காந்திக்கும், அம்பேத்கருக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு! ஒரு துளி மணலில் ஓர் உலகு!


Hand, Man, Watch, Work, People, Business, Male, Men
pixabay




அன்பிற்கினிய தோழர் ராமுவுக்கு, வணக்கம்.


நீங்கள் பேசும்போதெல்லாம் போனின் பின்னணியில் தீவிரமான டிவி விவாத நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் இன்னும் அரட்டை அரங்க கொதிநிலை மனநிலையை விட்டு வெளியே வரவில்லை என்று நினைக்கிறேன்.

நாம் அம்பேத்கர்கரின் நூல்களில் சாதி ஒழிப்பு மட்டுமே படித்துள்ளேன். நீங்கள் நிறைய நூல்களைப் படித்திருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. காந்தி, சாதி வேண்டும், தீண்டாமை கூடாது என பாலீஷாக பேசினார் என்று சொன்னீர்கள். இடதுசாரிகள் கோட்சேயின் வன்முறையைப் பேசும்போது, பகத்சிங்கின் வன்முறையான பாதையைப் போற்றுகிறார்கள். திரும்பத் திரும்ப அவரை காந்தி காப்பாற்றி இருக்கலாம் என்கிறார்கள். இப்படி பேசுவது வலதுசாரிகளுக்கு பலமேற்றும் என்பதையும், அகிம்சை பாதையை மக்கள் பலவீனமாக அறிய வழிவகுக்கும் என்பதை அறிவதில்லை.

மயிலாப்பூரில் உள்ள ஹாஸ்டலை லீசுகு எடுத்து மாணவர்கள் விடுதியாக நடத்தி வந்தனர் போல. இப்போது அந்த செட்டப்புகளை உடைத்து எடுத்து வருகின்றனர். எங்கள் அறையில் கதவு மட்டுமே பிரிக்கப்படாமல் இருக்கிறது. விரைவில் அதனையும் பிரித்து எடுப்பார்கள். தேசிய பண்பாடு - அபிட் ஹூசேன் எழுதிய நூலைப் படித்து வருகிறேன். ஆங்கிலத்தில் எப்படி எழுதியிருக்கிறார்களோ தெரியவில்லை. தமிழில் மொழிபெயர்ப்பு சரியாக இல்லை. நிறைய பிழைகள் உள்ளன. தந்தை - கந்தை என்று மாறி வருகிறது. புத்தகத்தின் விலை ரூ.73. பதிப்பு நிறுவனம் அரசு என்பதால் இந்த அலட்சியமா? என்று தெரியவில்லை.

நன்றி!

சந்திப்போம்.

.அன்பரசு

16.4.2018

****************************************************************

அன்புத்தோழர் ராமுவுக்கு, வணக்கம் நன்றாக இருக்கிறீர்களா?

திடீரென எனக்கு மனச்சோர்வு நிலை தோன்றும். அப்போது போனிலும் எழுத்திலும் அந்த எண்ணங்கள் வெளிப்பட்டுவிடுகின்றன. அவற்றை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. தேசிய பண்பாடு என்ற நூல் பற்றி முன்னமே கூறியிருந்தேன். அடுத்ததாக நிதி சம்பந்தமாக நூல்களைப் படிக்க நினைத்தேன். விகடன் பிரசுர நூல் ஒன்று கிடைத்தது. அதையும் படித்தேன். இந்த நூலும் எனக்கு நிறைய செய்திகளை அறியத்தரவில்லை என்று படுகிறது.

நிறைய நூல்களை வாங்கி அலமாரியில் அடுக்கி வைத்து படிப்பது என்னைப் பொறுத்தளவில் பெரிய சந்தோஷம். என்னிடம் உடை, சோப்பு, சீப்பு ஆகிய பொருட்கள் இருப்பில் இருப்பதை விட இந்த நூல்கள் தனி சந்தோஷத்தை தருகின்றன. அதைப்போலே நூல்களை பிறருக்கு பரிந்துரைப்பதும், நாம் படித்த நூல்களை நூலகங்களுக்கு வழங்குவதும் மனநிறைவு தருகின்றன. நான் கட்டுரை நூல்கள் படித்த களைப்பை லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் - சிவகுமார், பாதரசம் பதிப்பகம் போக்கியது.

வேறிடம் தேடிப் போவதற்கான முயற்சிகளை செய்து வருகிறேன். எனவே நூல்களை வாங்கி அடுக்க விரும்பவில்லை. அரசியல், வரலாறு சார்ந்து நிறைய நூல்களை வாசிக்க வேண்டும். இத்துறை சார்ந்து நான் பலவீனமாக உணர்கிறேன். இவற்றைப் பற்றி எழுதுவதற்கு செறிந்த அறிவு தேவை. தமிழ்நாடு சார்ந்த அரசியலை நீங்கள் சாமர்த்தியமாக அறிந்து பேசுவது என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. நீங்கள் வாசித்த நூல்களையும் உங்கள் கருத்துகளையும் எழுதி வையுங்கள். அது பின்னர் பிறருக்கும் நூல்களை வாசிக்க உதவும். அதுவே உங்களை அற்புதமான ஆளுமையாக வளர்த்தெடுக்கும்.


