இந்திய தொன்மை மீது வெளிச்சம் பாய்ச்சும் அறிவியல் புனைகதைகள் - விசும்பு - ஜெயமோகன்
விசும்பு
அறிவியல் புனைகதைகள் - ஜெயமோகன்
இந்த தொகுப்பில் இருக்கும் கதைகள் அத்தனையும் இந்திய தொன்மை பற்றிய அழகுடன், நவீனகாலத்தில் அது எப்படி பார்க்கப்படுகிறது என்ற ஆராய்ச்சித் தன்மையுடன் எழுதப்பட்டிருக்கிறது. இதனால் கதை தொடங்கும்போது தொன்மை - நவீனத்திற்கான மோதல்களை கதாபாத்திரங்கள் கொண்டிருக்கின்றன. இதற்கு தளவாய் - நகரத்திலிருந்து அவரைக்காண வரும் நண்பர்களின் பேச்சு, டாக்டர் பத்மநாபன் - நாராயணன், எகிப்தில் நண்பர்கள் தொன்மை இனக்குழு பற்றியும் தங்களது தொழில் பற்றியும் பேசிக்கொள்வது என அமைந்துள்ளது.
இந்திய தொன்மை ரீதியான நம்பிக்கைகள், வலிமைகள் ஆகியவை வலிமையுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. கதையின் போக்கிலும் அவற்றின் முடிவிலும் வாசிக்கும் வாசகர்கள் ஒரு கட்டத்தில் அதில் லயித்து அயர்ந்து போகும் தன்மையும் உருவாகிறது இத்தொகுப்பின் வெற்றி எனலாம். தளவாய் எய்ட்ஸூக்கு மருந்து கண்டுபிடிப்பது ஆராய்ச்சியாளரின் பங்கு போன்றது. ஆனால் அதை உலகிற்கு அறிமுகப்படுத்த மாட்டேன் என்று சொல்லும் தர்க்கம் நம்மால் மறுக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இக்கதை எக்காலத்திற்கும் பொருந்தும் தர்க்கத்தை கொண்டுள்ளது. ஜீவம், அஜீவம், கதிர்வீச்சு மருந்து என சென்றால் அடுத்து மருந்துகளை எதிலிருந்து உருவாக்குவது, மனிதர்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் கிருமிகளை எதிர்க்காமலேயே வாழ்வது நல்லதுதான் என்ற கருத்துக்கு நம்மை கொண்டு செல்கிறது.
எதிர்த்து பேச முடியாத தர்க்கத்தை முதல் கதையிலே வைத்துவிடுகிறார் ஜெயமோகன். அந்த சிந்தனையை மிகவும் சிரமப்பட்டு கலைத்தால்தான் அடுத்தடுத்து செல்ல முடிகிறது.
பறவை ஆராய்ச்சி பற்றிய கதை முதலில் எள்ளலாக தொடங்கினாலும், ஒரு புள்ளியை கலைத்தால் ஒட்டுமொத்த கோலமும் தாறுமாறு ஆவது போல அனைத்து விஷயங்களும் மாறுவது அதில் மறைந்துள்ள தீவிரமான தன்மையைக் காட்டுகிறது. நஞ்சுண்ட ராவ், பறவை ஆராய்ச்சியில் பெரிய ஆள் என்று சொல்ல முடியாவிட்டாலும், இயற்கையின் கணக்குகளை தன் விரிவான தன்மை உரைக்கும் போதே நமக்கு ஆராய்ச்சி என்ற பெயரில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என கேள்வி வந்துவிடுகிறது. இந்த கதையின் தலைப்புதான் விசும்பு. நினைத்துப் பார்க்க முடியாத திகைப்பை கதையின் முடிவு ஏற்படுத்துகிறது. இயற்கையை புரிந்துகொண்டுவிட்டோம். இவ்வளவுதான் இது என நினைக்கும் மேற்கத்திய மனநிலைய எள்ளி நகையாடுவது போன்ற கதை இது. கதை அறிவியல் சார்ந்த விஷயங்களை பேசுகிறது என்றாலும் தமிழ் முதுகலை படித்தவனுக்கு சரியான வேலை கிடைக்காமல் பறவை ஆராய்ச்சி நிலையத்திற்கு வேலைக்கு வருவது, ஆராய்ச்சியாளர்களின் மனநிலை, கண்டுபிடிப்பதற்கான வேட்கை மனிதர்களை எப்படி பித்தாக்குகிறது என கேலியும் கிண்டலுமாக கதை சொல்லுகிறது.
துவாத்மர்கள் கதை வரலாற்று நோக்கில் மெல்ல தொடங்கி, நவீன காலம் வரை பிளவுபட்ட மனம் என்பது எப்படியிருக்கிறது, அதனை ஆராய்ச்சி நோக்கில் எப்படி பார்க்கிறார்கள் என்பதை வரலாற்று ரீதியில் திகைப்பூட்டும் விதமாக கூறியிருக்கிறார்.
