சைக்கோ கொலைகாரனை விரட்டி வேட்டையாடும் போலீஸ்காரரும், மாஃபியா தலைவரும்! - தி கேங்ஸ்டர், தி காப், தி டெவில்







Giveaway - Win The Gangster, The Cop, The Devil on Digital ...
ஃபிளிக்கரிங் மித்








தி கேங்ஸ்டர், தி காப், தி டெவில்

கொரியா 2019

இயக்குநர் : லீ வோன் டே

ஒளிப்பதிவு: பார்க் சியூ சியூங்

இசை: ஜோ யாங் வூக்


கொரியாவில் முன்னால் செல்லும் காரை இடித்து ஒருவரை கீழிறங்கச் செய்து அவரை கொலை செய்கிறான் கொலைகாரன் ஒருவன். காவல்துறை இந்த வழக்கை தனித்தனியாக வழக்குகளாக கருதுகிறது. ஆனால் ஒரு போலீஸ்காரர் மட்டும் இந்த வழக்குகளை தொடர் கொலைகள் என்று கூறுகிறார். அதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார். ஆனால் அவரின் மேலதிகாரி அதனை ஏற்க மறுக்கிறார். தனித்தனி கொலைகள் என்கிறார். இதனால் அவருக்கும் மேலதிகாரிக்கும் முட்டல் மோதலாகிறது. மேலதிகாரி, கடத்தல் வழக்கு ஒன்று உள்ளது. முதலில் அதைப்பார். இந்த வழக்கை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கிறேன் என்கிறார். அப்போது சைக்கோ கொலைகாரன் அடுத்து கேங்ஸ்டரை கொல்ல முயல்கிறான். ஆனால் கேங்ஸ்டர் திருப்பி தாக்கியதால் கைகளில் மார்பிலும் காயமுற்று கொலைமுயற்சி தோற்றுப்போக அங்கிருந்து தப்பி ஓடிவிடுகிறான்.

யார் தன்னை தாக்கியது என அறிய கேங்ஸ்டர் விரும்புகிறான். எதிரிகளா அல்லது வேறு யாருமா என்று அறிய நினைத்து தன் குழுவை நகரம் முழுக்க அனுப்புகிறான். கூடுதலாக காவல்துறையிலுள்ள தனக்கு தெரிந்த காவல்துறை டிடெக்டிவ்வை அணுகுகிறான். அவர் வேறு யாருமல்ல, மேலதிகாரியிடம் ஆவேசமாக சண்டை போட்டவர்தான். அவருக்கு கேங்ஸடரோடு இணைந்து செல்வதில் விருப்பம் இல்லை. அவன் ஒரு குற்றவாளி என திட்டினாலும் அவனது ஆட்கள் தேடித்தரும் தகவல்கள் அவரை அசர வைக்கின்றன. இதனால் தனது நண்பர்கள் மூவரோடு இணைந்து சைக்கோ கொலைகாரனை தேடுகிறார்கள். அதில் ஏறத்தாழ அவனை நெருங்கியும் விடுகிறார்கள். காவல்துறை அதிகாரிக்கு கொலைகாரனை சட்டத்தின் முன் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் ஆசை. இதனால் அவனது மேலதிகாரியின் மூக்கு உடையும். அவனுக்கு புரோமோஷன் கிடைக்கலாம். கேங்ஸ்டருக்கு  ஆசை ஒன்றுதான். கொலைகாரனை பிடிக்கவேண்டும் . தன் கையால் மூஞ்சி முகரையெல்லாம் உடைத்து அவனைக் கொல்லவேண்டும்.

கொலைகாரனை பிடித்தார்களா, இதில் யாருக்கு என்ன லாபம் கிடைத்தது என்பதுதான் படத்தின் இறுதிக்காட்சி.

கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் மா டாங் சியோக் நன்றாக நடித்திருக்கிறார். நிதானமாக யோசித்து அதிரடியாக செயல்படுவது , சண்டைக்காட்சிகளில் அசராமல் எதிரிகளை அடித்து நொறுக்குவது, சேசிங்கில் பாய்வது என ரசிக்க வைத்திருக்கிறார். ஏறத்தாழ படத்தின் நாயகன் இவர்தான். பெரும்பாலான காட்சிகளில் இவர்தான் வருகிறார். காவல்துறைக்கு முன்னதாகவே குற்றவாளியை கண்டுபிடித்தும் விடுகிறார். இவருக்கும் காவல்துறை அதிகாரியான கிம் மியூ இயோலுக்குமான ஈகோமோதல் காட்சிகள் நன்றாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.

படத்தின் ஆக்சிஜனாக இருப்பது சண்டைக்காட்சிகளும், சேசிங்குகளும்தான். எனவே அவற்றை மறந்துவிடாமல் பாருங்கள். இருவருக்கும் பிரச்னை தரும் பொதுவான குற்றவாளியைப் பிடிக்க இரு துருவங்கள் இணைகின்ற கதைதான் இது. சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள்.

கோமாளிமேடை டீம்




கருத்துகள்