மனநலனை சோதித்துக்கொள்ளும் கேள்விகள் இதோ!


Counseling, Stress, Angry, Mental Health, Depression
pixabay



மனநலனும் உடல்நலனும்

நவீன காலத்தில் உளவியல் நலனை நாமே சோதித்துக்கொள்ள பல்வேறு ஆப்கள், கேள்வி பதில்களைக் கொண்ட ஆய்வு அறிக்கைகள் உள்ளன. உள்ளம் உடலை இயக்குகிறது என்பதால், உள்ள நலன் மிக முக்கியமாக உள்ளது. ஒருவரின் நடவடிக்கைகளை வைத்தே அவரின் மனதை அறிய முடியும். மனநலனையும், உடல் நலனையும் கவனமாக ஒருங்கிணைத்து வைத்திருப்பது சமூக வாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிக அவசியம்.

மனநலனை எப்படி அறிவது?

உங்கள் மனநிலை நேர்மறையாக எண்ணங்களோடு இருக்கிறதா

உங்களுக்கு நண்பர்கள் உண்டா? அவர்கள் நேர்மறையான கருத்துகளைக் கொண்டவர்களா?

நீங்கள் அறியும் செய்திகளை சரியாக புரிந்துகொள்கிறீர்களா?

உங்கள் மனதில் பதற்றத்தை உணர்ந்திருக்கிறீர்களா?

உணர்ச்சிகளை உங்களால் கட்டுப்படுத்த முடிகிறதா? கட்டுப்பாடுகளை இழந்து நடந்துகொள்கிறீர்களாழ

மனச்சோர்வை உணர்ந்திருக்கிறீர்களாழ

நீங்கள் மேற்சொன்ன கேள்விகளை கேட்டுக்கொண்டு எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இவற்றின் அடிப்படையில் உங்களை நீங்களே சோதித்து கொள்ளுங்கள்.

இவற்றை ஹெல்த் சைக்காலஜிஸ்ட் கேட்டு உங்களுக்கு பொருத்தமான உணவுமுறை, உடற்பயிற்சிகள், பழக்க வழக்கங்களை கொண்ட அட்டவணைகளை அளிப்பார்கள். இது தனிப்பட்டவர்களின் மனநிலையைப் பொறுத்தது. மேலே சொன்ன கேள்விகளுக்கான பதில்களும், மருத்துவர் அளிக்கும் சிகிச்சை முறைகளும் தனிநபர்களைப் பொறுத்து நிறைய மாறுபடும்.

மன அழுத்தம் மூளையில் ஏராளமான வேதிப்பொருட்களை சுரக்கச் செய்கிறது. இதன் விளைவாக உடல் போர் செய்யும் நிலைக்கு தயாராகிறது. ஆனால் உண்மையில் அதுபோல சூழ்நிலை உருவாகி இருக்காது. இதனால் உடலில் ஏற்படும் பிரச்னைகளைப் பார்ப்போம்.

மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்களால் தலைவலி, எரிச்சல் போன்றவை ஏற்படும்.

இதயத்தின் துடிப்பு எகிறும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

நுரையீரல்கள் வேகமாக வேலை செய்யும். இதன்விளைவாக மூச்சிரைப்பு அதிகரிக்கும்.

நெஞ்சில் எரிச்சல், பேதி, வயிற்றுவலி ஆகியவை ஏற்படும்.

கழுத்து, தோள்பட்டை, முதுகு ஆகியவற்றிலுள்ள தசைகள் கடுமையாக வலி தர தொடங்கும்.

பெண்களுக்கு உடலுறவில் ஆசை குறையும், மாதவிடாய் முறையாக இருக்காது. ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும்.

 

         தெரபி வகைகள்

மனநலனை மேம்படுத்த தரும் தெரபிகளை டாக்கிங் தெரபி என்று உளவியல் வட்டாரத்தில் அழைக்கின்றனர். நீங்கள் உங்கள் கடந்த கால துன்பங்களை நினைத்து வருத்தப்படுகிறீர்களா, அன்பு மனைவியை புற்றுநோய்க்கு பலி கொடுத்து சோகத்தில் இருக்கிறீர்களா, மது, போதைப் பொருட்களிலிருந்து மீள முடியாமல் இருக்கிறீர்களா? இவை அனைத்தையும் நீங்கள் உளவியல் வல்லுநரிடம் மனம் திறந்து பேச வேண்டும். அவர் சில கேள்விகளைக் கேட்பார். உங்கள் உணர்வு நிலையை சொல்ல சொல்ல உங்கள் மனம் மெல்ல இலகுவாகும். மன அழுத்தம் இம்முறையில் குறைகிறது.

