பெண்கள் மீது நடைபெறும் குடும்ப வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகம்! - பிரசன்னா கெட்டு

 

பிரசன்னா கெட்டு, சமூக செயல்பாட்டாளர்

ஜப்பான் நாட்டிலுள்ள டோகிவா பல்கலைக்கழகத்தில் விக்டிமாலஜி மற்றும் விக்டிம் முதுகலைப் பட்டப்படிப்பை பிரசன்னா கெட்டு படித்துள்ளார். இந்தப்படிப்பை படித்துவிட்டு செயல்பட்டுவரும் சில செயல்பாட்டாளர்களில் இவரும் ஒருவர்.

வீடுகளில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக பிசிவிசி (Crime prenention and victim care) எனும் நிறுவனத்தை சென்னையில் தொடங்கிய நிறுவனர்களில் இவரும் ஒருவர். அண்மையில் ஜெர்மனியைச் சேர்ந்த ஹென்றிச் போல் என்ற நிறுவனம் வழங்கிய அன்னே கிளெய்ன்ஸ் பெண்கள் விருதை தனது செயல்பாடுகளுக்காக பெற்றுள்ளார். அவரிடம் பேசினோம்.

பிசிவிசி அமைப்பு முதலில் அனைத்து குற்றங்களிலும் பாதிக்கப்படும் பெண்களுக்காகவே பாடுபட்டு வந்தது. அப்புறம் ஏன் திடீரென தன் பார்வையை குடும்ப வன்முறை சார்ந்து மாற்றிக்கொண்டது.?

2001ஆம்ஆண்டு டோகிவா பல்கலைக்கழகத்தில் படித்தபோது தொடங்கிய திட்டம்தான். நாங்கள் மூன்றுபேர் இதனை தொடங்கினோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதே நோக்கம். அதன் அடிப்படையில்தான் பாரிஸ் கார்னரில் ஒற்றை அறை கொண்டதாக பிசிவிசி அமைப்பு உருவானது.

முதலில் அனைத்து குற்றங்களிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி வந்தோம். பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளியில் எங்கள் செயல்பாடுகளை ஆராய்ந்தோம். அதில் புகார் கொடுத்த 99 சதவீத பெண்கள் வீடுகளில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள். அப்படி புகார் கொடுக்க தயங்குபவர்கள், எங்கு தங்குவது என யோசித்தனர். வருமானம் குறைந்த, படிக்காத குடும்பங்கள் மட்டுமல்ல; படித்த, மேல்தட்டு வர்க்க குடும்பங்களிலும் குடும்ப வன்முறை நடந்து வந்தது. இதன் காரணமாக, அவர்கள் அரசு காப்பகங்களில்தான் தங்கி வந்தனர். இதைக் கருத்தில்கொண்டுதான் நாங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அரசு ஆதரவோடு இலவச காப்பகங்களை நடத்தி வருகிறோம்.

 

இங்கு பணியாற்றுபவர்கள் இதற்காக இருவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து படிக்க வைத்தோம். குடும்ப வன்முறை சார்ந்த பிரச்னைகள் இங்கு அதிகமாக இருந்தன. அதனால்தான் நாங்கள் அப்பிரச்னை சார்ந்த செயல்பட முடிவெடுத்தோம்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இக்காலகட்டங்களில் உங்களுக்கு வன்முறை சார்ந்த புகார்கள் வருகின்றனவா?

எங்களுடைய இலவச அழைப்பு எண்ணில் தற்போது குறைவான அழைப்புகளே வருகின்றன. அதற்கு காரணம், செல்போன்களை பெண்கள் அணுக முடியாததும், புகார்களை அளித்தால் அவர்கள் தங்குவதற்கு வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழல் இருப்பதாலும்தான். அழைப்புகள் குறைவாக வருவதால், குடும்ப வன்முறைகள் குறைந்துவிட்டன என்று எண்ண முடியாது. ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டதும், நிறைய புகார்கள் வர வாய்ப்புள்ளது.

நீங்கள் தற்போது செய்துவரும் பணிகளில் வளர்ச்சி எப்படியிருக்கிறது?

2001ஆம் ஆண்டு நாங்கள் பெண்களுக்கான மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினோம். அப்போது எங்களுக்கு உறுதியான வலிமையான நோக்கம் இல்லை. அதனால் நாங்கள் நினைப்பதே சரி என்று வேகமாக செயல்பட்டோம். தற்போது பிரச்னைகளை ஆராய்ந்து கவனமாக பணியாற்றிவருகிறோம்.

அனைத்து பெண்கள் காவல்நிலையத்தோடும் நாங்கள் தொடர்பில் உள்ளோம். எங்களது உதயம் எனும் திட்டத்தை இம்முறையில் செயல்படுத்தி வருகிறோம். பெண்களுக்கு ஆதரவாக செயல்படுவதால், எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் கொலைமிரட்டல்கள்  வந்தன. எனவே, முடிந்தவரை நாங்கள் எங்களையும், எங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க முயல்கிறோம். முதலில் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டோம். இப்போது, விதிகளை உருவாக்கி அதன்படி செயல்படுகிறோம். இதன்மூலம் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் முழுக்க எங்களை மட்டுமே சார்ந்திருக்காமல் தன்னம்பிக்கையுடன் புது வாழ்க்கையை வாழ முடிகிறது. அடுத்து, எங்கள் அமைப்பிலுள்ள பணியாளர்களையும் பாதுகாக்க முடிகிறது. எங்களுடைய காப்பகங்களில் பதினெட்டு வயதிற்கு மேலுள்ளவர்களையும் நாங்கள் தங்க வைக்கிறோம். அவர்களுக்கு உதவும் பல்வேறு திறன்களைக் கற்க வாய்ப்புகளை வழங்குகிறோம். அவர்களுக்கான தொழிலை அவர்களே தேர்ந்தெடுக்க உதவுகிறோம். நாங்களாக அவர்களுக்கு ஒன்றை கற்றுத்தருவதில்லை.

உங்களுடைய அமைப்புக்கு பெரும் சவாலாக இருப்பது எது?

குடும்ப வன்முறைகள்தான். இதனை பலரும் எங்கும் நடப்பதில்லை என்பார்கள். இது போர், எய்ட்ஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களைப் போலத்தால் எண்ணிக்கை பெருகி வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினர், இந்த வன்முறைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் வன்முறையை சிறிதும் சகித்துக்கொள்வதில்லை. இதன் விளைவாக பெண்கள் இன்று தம்மை மதிப்பிற்குரியவர்களாக நினைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த சிந்தனை மாற்றம் இன்று முக்கியமானது.

சமூக முன்னேற்றத்திற்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

நம் அரசு குற்றங்களை ஆராய விரும்புகிறதே ஒழிய அதனை முன்னமே கண்டறிந்து தடுப்பதை முக்கியமாக கருதுவதில்லை. ஆண்களுக்கும் மகிழ்ச்சி தேவை, பெண்களுக்கும் மகிழ்ச்சி தேவை. வாழ்வின் ஆதாரமே அதுதான். எனவே, அதனை வன்முறையில் ஈடுபடாமல் குற்றங்கள் செய்யாமல் பெற முடியும் என்ற நம்பிக்கையை நாம் பெறவேண்டும். குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இதை உணர்ந்து மனந்திருந்த வேண்டும்.

நன்றி: இந்து ஆங்கிலம், பிரகதி கே.பி.

கருத்துகள்