குடும்ப அட்டைக்கான பயனாளிகளை சேர்ப்பது மாநில அரசின் பணி! - ராம்விலாஸ் பஸ்வான்




Outlook India Photo Gallery - Ram Vilas Paswan
outlook




மொழிபெயர்ப்பு நேர்காணல்


ராம்விலாஸ் பஸ்வான், உணவு மற்றும் பொதுவழங்கல் துறை


கொரோனா பிரச்னையில் உங்கள் துறை சார்பாக என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?


கொரோனா கால துரித நடவடிக்கைகளுக்கு நான் இந்திய உணவுக்கழகம் மற்றும் அதன் தொழிலாளர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அவர்களின் நேரம் பார்க்காத உழைப்பினால்தான் இன்று அனைத்து மக்களுக்கும் உணவுப்பொருட்களை அனுப்பி வைக்க முடிந்திருக்கிறது.


இப்போது அரசிடம் உணவுப்பொருட்களை வழங்குவதில் எந்த தட்டுப்பாடும் இல்லை. நாங்கள் 1,404 ரயில் பெட்டிகளில் அனைத்து மாநிலங்களுக்கும் உணவுப்பொருட்களை அனுப்பி வைத்திருக்கிறோம். 39.41 லட்சம் மெட்ரிக் டன் உணவுப்பொருட்களை நாங்கள் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளோம். எங்களிடம் 589 டன்கள் உணவுப்பொருட்கள் சேமிப்பில் உள்ளன. மாதந்தோறும் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்க அறுபது லட்சம் டன்கள் உணவுப் பொருட்கள் தேவை. மாநில அரசுகளுக்கு கோதுமை கிலோ ஒன்றுக்கு 21 ரூபாய்க்கும், அரிசியை 22 கிலோவுக்கும் வழங்குகிறோம். இது குறைந்தபட்ச தொகையாகும்.

மேலும் மாநிலங்கள் தங்கள் தேவைக்கு எவ்வளவு உணவு தானியங்களை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம். இதனால் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகளும் இதனைப் பயன்படுத்தி உணவு தானியங்களைப் பெற முடியும்.


2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை பயன்படுத்தித்தான் உணவு அமைச்சகம் இன்னும் உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறதே?


நீங்கள் கூறியபடி 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி 50 சதவீத நகர மக்களும், 75 சதவீத கிராம மக்களும் இதன் அடிப்படையில் உணவுப்பொருட்களை பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவர். இதன்படி 8, 13, 94,400 பேர்தான் பயனாளிகள். பயனாளிகளின் எண்ணிக்கையை கூட்டுவது என்பது மாநில அரசுகளின் பொறுப்புதான். அவர்கள்தான் இதற்கான முயற்சிகளை செய்யவேண்டும். தற்போது வரை மாநில அரசுகள் 39.89 லட்சம் பயனாளர்கள் அதிகரித்துள்ளன.


ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், மகாராஷ்டிரா, லட்சத்தீவுகள், லடாக், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், கோவா, ஹரியானா, மேகாலயா, உத்தர்காண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே தங்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி உணவுப்பொருட்களைப் பெற்றுள்ளன.


பீகார், தமிழ்நாடு மாநிலங்கள் முறையே 14 லட்சம், 7 லட்சம் என புதிய குடும்ப அட்டைகளை வழங்கியுள்ளன. உணவு வழங்கல்துறை பற்றாக்குறை உள்ள இதுபோன்ற மாநிலங்களுக்கு கடிதங்களை எழுதியுள்ளோம். விரைவில் இந்த குறைபாடு தீரும் என நம்பலாம்.


மத்திய அரசு குடும்ப அட்டைகளை அதிகரிக்க கூடாது. அதிக பயனாளிகளை சேர்க்க கூடாது என்று கூறவில்லை. மாநில அரசுகள் அதற்கான பட்டியலை வழங்கினால் அவர்களுக்கும் சேர்த்து உணவுப்பொருட்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.


உங்கள் அமைச்சகம் ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தை உருவாக்கியது. இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களுக்காக கொண்டு வரப்பட்ட அந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கிறதா?


கொரோனா பெருந்தொற்று பிரச்னையால் அத்திட்டத்தை நாங்கள் ஒத்தி வைத்துள்ளோம். பீகாரைச்சேர்ந்த தொழிலாளர் குஜராத்தில் பணி செய்தால் கூட அவர் உணவுப்பொருட்களை ரேஷனில் குறைந்த விலைக்கு வாங்கி பயன்பெற முடியும். அதற்கு உதவத்தான் இந்த ஏற்பாடு. இந்தியாவில் இதுவரை 12 மாநிலங்கள் இத்திட்டத்தை ஏற்றுள்ளன. இதற்கான இ- பிஓஎஸ் கருவிகளை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளோம். இத்திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்களுக்கு ஏன் அமல்படுத்தவில்லை என்று கேள்வி கேட்டு பல்வேறு நினைவுறுத்தல் கடிதங்களை எழுதி வருகிறோம். நோய் அச்சுறுத்தல் நீங்கியதும் விரைவில் ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை திட்டம் முழுவீச்சில் செயல்பாட்டுக்கு வரும். மாநில அரசுகளின் ஈடுபாட்டைப் பொறுத்துத்தான் இந்த திட்டத்தின் வெற்றி இருக்கிறது.


ஊரடங்கு காலம் நீள்வது மிகவும் கொடுமையானது. இதனால் வேலையின்றி மக்கள் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, உணவு வழங்கல்துறை, நியாய விலைக்கடைகள் வழியாக அனைத்து மக்களுக்கும் உணவுப்பொருட்களை வழங்க முன்வருமா?


நீங்கள் கூறுவது மிகப்பெரிய முடிவு. இதனை கேபினட் அமைச்சரவை கூடித்தான் முடிவெடுக்க முடியும். நான் மட்டும் தனியாக என் கருத்தை கூற முடியாது. என்னைப் பொறுத்தவரை நம் நாட்டின் மக்கள் தொகை அதிகம். எனவே பொதுவிநியோக முறையில் யாருக்கு தேவையோ அவர்களுக்கு கொடுத்தால் போதும் என்று நினைக்கிறேன்.


இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களின் வீட்டுக்குச் செல்ல மத்திய அரசு ஏன் உதவவில்லை?


பெருந்தொற்று வேகமாக பரவி வரும்போது அனைவருக்குமே வீட்டிலுள்ளவர்களுக்கு என்னாச்சோ என்று பதற்றம் வரும்தான். அதிலும் அவர்கள் வீட்டை விட்டு தூரமாக இருக்கிறார்கள். அவர்களை அரசு தங்கவைத்து உணவு, தேவையான பொருட்களை வழங்கி வருகிறது. அவர்களை ஆதரவற்று விட்டுவிடவில்லை. மேலும் ஊரடங்கு இருக்கும்போது அத்தனை தொழிலாளர்களையும் நெருக்கமாக ஏற்றிக்கொண்டு அவர்களின் இடங்களுக்கு கொண்டு செல்வது ஆபத்தானது. எனவே, அவர்கள் பெருந்தொற்று பிர்சனை முடிந்தபிறகே வீட்டுக்குச் செல்ல முடியும்.


நன்றி: இந்து ஆங்கிலம், சோபியானா கே நாயர்.


கருத்துகள்