ஆவியுலக குடும்பத்தை நகர மக்கள் ஏற்கும் கதை! - தி ஆடம்ஸ் ஃபேமிலி - அனிமேஷன்



தி ஆடம்ஸ் ஃபேமிலி
இயக்கம் - கான்ராட் வெர்னன், கிரேக் தியர்னன்
திரைக்கதை - மேட் லைபெர்மன்
கதை - மேட் லைபர்மன், கான்ராட் வெர்னன், எரிகா ரிவினோஜா
கதாபாத்திர உருவாக்கம் - சார்லஸ் ஆடம்ஸ்
இசை - மிச்செல் டன்னா டெஃப் டன்னா


ஆடம்ஸ் ஃபேமிலி என்பது அனிமேஷன் படம். ஆடம்ஸ் குடும்பம் என்பது கோம்ஸ் ஆடம்ஸ், மார்ட்டிசியா, வெட்னஸ்டே, பக்ஸ்லி என்ற ஆவியுலக குடும்பம் பற்றியது.

இவர்கள் இரவில் வாழ்பவர்கள். யாரையும் தொந்தரவு செய்பவர்களல்ல. ஆனால் இவர்களின் திகில் தரும் உடை, சடங்குகளால் இவர்கள் வாழும் ஊரில் துரத்தப்படுகிறார்கள். எனவே கோம்ஸ், மார்டிசியா திருமண விழாவில் நடக்கும் ஊராரின் களேபரத்தால் வாழ்ந்த ஊரை விட்டு தொலைதூரம் தள்ளிச்செல்ல நேரிடுகிறது. நியூஜெர்ஸி செல்லும் வழியில் ஒரு விபத்து நேரிடுகிறது. மனநல நோயாளி ஒருவர் மீது மோதிவிடுகிறார்கள். அவர் வாழ்ந்துவந்த இடம் படுமோசமாகவும், தனியாகவும் இருக்க அங்கேயே இடம்பெயர்கிறது ஆடம்ஸ் குடும்பம். அங்கு அவர்கள் அடிக்கும் லூட்டிதான் படம்.


ஆடம்ஸ் மொத்த குடும்பமே திகில் ஏற்படுத்துபவர்கள்தான். நிறமே இல்லாத கருப்பு நிற உடைகளை மட்டும் உடுத்துவது, எப்போதும் இறுக்கமாக இருப்பது என வாழ்கிறார்கள். காரணம் அவர்கள் நகர மனிதர்கள் ஆபத்தானவர்கள் என்று எண்ணுவதால்தான். இவர்களுக்கு ஆபத்து நகரத்தில் வீடுகளை கட்டி விற்கும் பெண்மணியால் வருகிறது. அதனை சமாளித்து அங்கே வாழ்ந்தார்களா, ஊராரின் மிரட்டல்களுக்கு பயந்த ஓடினார்களா என்பதுதான் கதை.


கல்லறையில் அமர்ந்து டீ பார்ட்டி வைப்பது, அம்பால் குறிவைத்து உறவுகளின் மீது அடிப்பது, தந்தை மீது வெடிகுண்டுகளை வீசுவது என ஆடம்ஸ் குடும்பம் வேறுபட்டு இருக்கிறது. ஆடம்ஸ் குடும்பமே எதிர்பார்ப்பது அவர்களது ஆண் வாரிசு முழு ஆண்மகனாக மாறிவிட்டான் என்பதை ஊருக்குச் சொல்லும் மசூர்கா சடங்கைத்தான். அதை பக்ஸ்லி ஒழுங்காக செய்தானா என்பதை நோக்கியே கதை நகர்கிறது. இதற்கிடையே வெட்னஸ்டே நகர பள்ளியில் படிக்க விரும்புகிறாள். ஆனால் அவளது அம்மா அது தவறு. மனிதர்கள் ஆபத்தானவர்கள் என எச்சரிக்கிறாள். பக்ஸ்லி வாள்வீச்சு செய்து தன்னை நிரூபிக்கும் போது மார்ட்டிஷியா நினைத்தபடி ஆபத்தும் வருகிறது. அதை எப்படி சமாளித்தார்கள் என்பதுதான் இறுதிக்காட்சி.


திகில் வகையைச் சேர்ந்த அனிமேஷன் படம். சின்ன சின்ன கதாபாத்திரங்கையும் நன்கு வடிவமைத்திருக்கிறார்கள். திங் எனும் மணிக்கட்டு படம் முழுக்க வருகிறது. அப்புறம் சிறுவர்களை எழுப்பும் மரம். தினமும் காபி குடித்துவிட்டு கெட்அவுட் என கத்தும் வீட்டில் இருக்கும் தொன்மையான ஆவி. எனவே படம் பார்க்கும் போது சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை.

கோமாளிமேடை டீம்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்