போராட்டங்களை அவதூறு செய்வது பார்ப்பன ஊடக வழக்கம்தான்!



புதிய போராட்டக்கார தோழருக்கு. வாழ்த்துகள்.


நவம்பர் மாதம் என்பதால் போராட்டமாக என தெரியவில்லை. தங்களது பணி பற்றி சொன்னீர்கள். இத்துறை பற்றி முத்தாரத்தில் கூட எழுதலாம். யோசனை இருக்கிறது. பார்ப்போம். அரசு அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பி காங்கேயத்தின் சேகுவேரா ஆகிவிட்டீர்கள். போராட்டங்கள் தொழிலாளர்களின் வேலை நேரத்தை முறைப்படுத்தியது. அவர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்தது உண்மைதான். ஆனால் இன்றைய காலத்தில் போராட்டங்களின் மூலமே அரசியல் தலைவர்களாகி இருப்பவர்கள் அதனை நாசூக்காக நசுக்கும் தந்திரங்களை கற்றவர்களாக இருக்கிறார்கள்.


எனக்கு இந்த போராட்டங்களில் ஆர்வம் கிடையாது. இவை இன்று சுயநலனிற்கான தனிப்பட்ட ஒருவரை முன்னிறுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. சரி விடுங்கள். நீங்கள் உங்கள் ஊழியர்கள் சங்கம் மூலமாக உரிமைகளை பெற, சலுகைகளை பெற போராடித்தான் ஆகவேண்டும். சில விஷயங்களை அரசின் கவனதிதற்கு கொண்டு செல்ல இதெல்லாம் தேவைதான். எனக்கும் போராட்டங்களைப் பற்றிய திரைப்பட காட்சிகளைப் பார்த்தாலே கொட்டாவி வருகிறது. மோடியின் காலத்தில் எந்த போராட்டும் இருக்காது. அத்தனையும் உடைத்து எறிந்துவிடுவார்கள்.


வாசிப்பு பற்றி பேசுவோம். எங்கள் ஆசிரியராக மாறியிருக்கும் சிவராமன் அவர்கள் குழும இதழ்களில் நான்கு தொடர்களை எழுதி வருகிறார். அத்தனையையும் எப்படி நினைவு வைத்து எழுதுகிறாரோ ஆச்சரியமாக இருக்கிறது. தீவிரமாக ஆங்கில, தமிழ் நூல்களையும வாசித்து வருபவர். அவரின் உழைப்பை எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரின் நூல்கள், கட்டுரை பிடித்திருந்தால் அவருக்கு மின்னஞ்சலில் எழுதி அனுப்பிவிடுவேன். நேரடியாக பேசுவது கடினம். ஏதாவது உளறி வைப்பதே என் வழக்கம். எங்காவது போய்விட்டு வரவேண்டும். என்னமோ போல் இருக்கிறது. பார்ப்போம்.


நன்றி!


.அன்பரசு

10.11.2016

*******************************************************************************

இனிய தோழர் அ.ராமமூர்த்திக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?


இதழ் ஆசிரியர் வயிற்றிலுள்ள பிரச்னை காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டு விடுப்பில் இருக்கிறார். இதனால் தற்காலிக பொறுப்பை பொறுப்பாசிரியர் ஏற்றிருக்கிறார். அவருக்கு ஆபீசில் கடன் வாங்கவும், படம் பார்க்கச் செல்வதுமே தெரியும். வார இதழ் ஃபார்ம் பற்றி புரிபடவே அவருக்கு சில நாட்கள் தேவைப்பட்டன. அவர் எதிர்பார்க்கும் தரத்திற்கு விகடன் ஆட்கள் மட்டுமே எழுத முடியும். அனைவரும தடுமாறி மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


வாசிப்பதையும் வாழ்க்கையையம் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஓஷோ நூலில் உள்ள விஷயங்கள் மனதிற்கானவை. அவற்றை விட மேலானவற்றை உங்களுக்கு மக்கள் கற்றுத்தருவார்கள். நூலைப்படித்துவிட்டு நிகழ்காலத்தோடு துண்டிக்கப்பட்டு விடக்கூடாது. பல்வேறு பொறுப்புகளை நாம் விரும்பி ஏற்கவில்லை. அவை சரியான காலத்தில் நமது தோளில் ஏற்றப்படும். அதை வைத்துக்கொண்டு ஓடுவதும். நடப்பதும் நமது இஷ்டம். நண்பர்களிடமும் பகிர முடியாது தனித்துயர், பிரச்னைகள் நம் அனைவரிடமும் உண்டு. மழையோடு மழையாக அழுது தீர்த்துவிட்டு செயலாற்றுவதே சிறந்த வழி. நமக்கே நமக்கென சிறிது நேரத்தை ஒதுக்கி சும்மாவேனும் உட்கார்ந்திருக்கலாம். எந்த மேலாண்மை நூலை படித்தாலும் உங்களை முழுமையாக ஒழுங்கு செய்துகொள்ள முடியாது,. காரணம், அதனை மேற்கொள்ளவேண்டியது நீங்க்ள்தானே. பிறர் சொன்னாலும் செய்யவேண்டியது நீங்கள்தான்.


