வனக்காவல் படையில் நடைபெறும் துரோகம் - வேதாளர் துப்பறிகிறார்!




வஞ்சகர் பிடியில் வனக்காவல் படை

கதை – மைக்கேல் டெரிஸ்

ஓவியம் ஜார்ஜ் ஒலேசென்

தமிழில்: தமிழ் டிஜிட்டல் காமிக்ஸ்

முகமூடி வீரர் அல்லது வேதாளர் வனக்காவல் படையை அமைத்து அதன் மூலம் எப்படி சலீம் பே என்ற சட்டவிரோத பயங்கரவாதியை பிடித்தார் என்பதுதான் கதை.

தமிழ் மொழிபெயர்ப்பு சிறப்பாக வந்துள்ளது. வனக்காவலர் படை எப்படி அமைக்கப்பட்டது என்ற வரலாற்றை சிறுவர்களுக்கு வேதாளர் விளக்குகிறார். அதன் வழியே கதை தொடங்குகிறது. ஆறாவது வேதாளர் வனக்காவலர் படையை கடற்கொள்ளையர்கள் மூலம் தொடங்குகிறார். அதாவது இவர்கள் திருந்தி வாழ்பவர்கள். இவர்களுக்கு இடையில் புகும் இரட்டை ஏஜெண்ட் ஒருவன் சலீம் பேயின் ஆள். அவன் மூலம் வனக்காவலர் படையின் நடவடிக்கைகளை சலீம் பே கண்டுபிடித்துவிடுகிறான். அந்த துரோகியை வனக்காவலர் படையில் கர்னல் செந்தாடியாரும், கமாண்டர் வேதாளரும் எப்படி பிடித்தார்கள், சலீம் பேயை எப்படி முறியடித்தார்கள் என்பதும்தான் கதை.

கதையில் வேதாளருக்கு பெரியளவு சண்டைகள் கிடையாது. முழுக்க  சலீம் பேயுக்கும் அவருக்கும் நடைபெறும் மூளை யுத்தம்தான் கதை. அதனால் பெரிய எதிர்பார்ப்புகளோடு கதையைப் படிக்கத் தொடங்கினால் ஏமாற்றம்தான் ஏற்படுகிறது. மற்றபடி கதையில் உள்ள ட்விஸ்டுகள் நன்றாக உள்ளன. சிறப்பாக பொருந்தி வருகின்றன. கதையும் விக்ரமன் படம்போல நிம்மதியைத் தருகிறது.

பதிமூன்றாவது வேதாளரின் சாகசத்தை திரும்ப கதையில் கொண்டு வந்துள்ளார்கள். இந்த சம்பவத்திலிருந்து வனக்காவலர் படையின் கமாண்டர் யார் என்பதை மறைத்து வைப்பது அங்கு முக்கிய அம்சமாகிறது என்பதையும் கூறியிருக்கிறார்கள்.

கோமாளிமேடை டீம்

கருத்துகள்