இன்றுவரையிலும் கூட பல்வேறு தியான மையங்கள், குருக்களின் ஆசிரமங்களில் தியானம் செய்வதற்கான செய்முறைகளில் வேதிப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வந்துகொண்டே இருக்கிறது. உளவியல் சார்ந்த கோணத்தில் இக்கதையை அணுகினால் உண்மையில் இறையருள் பெற்ற சுக்லர், காமத்தின் வீச்சாக கோபத்தின் கண் திறப்பாக உள்ள சியாமகர் ஆகிய இருவேறு பிளவுபட்ட பாத்திரங்கள் அனைவரிடமும் உண்டு என்றுதான் சொல்லவேண்டும். இவற்றை வெளிக்கொண்டு வருவது நடைபெறும் சில சமூக நிகழ்வுகள்தான். சைவமோ, அசைவமோ எந்த வகை உணவுகளை சாப்பிட்டாலும் மனதில் இயல்பாகவே வன்முறை உணர்வும் பிற உணர்வுகளைப் போல ஒரு பகுதிதான். அது தூண்டப்படும்போது என்ன விளைவு என்பதை இந்தியாவில் நடந்த கலவரங்களே உணர்த்தும். கும்பலாக கொலை செய்ய இறங்கும்போது மனதிற்கு கிடைக்கும் கட்டற்ற மகிழ்ச்சி, தனியாக குற்றங்களை செய்யும்போது ஒருவருக்கு கிடைப்பதில்லை. மனசாட்சி, கருணை, இரக்கம் ஆகியவற்றை முறித்துப்போட வேதிப்பொருட்கள் தேவை. அதற்குத்தான் மது, போதைப்பொருட்கள் பயன்படுகின்றன.
மனதை வலுவாக்கவும், ஒடுக்கவும் செய்யும் முயற்சிகள் எப்படி விபரீதமான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை பீதியூட்டும்படி சொல்கிறது இச்சிறுகதை. இக்கதையைப் போன்ற மனதின் இன்னொரு பக்கத்தைச் சொல்வதுதான் மருத்துவர் ஒருவர், தன் வேலைக்காரனின் மூளைத்திறனை அதிகரிக்க பயன்படுத்தும் மருந்து பற்றியது. எளிமையான ஆராய்ச்சி பற்றியது போல தொடங்கி அப்படியே திகைப்பூட்டும் மருத்துவ ஆராய்ச்சியாக கதை மாறுகிறது.
இதில் வாசிக்க பிடித்த அம்சம், ஒரு இடத்தில் பிறருக்கு இடையூறாக இன்றி அந்த இடத்தின் பொருளாகவே மாறிவிடுவது. மருத்துவரின் வீட்டில் வேலைக்காரனாக இருந்து ஞானியாக மாறுபவரின் மீது சிறு விலங்குகள் ஏறி விளையாடுவதை எடுத்துக்காட்டாக ஜெயமோகன் காட்டியிருக்கிறார். இதன்போக்கில் ரமணர் போன்றவரின் அருகில் செல்லும்போதே பக்தர்கள் கேள்விகளற்று போய், கண்ணீர் மல்க உள்ளிருக்கும் அனைத்து கரைந்து வெளியே வருவதை துல்லியமான தர்க்கமாக முன் வைக்கிறார். கள்ளமற்ற குழந்தைமை ஒன்றுடன், தூய்மையான இயற்கையுடன் மனிதர்கள் பேசுவதற்கு ஏதுமின்றி வாயடைத்து நிற்பது நினைவுக்கு வருகிறது. அங்கு எந்த தந்திரங்களும், போலிகளும் தேவையில்லை. இந்த பிரமிப்புதான் நம் உள்ளுக்குள் உணர்ச்சிகளின் பிரவாகமாக கொந்தளிக்க தன்னிச்சையாக கண்ணீர் சொரிகிறது. ஆனால் இறுதியில் மருத்துவர் மூளையின் குறிப்பிட்ட பாகத்தை மட்டும் தூண்டி ஒருவரை பரிசோதிப்பது மனதின் இருண்மையான பக்கத்திற்கு சான்று. தூய்மையான ஒன்றை அழிப்பதற்கான ஏற்பாடு என்று கூட சொல்லலாம்.
அறிவில்
புனைகதை தொகுப்பை முன்னமே
படித்தாலும்,
ஒவ்வொரு
முறையும் நாம் யோசிப்பதற்கான
விஷயங்கள் ஜெயமோகன் உருவாக்கித்
தந்துகொண்டே இருக்கிறார்.
சில
விஷயங்களை புதிதாக யோசிக்க
வைக்கிறார் என்பது அவரது
எழுத்துகளை வாசிக்க ஆர்வமூட்டுகிறது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக