நாஜிப்படை சிறுவனின் மனதில் உருவாகும் மனிதநேயம் - ஜோஜோ ராபிட்


Jojo Rabbit review: Taika Waititi laughs in the face of fascism ...


ஜோஜோ ராபிட்

இயக்கம் – தைகா வைடிட்டி

ஒளிப்பதிவு – மிகாய் மலாய்மர் ஜூர்.

இசை – மைக்கேல் கியாச்சியானோ

ஜோகன்னஸ் பெல்ட்ஷர் என்ற சிறுவன் தன் தாயுடன் ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறான். அவன் தாய், ஜோகன்னசுக்கு தெரியாமல் யூத சிறுமி ஒருத்தியை தன் வீட்டில் ஒளித்து வைத்திருக்கிறாள். இந்த உண்மை ஜோகன்னஸ் (ஜோஜோ)வுக்கு தெரியவரும்போது என்ன நடக்கிறது, அவன் அதை ஏற்றுக்கொண்டானா, அல்லது கெஸ்டாபோ குழுவிடம் காட்டிக்கொடுத்தானா என்பதுதான் கதை. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நடைபெறும் கதை. முழுக்க ஹிட்லரை பகடி செய்திருக்கிறார்கள்.

படத்தில் நடித்த காமெடி ஹிட்லரான இயக்குநர் தைகா வைடிட்டி முதற்கொண்டு அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எப்படி சிறுவர்கள் மனதில் பிற இனத்தை துரோகிகள், அரக்கர்கள் என நச்சு பிரசாரத்தை விதைக்கிறார்கள். உயிர்களை கொல்வதற்கு முதல்கட்டமாக முயல்களை கொல்ல பயிற்சி கொடுப்பது என காமெடியிலும் கருத்தாக சொல்ல வந்ததை சொல்லி விடுகிறார்கள்.

ஜோஜோவின் தாய், தன் மகனை ராணுவ வகுப்பிற்கு அனுப்புவது கட்டாயம் என்பதால் அனுப்பிவைக்கிறாள். பிற சமயங்களில் காதல் பற, அன்பு, மனிதாபிமானம் பற்றியும் பேசுகிறார். ஜோஜோ இதை உணரும்போது காரியம் கைமீறிப் போய்விடுகிறது. அவனது தாய் அரசு எதிர்ப்புக்காக தூக்கிலிடப்படுகிறார்.

மெல்ல யூத சிறுமி மீது அக்கறையும் அன்பும் கொள்ளத் தொடங்குகிறான். இந்த காட்சிகளை பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள். மெல்ல அவனின் மனம் மாற்றம் கொள்வது, தனத மூத்த சகோதரியாக நினைப்பது. இறுதிக்காட்சி நெகிழ்ச்சியாக நிறைவடைகிறது.

மதம், இனம் சார்ந்த வேறுபட்டாலும் மனிதர்களை நேசிக்கவேண்டும். அன்புதான் உலகில் சாசுவதமானது என்பதை சொல்லியிருக்கிறார்கள். வெறுப்பும், குரூரமும், வன்மமும் வளர்ந்துவரும் காலகட்டத்தில் நம்மை யார் என இத்தகைய படங்களே நினைவபடுத்துகின்றன. ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற படம் என்ற அலங்காரங்களை கழற்றி வைத்துவிட்டே பார்க்கலாம். படம் யாவரையும் கவரும். 

கோமாளிமேடை டீம்  



கருத்துகள்