 பிறகு 12 ஸ்டெப் மாடல் என்ற தெரபி வகுப்பு முக்கியமானது. இதில் ஆறு அல்லது எட்டு பேர் சுற்றி அமர்ந்து தங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளைப் பற்றி பேசுவார்கள். அதன் தாக்கத்தில் கண்ணீர் விட்டு அழுவார்கள். இம்முறையில் ஒருவருக்கு ஆதரவாக மற்றொருவர் இருப்பதால், உங்களுக்குத் தனியாக இருக்கிறோம் என்ற உணர்வு குறைகிறது. மெல்ல வலிகள், வேதனையான நிகழ்வுகளிலிருந்து உங்கள் வாழ்க்கையை மீட்டுக்கொள்ள முடியும். குறிப்பிட குறைபாடுகளுக்கு உட்பட்டு வெளிவர முடியாமல் தவிப்பவர்கள், இதன்மூலம் நிவாரணம் பெறுகிறார்கள்.

இதுபோலவே சுய உதவிக்குழுக்களும் செயல்படுகின்றனர். இதனை ஒருவர் தலைமை ஏற்று நடத்தி நம் அனுபவங்களை சொல்லச் சொல்வார். இதிலும் அனுபவங்களை பகிர்வது முக்கியமான பகுதி.

 

தெரபிகள்

சைக்கோ அனாலிடிகல் அண்ட் சைக்கோடைனமிக்

பாதிக்கப்பட்டவர், ஆலோசகர் என இருவருமே ஒன்றுசேர்ந்து பிரச்னைகளுக்கான தீர்வுகளை அடையாளம் கண்டு  தீர்க்கும் முறை.

காக்னிட்டிவ் அண்ட் பிஹேவியரல்

தாங்கள் நினைத்தது போல நிகழ்ச்சிகள் நடைபெறாதபோது கடும் மன அழுத்தத்திற்கு சிலர் உள்ளாகின்றனர். இதன் காரணத்தை புரியவைத்து மனச்சோர்விலிருந்தும், வருத்தத்திலிருந்தும் அவர்களை உளவியல் வல்லுநர்கள் இத்தெரபியை அளித்து வெளிக்கொண்டு வருகின்றனர்.

ஹியூமனிஸ்டிக்

ஒருவரின் ஆளுமைக் குறைபாடு, மனநலக்குறைபாடுகள், பிரச்னைகளை நோயாளியே பேசுவார். அதனை கவனித்து உள்வாங்கிக்கொளும் உளவியல் வல்லுநர் தேவையான கருத்துகளைக் கூறுவார். அதன்படி நோயாளி நடந்தால் பாதிப்பு குறைய வாய்ப்புள்ள தெரபி இது.

சிஸ்டமிக்

குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், மது, போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு உதவும் தெரபி இது. இதன்மூலம் தன்னைப்போல பாதிக்கப்பட்டவர்களை நோயாளி பார்ப்பதால் தனது பிரச்னை பற்றிய குற்றவுணர்விலிருந்து விடுபட்டு தன் அனுபவங்களை எளிதில் பகிர்ந்துகொள்கிறார். இதனால் அவரின் மன இறுக்கம் தளர்வதோடு சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்கான நம்பிக்கையையும் பெறுகிறார்.

தெரபிகளோடு மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்களைக் குறைக்கும் மருந்துகளையும் உளவியல் வல்லுநர்கள் வழங்குகின்றனர். இதனால் நோயாளிகளின் மன அழுத்தம் குறைந்து மனநிலை வேகமாக மாறுவது நிற்பதோடு அவர்களின் உணர்ச்சிகளையும் எளிதாக கட்டுப்படுத்த முடிகிறது.

 

 

 

 

கருத்துகள்