ஊரடங்கை இந்தியா அமல்படுத்தியது சிக்கலான முடிவுதான்! ஹான்ஸ் டிம்மர்
பெருந்தொற்று காரணமாக சார்க் நாடுகளின் பொருளாதார நிலை கடந்த நாற்பது ஆண்டுகளை விட கீழே சென்றுவிட்டது. இதுபற்றி உலக வங்கியின் மூத்த பொருளாதார அதிகாரியான ஹான்ஸ் டிம்மரிடம் பேசினோம்.
கிழக்காசிய நாடுகள் பற்றிய உலகவங்கியின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் பொருளாதார வளர்ச்சி 6.3 லிருந்து 1.8 முதல் 2.8 வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கிய பிறகும், வீழ்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?
நாங்கள் இந்த அறிக்கையை இரண்டு அம்சங்களை முன்வைத்து தயாரித்தோம். ஊரடங்கு சட்டம் அமலாவதற்கு முந்தைய இரு மாதங்கள், ஊரடங்கு காலம் நான்கு மாதங்களாக நீண்டால் எப்படியிருக்கும் என உணர்ந்தே அறிக்கையை உருவாக்கினோம்.
ஏற்றுமதி, இறக்குமதி வீழ்ச்சி, முதலீடுகள் குறைவு, உள்நாட்டுதேவை வீழ்ச்சி, பல்வேறு சேவைகள் மூடப்படுவது ஆகியவற்றை கணக்கில் கொண்டுதான் வீழ்ச்சி சதவீதத்தைக் கணக்கிட்டோம். இது ஒப்பீட்டளவில் குறைவுதான். ஆனால் உண்மையில் வீழ்ச்சி சதவீதம், நாட்டின் பொருளாதார இழப்பு இன்னும் அதிகமாகவே இருக்கும். ஊரடங்கு காலம் மூன்று மாதங்களுக்கு மேல் நீண்டால் வளர்ச்சி மேலும் எதிர்மறையாகவே செல்லும் வாய்ப்பு உள்ளது.
இந்தியா நாற்பது நாட்களை ஊரடங்கு காலமாக அறிவித்துள்ளது. பிற ஆசிய நாடுகளும் இதன் வழித்தடத்தை பின்பற்றி வருகின்றன. இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என நினைக்கிறீர்கள்?
இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகள் அதிக மக்கள் தொகை கொண்டவை. அவை கோவிட் -19 தாக்குதலைச் சமாளிக்க எப்படி இத்தனை நாட்கள் ஊரடங்கு அறிவித்தன என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அகதிகள், தினக்கூலி தொழிலாளர்கள், குடிசை வாழ் மக்கள் அதிகம் வாழும் நாட்டில் ஊரடங்கு என்பது மிக கடினமான முடிவு. காரணம், வேலையின்றி இல்லாமல் இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது, அடிப்படை விஷயங்களை வழங்கவே அரசு அமைப்புகளை இயக்கியாகவேண்டும். இந்திய அரசு போதுமான அளவு இல்லையென்றாலும் இந்த விஷயத்தை செய்ய முயன்று வருகிறது.
தெற்காசிய நாடுகளில் பெரும்பாலனவை இடம்பெயர்ந்த தொழிலாளர்களை சார்ந்தே இயங்கி வருகின்றன. இவை பெருந்தொற்று பிரச்னையால்கள் அவர்களை வேலையைவிட்டு விலக்கிவிட்டால் அங்கு முக்கியமான பணிகளை எப்படி செய்வது? குறிப்பாக இந்தியா நிறைய பணிகளுக்கு இடம்பெயர்ந்த தொழிலாளர்களையே நம்பியிருக்கிறது..
வளைகுடா போன்ற நாடுகள் இடம்பெயர்ந்த தொழிலாளர்களை நம்பியே உள்ளன. முழுமையான அத்தனை தொழிலாளர்களும் அவர்களுடைய நாட்டுக்கு திரும்ப முடியவில்லை. மேலும் எண்ணெய் சந்தையில் விலையும் மிகவும் குறைந்து விட்டது. எனவே இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களுடைய நாட்டில் தங்களுக்கான வேலைவாய்ப்பைத் தேட வேண்டும். உள்ளூரில் உள்ள தொழிலாளர்களுடன் இதற்காக அவர்கள் போராடும் சூழல் உருவாகி வருகிறது. இந்திய அரசு இவர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் பெரிய சவால் காத்திருக்கிறது.
உணவு பாதுகாப்பு என்பது எவ்வளவு முக்கியமானது? குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உணவுப்பற்றாக்குறை ஏற்கெனவே உள்ளது?
உணவு தானியங்களை சரியான முறையில் விநியோகிப்பது முக்கியம். இல்லையென்றால், வெளிச்சந்தையில் பொருட்களின் விலை உயரும். அரசு தன்னுடைய அமைப்புகளை முறைப்படுத்துவதோடு வெளிச்சந்தைகளையும் கண்காணிப்பது அவசியம். மேலும், ஏற்றுமதியை தடை செய்வது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆபத்தானது.
உலக வங்கி தெற்காசிய நாடுகளில் சுற்றுலா கடுமையான சிக்கலைச் சந்திக்கும் என்று கூறியுள்ளது. வேறு துறைகளில் பாதிப்பு இருக்குமா?
மாலத்தீவு சுற்றுலாவை வருமானத்திற்கு பெரிதாக நம்பியுள்ளது. அதனால் பெருந்தொற்று பிரச்னையில் அதிகம் பாதிக்கப்பட்டுவிட்டது. கோவிட் -19 பாதிப்புக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே சுற்றுலா துறை பழைய நிலைமைக்கு திரும்பும். நேரடியாக சுற்றுலா துறையில் வருமானம் கிடைக்காவிட்டாலும் இணைய வழியிலான தொழில்துறைகள், இ வணிகம் சார்ந்த தொழில்துறைகளில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
நன்றி - இந்து ஆங்கிலம், சுகாசினி ஹெய்தர்.
கருத்துகள்
கருத்துரையிடுக