பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறதா குடும்ப அமைப்பு? பந்தம் - பவித்ரம் - எண்டமூரி வீரேந்திரநாத்


amudu: இணையத்தில் எண்டமூரி ...

பந்தம் பவித்திரம்

எண்டமூரி வீரேந்திரநாத்

தமிழில்: கௌரி கிருபானந்தன்

270 பக்கமுள்ள நாவல் முழுதும் இரண்டு பெண்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. அடிப்படையான கதையின் மையம், பெண்களுக்கான சுதந்திரம் என்றால் என்ன? அதனைக் கட்டுப்படுத்தும் விஷயங்கள் என்ன? என்பதை நாவல் தீவிரமாக எடுத்துக்கொண்டு பேசுகிறது. இதில் வரும் பெண் மைய உரையாடல்களையும் மூளையையே கலங்க வைக்க கூடியது. எந்த கதாபாத்திரம் எப்படி சூழல்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதை ஊகிக்க முடியாதபடி எழுதியுள்ளார் வீரேந்திரநாத்.

லண்டனில் புத்தகம் ஒன்றை தடை செய்வதற்கான வழக்கு ஒன்று நடைபெறுகிறது. அதில் சியாமளா, சுரேஷ் என்ற இரு தோழன், தோழி எதிரெதிர் பக்கத்தில் வழக்குரைஞர்களாக வாதிடுகின்றனர். ஜெயிப்போம் என்று சியாமளா நினைத்தாலும் பலவீனமான வாதங்களால் தோற்றுப்போகிறாள். சுரேஷ் வழக்கில் வெல்கிறான். தோற்றுப்போனதை சியாமளா சுலபமாக எடுத்துக்கொள்வதில்லை. இத்தனைக்கும் இருவரும் சில மாதங்களில் திருமணம் செய்துகொள்வதாக இருக்கிறார்கள். அந்த திருமணம் நடக்காது. நீ ஒரு ஆணாதிக்கவாதி என்று கூறிவிட்டு சியாமளா அங்கிருந்து வெளியேறுகிறாள். அப்போது பிரகாஷ் என்ற தனது தம்பியை சந்திக்கிறாள். அவள் உறவுமுறையில் தம்பி அல்ல. பழக்க முறையில். அவன் தன் அப்பாதான் உங்களுக்கும் தந்தை, தாய்தான் வேறு என்று சொல்லுகிறான். மேலும் உங்கள் தாய் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் அவரை விட்டு பிரிந்துவிட்டார் என்று கூறி அவளைப் பார்ப்பதை தவிர்க்கிறான். இதுபற்றி தாயிடம் கோபமாக பேசிவிட்டு தன் தந்தையைப் பார்க்க இந்தியாவுக்கு வருகிறாள். தன் மகள் தன்னைப் புரிந்துகொள்ளவில்லையே என அகல்யா மருகுகிறாள். கதை அவளது நினைவு வழியாக பயணிக்கிறது.

சுயநலமான குடும்ப அமைப்பு அவளை சுரண்டுகிறது. ஆதரவளிக்கும் மச்சினர் செக்சுக்காக அவளைப் பயன்படுத்திக்கொள்வது, கணவர் மச்சினரின் மனைவி தங்கையை காமப்பசிக்கு இரையாக்குவது என அடுத்தடுத்த திருப்புமுனைகள் கதையை மாலைமதி, ராணிமுத்து  கதையிலிருந்து சற்றே மேலே உயர்த்துகின்றது. அகல்யாவிற்கு ஆதராவாக அண்ணனின் மனைவி ராக்காயி துணையாக இருக்கிறாள். இவள் சக்கிலியர் வகுப்பிலிருந்து வந்தவள. திருமணமாகாமல் ஒருவருடன் வாழ்ந்து பின்னர் கல்லூரி பேராசிரியரான ஸ்ரீகாந்தை மணம் செய்து வாழ்கிறாள். இவளது வாழ்க்கையிலும் குடும்ப உறவுகளின் சுயநலம் , பெண்ணியம் பேசும் சுரண்டல்வாதி என திகைக்க வைக்கும் குணம் கொண்ட கதாபாத்திரங்கள் வருகின்றனர். இவர்களது வாழ்க்கை வழியாக சியாமளா பெண்ணியம் பற்றி என்ன புரிந்துகொண்டாள் என்பதுதான் நாவலின் இறுதிப்பகுதி.

மெகாசீரியலுக்கான அத்தனை விஷயங்களும் நாவலில் கொட்டிக் கிடக்கின்றன.

பெண்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி தீர்மானித்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி
யோசிக்க வைக்கிற படைப்பு.

கோமாளிமேடை டீம்

 

கருத்துகள்