நன்றி!


சந்திப்போம்


.அன்பரசு


26.4.2018

**************************************************************


அன்பு நண்பர் ராமமூர்த்திக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி. மனிதர்களுக்கான ஆறுதல்களை தேடி அவர்களை தேற்றுவது கடினமாக இருக்கிறது. பொதுவாக உலகமே நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏதேனும் நடக்குமா, நடந்துவிடுமோ என்ற எதிர்பார்ப்பில் காத்திருப்பது போல இருக்கிறது. மும்பை தாக்குதல் நடந்து பத்து ஆண்டுகளாகின்றன. தற்போது அடுத்த பிரச்னையை நோக்கி அரசியல் கட்சிகள் நகரத் தொடங்கிவிட்டன. அயோத்தி கோவிலுக்கான பேரணியை தொடங்கியிருக்கிறார்கள். அரசு இதுபோன்ற மதச்சார்பான நடவடிக்கைகளைப் பற்றி கேள்வி கேட்டால் உடனே அவர் இந்தியராக இருக்கவே முடியாது என சமூக வலைத்தளங்களில் வெறித்தனமாக பிரசாரம் செய்யப்படுகிறது. அவரின் சாதி,மதம், இன்ன பிற தனிப்பட்ட விஷயங்கள் பேசப்படுகின்றன. இதற்கான காரணம் என்னவென்றே புரியவில்லை.

தேசியவாதம் பேசும் பாஜகவின் கருத்துகளை எதிர்க்க, அக்கட்சி போட்ட வழியில் கைக்கட்சி பயணிக்கத் தொடங்கியுள்ளது. ஆபத்தான போக்கு என்றால் இதுதான். அவசியமான உணவுப்பொருட்களை கிடைக்காமல் பழங்குடி மக்கள் இறக்கும்போது, அவர்களை இந்துகள் என்று பேசி பெருமை கொள்வதோடு சரி. அவர்களுக்கான உணவுப்பொருட்கள் வழங்கும் செலவுக்குமேல் வெட்டியாக வானுயர்ந்த சிலைகளை உருவாக்குவதை விட சிறந்த வக்கிரம் என்ன இருக்க முடியும்?

இந்தியாவின் நவீனச் சிற்பிகளில் ஒருவரான நேருவின் நூல்களை வாங்கி வாசிக்க வேண்டும். இங்கு அவரைப் பற்றி பேசுபவர்கள், காங்கிரஸ் கட்சிக்காரர்களாகவே இருக்கிறார்கள். நாம் அவரின் பணியின் பொறுப்பு செய்த சாதனைகள் பற்றி பேசும்போது, அதனை சமாளிக்க அவரின் தனிப்பட்ட வாழ்க்கை, அந்தரங்கங்களை வன்மத்துடன் பேசுகிறார்கள். இதற்கு என்ன பொருள் இருக்கிறது என்று தெரியவில்லை. மாநில முதல்வர்களுக்கு நேரு எழுதிய கடிதங்களைப் போல பிறர் எழுதியதில்லை. 1948-1963 காலகட்டத்தில் நேரு எழுதிய கடிதங்கள் மூன்று நூல்களாக வெளிவந்துள்ளன. வாய்ப்பிருந்தால் அவற்றைப் படிக்கவேண்டும்.

நமக்கு இயல்பாகவே ஒருவரின் சாதனைகளைப் பேசினால், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பேசி அதை உடைக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இதனால் காந்தி அகிம்சைக்கு பாடுபட்டதை விட அவர் நிர்வாணமாக செய்த சோதனைகளைப் பற்றி இந்தியா டுடே சிறப்பிதழ் போட்டு காசு பார்க்க முடிகிறது. என்ன மனநிலையோ என்னவோ? அதுவும் ஒரு விதத்தில் தன்னை நிர்வாணமாக வெளிப்படுத்திக்கொண்டவரின் மனத்தன்மையால் தான் சாத்தியம் என்பதை இவர்கள் உணர்வதில்லை.

நன்றி!

சந்திப்போம்!

.அன்பரசு


25.11.2018

********************************************************************


இனிய நண்பர் ராமமூர்த்திக்கு, வணக்கம். நலமறிய ஆவல்.

நான் அறைத்தோழர் கொடுத்த பிளீச் என்ற படம் பார்த்து வருகிறேன். இது 2டி அனிமேஷனாக எடுக்கப்பட்டுள்ளது. படமாகவும் உருவாக்கியிருக்கிறார்களாம்.