கசக்கினாலும், கறை படிந்தாலும் கரன்சி தாளின் மதிப்பு குறையாது. மதிப்புகள் வீழ்த்தப்பட்ட காலம் இது. அனைத்தும் பணம், சம்பாதிக்கும் திறன் ஆகியவற்றால் அளவிடப்படுகிறது. காலம் மாறக்கூடும். பார்ப்போம்.


நன்றி


சந்திப்போம்


.அன்பரசு

18.11.2016

*********************************************************

இனிய தோழர் அன்பரசுவுக்கு, வணக்கம். 


நீங்கள் படிக்கும் பல்வேறு பார்ப்பன பத்திரிகைகள் காரணமாக நீங்கள் அவர்களின் சிந்தனைகளுக்கு உள்ளாகி விட்டிர்கள். நீங்கள் தங்கியிருக்கும் இடமும் மயிலாப்பூர், கே.கே.நகர், திருவல்லிக்கேணி என செல்வ வளம் நிறைந்தவர்களின் பகுதி. எனவே நீங்கள் சமூகத்தைப் பாரக்கும் பார்வை வேறு. சாதாரண நிலையில் உள்ள, ஒவ்வொரு முறையும் என் சாதியால் வாய்ப்புகள் மறுக்கப்படும் நிலையில் உள்ள என பார்வை வேறு. 

போராட்டங்களை இயல்பாகவே விகடன், குமுதம், துக்ளக் போன்ற ஊடகங்கள் அவதூறு செய்வது வழக்கம். தங்களது நிலையை சம ப்படுத்திக்கொள்ள உள்ளுக்குள் சில இடதுசாரி ஆட்களை வைத்து சில கட்டுரைகளை எழுத சொல்லுவார்கள். ஆனால் வலதுசாரி மக்கள் விரோத கட்டுரைகள் வெளியான அடுத்த வாரமே மக்கள் நலன்மேல் அக்கறையான கட்டுரைகள் வெளியாகும். இவற்றை விகடன் மிக தந்திரமாக செய்யும். காரணம், அவர்களின் வர்க்கம்தான். தான்தான் அனைத்து மக்களுக்கும் வழங்க கூடியவனாக இருக்கிறேன் என்று நினைக்கும் அகங்காரம்தான் காரணம்.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்கவே போராடாமல் என்ன விஷயங்கள் கிடைத்திருக்கின்றன. வேலைநேரம், விடுமுறை போன்றவை போராடித்தான் கிடைத்துள்ளன. இல்லையெனில் ஞாயிற்றுக்கிழமையும் கூட வேலை நாளாகவே இருந்திருக்கும். எங்களுக்கான சலுகைகளை நாங்கள் போராடித்தான் அடையவேண்டும். எங்கள் புள்ளியியல் துறையின் தகவல்களை வைத்துக்கொண்டுதான் மத்திய அரசு நிதி ஒதுக்கீடுகளை செய்கிறது. பயிர்காப்பீடு திட்டத்தை அமல்செய்வதும் இதன்படிதான். ஆனால் அரசு எங்களுக்கு வழங்கவேண்டிய ஊதிய நிலுவைகளை சரியாக வழங்குவதில்லை. துறையிலுள்ள சிலர் வேளாண்துறையோடு இணைந்து ஊழலில் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மைதான். அதற்கான விளைவை அவர்களே அனுபவிப்பார்கள். நான் இதற்காக அனைவரும் இணைந்து போராடும் போராட்டத்தை புறக்கணிக்கப் போவதில்லை. அமைப்பாக திரளாதபோது அடிப்படை உரிமைகளை மெல்ல இழக்க நேரிடும். இப்போது நாங்கள் செய்யும் பல்வேறு ஆய்வுகளை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. இத்துறை இயக்குநரான எழுத்தாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரி இதுபற்றி வாயே திறப்பதில்லை. வெளியில் கேட்டால் ஏராளமான செயல்பாடுகளை செய்தவர் என்பார்கள். ஆனால் இத்துறையில் என்ன பிரச்னையோ, தன் பணியை காப்பாற்றிக்கொள்வதில் கவனமாக இருக்கிறார். 

இப்போது இதழை உங்கள் விருப்பப்படி நடத்துவதற்கு உங்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கும். ஜமாயுங்கள். என்னென்ன விஷயங்களை செய்ய முடியுமோ செய்துவிடுங்கள். அப்புறம் வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ? படிப்பதிலும் அதனை செயல்படுத்துவதிலும் நிறைய முறை மூர்க்கமாகவே நடந்துகொண்டுள்ளேன். அது என்னுடைய பாணி. நீங்கள் நிறைய முறை எடுத்து சொல்லியிருக்கிறீர்கள். நான் எதையும் காதில் போட்டுக்கொண்டதில்லை. பல அடிகள் பட்டபிறகு நான் நிறைய விஷயங்களை மாற்றிக்கொண்டுள்ளேன். ஓஷோ விஷயங்களும் அப்படித்தான். அதனை வாழ்வின் பல்வேறு நிலைகளில் படித்துக்கொண்டே இருக்கவேண்டும் என நினைக்கிறேன். பார்ப்போம். 

உடலை பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி!


அ.ராமமூர்த்தி

22.11.2016




 




கருத்துகள்