பொசுக்கிவிட்டது.

தனியாக வசித்து வந்த பாகலுக்கு படிப்பு குறைவுதான். அனைத்து மதத்தினரும் ஒன்றாக வசித்து வந்த இடத்தில் அவர் எந்த அரசியல் பிரிவிலும் இல்லை. பிப்.25 அன்று 9.30க்கு அவரது நண்பர் வீட்டுக்கு சென்றபோதுதான் அங்கு இந்துத்துவ வெறியர்கள் முஸ்லீம் வீடுகளின் மீது கல்லெறியத் தொடங்கினர். வெறுப்புவாத பேச்சுகளைப் பேசியபடி பல்வேறு வீடுகளை சூறையாடி நெருப்புக்கு இரையாக்கினர். பிரேம்காந்தின் அருகிலுள்ள வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி தாக்கியது படுகொலை கும்பல். இதனால் அங்கிருந்த  ஏழு பேர்களும் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். அவர்களின் வீட்டுக் கதவை கல்லால் உடைத்து அவர்களைக் காப்பாற்றினார் பாகல். அப்போது துரதிர்ஷடவசமாக எரிவாயு உருளை வெடிக்க, பாகல் அந்த இடத்திலிருந்து தூக்கியெறிப்பட்டார்.

காவல்துறைய அழைத்தும் அவர்கள் அங்கு வரவில்லை. ஆம்புலன்ஸ்களை அழைத்தும் கூட அப்பகுதிக்கு வர மறுத்துவிட்டனர். ஆனாலும் நண்பர்கள் உதவியுடன் பாகல் உயிர்பிழைத்துவிட்டார். எனக்கு இந்த வன்முறையால் என்ன பயன் கிடைக்கும் என்று புரியவில்லை. இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றாக இருந்தால்தான் நல்லது. அவர்கள் அமைதியாக வாழ்வது நல்லது என்கிறார் பாகல்.  

மருத்துவர் அன்வர்

பழைய முஸ்தாபா பாத், டில்லி

டில்லியிலுள்ள அல்ஹிந்த் எனும் மருத்துவமனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மூன்று மாடிக் கட்டடமான அம்மருத்துவமனை பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி பரபரப்பான இடமாக மாறியது. காரணம், அங்கு சுற்றியுள்ள இஸ்லாமியர்கள் வீடு மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலால்.

அன்று அதிகாலை மூன்று மணியிலிருந்து நோயாளிகள் துப்பாக்கி குண்டுகள், ரப்பர் குண்டுகளால் தாக்கப்பட்டவர்கள் ஏறத்தாழ அறுநூறு பேருக்கும் மேல் வந்தனர். அவர்களுக்கு சிகிச்சை செய்வதற்குக் கூட முழுமையான வசதிகள் இங்கு கிடையாது. நாங்கள் பல்வேறு நோயாளிகளை காப்பாற்றுவதற்காக மத்திய உதவி எண்களை தொடர்பு கொண்டாலும் எந்த பதிலுமில்லை. காவல்துறைக்கு தொடர்புகொண்டாலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பின் தீவிரமாக சிகிச்சை தேவைப்படுபவர்களை நாங்களே ஆம்புலன்ஸ் வண்டிகளை தயார் செய்து கொண்டு செல்ல முயன்றோம். ஆனால் அதனை தடுத்த போலீசார், எங்கள் கான்ஸ்டபிளை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். அதற்கு பதிலாக உங்களில் பத்துபேர்களாவது சாகவேண்டும் என்று சொன்னார்கள். நான் அன்று பத்திரமாக வீட்டில் மனைவி, குழந்தைகளோடு இருந்திருக்கலாம். ஆனால் அன்று மக்கள் நிறையப்பேரை காப்பாற்ற முடிந்திருக்காது. எனது பணியை நான் சரியாக செய்தேன் என்று நினைக்கிறேன் என்றார் மருத்துவர் அன்வர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நீதிபதி முரளிதர் உத்தரவு மூலம் தடைகள் அகன்றன. இதனால் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அல்ஹிந்த் மருத்துவமனையிலிருந்து குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு மாற்றினர். காரணம் அம்மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் இருந்தன. மருத்துவர் அன்வருக்கு தேவையான சட்ட உதவிகளை வழக்குரைஞர் சுரூர் மந்தர் செய்தார்.

தற்போது அல்ஹிந்த் மருத்துவமனையில் வீடிழந்த மக்கள் ஐம்பது பேர் தங்கியுள்ளனர். இம்மக்களுக்கு தங்குமிடமும், வேலைவாய்ப்பையும் தேடித்தர முயல்கிறோம். இவர்களைப் பற்றிய தகவல்களை இணையத்தில் பதிவு செய்துவருகிறோம். என் அம்மா எனக்கு கூறியது நினைவுக்கு வருகிறது. நீ மருத்துவரான பின்னால், ஏழைகளுக்கு செய்யும் சிகிச்சைக்கு பணம் வாங்காதே என்றார். என்னளவில் நான் அதை பின்பற்றி அவரது வார்த்தையை காப்பாற்றியுள்ளதாகவே நினைக்கிறேன் என்கிறார் மருத்துவர் அன்வர். இவர் பீகாரிலுள்ள சம்பரான் மாவட்டத்திலிருந்து பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் டில்லிக்கு இடம்பெயர்ந்து வந்தவர் ஆவார்.

 

 நன்றி: ரீடர்ஸ் டைஜெஸ்ட் -சங்கமித்ரா சக்ரபோர்த்தி, இஷானி நந்தி, நவோரம் அனுஜா

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்