கெட்ட ஆன்மாக்களை விரட்டி அடிக்கும் நல்லாத்மா(இளைஞர்), அவருக்கு உதவும் சைட் கிக்காக இளம்பெண் இருக்கிறார். இவர்கள்தான் நாயக, நாயகி என்று சொல்லவும் வேண்டுமா?

நல்ல ஆன்மாக்களை வேட்டையாடும் பூதங்களை வேட்டையாடுவதுதான் பள்ளி முடிந்த முழுநேரத்தொழில். இதில் டீனேஜ் பெண்தான் முழுவேகமாக இருக்கிறாள். இவளுக்கு நாயகன் உதவுகிறான். இயல்பாகவே அவனின் உடலில் இந்த பூதங்களை அழிப்பதற்கான உந்துதல் வேகமாக எழுகிறது. அது மேல் உலகிலிருந்து வந்த நாயகிக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு காரணம், நாயகின் தாத்தா படு கெத்தான பூதமாக விளங்கியவர் என்று பின்னர் தெரிய வருகிறது.

விறுவிறுப்பான அனிமேஷன் தொடர் இது. நாயகனுக்கு நாயகி வரும் மென்மையான காதலும், அதை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமலும் தடுமாறுகிறாள். இந்த நேரத்தில் அவளை கைது செய்ய மேல் உலகிலிருந்து காவலர்கள் வருகிறார்கள். காதலியை எப்படி நாயகன் காப்பாற்றினான், தனது சக்தியை எப்படி அதிகரித்துக் கொள்கிறான் என்பதுதான் கதை. வன்முறை அழகாக காட்டி பார்க்கும் அனைவருக்கும் பிடிக்க வைத்திருக்கிறார்கள்.

நெடுங்காலம் பேசாமல் இருந்த தோழரிடம் பேசினேன். இப்போது கோவையில் காவலராக இருக்கிறார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எப்படி அவரது குடும்பம் சமாளித்தது என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை தீவிர அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தெரிந்த நண்பர் மூலம் 68 ஆயிரம் ரூபாய்களை மாற்றினார்களாம். இது மட்டுமன்றி, தெரிந்த நண்பருக்கு 15 ஆயிரம் ரூபாய் மாற்றிக்கொடுத்தாராம். பார்த்தீர்களா? அரசு அமைப்பில் ஊழல் எப்படி உருவாகிறது என்று. சாதாரணம், சிறப்பு வரிசை என்று கோவில்கள் உருவாகுவது போல அனைத்து இடங்களிலும் உள்ளது. ஆனால் நெஞ்சு பொறுக்கமுடியாமல், இப்படி செய்யறது தப்புன்னு படலியா என்று கேட்டேன். இந்த உலகில் நாம வாழனும்னா கொஞ்சம் வளைஞ்சு கொடுத்து போகணும்ப்பா என்று சொன்னார். எனக்கு எப்படி யோசித்தாலும் அது சரியான பதிலாக படவில்லை.

திறமை வரிசையில் நிற்க, சிபாரிசு நாற்காலியில் அமர்ந்து காலாட்டிக்கொண்டு இருக்கிறது. அவர் சொன்ன காலகட்ட நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது. மேற்சொன்ன நடவடிக்கையை முன்னெச்சரிக்கை இன்றி எடுத்த பிரதமர் முதன்முதலில் தேர்தலில் வென்றபோது நான் பாராட்டிப் பேசினேன் என்பது எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாமல் ஆதரிப்பது, நம்மை நாமே புதைகுழியில் புதைத்துக்கொள்வது போல.

காலம்தோறும் சில மதிப்புகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. நாம் உயர்வாக மதித்து நினைத்துப் போற்றிய மாண்புகள், உன்னதங்கள் உடைந்து நொறுங்கி வருகின்றன. நாம் அதைப்பார்த்து செய்வதறியாமல் நின்று கொண்டிருக்கிறோம். உடைவது அவை மட்டுமல்ல நம் ஆன்மாக்களும்தான். அவை இனி நம் மனதில் இடம்பெறப் போவதில்லை.

நன்றி!

சந்திப்போம்!


.அன்பரசு

28..11.2018

****************************************************


அன்புள்ள தோழர் அன்பரசிற்கு, வணக்கம்.

நலமறிய ஆவல். நன்றாக இருக்கிறீர்களா?

வரலாறு என்பது வலுவுள்ளவர்கள். அதிகாரத்திலுள்ளவர்கள் எழுதுவதுதான். அதில் எந்த மாற்றமுமில்லை. அதேசமயம் அதனை பல்வேறு கருத்துகளுடன் நடந்த விஷயங்களை முன்வைத்து எழுதுபவர்களையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அதுபோன்ற நூல்களை வாசிக்க வேண்டும். அப்போதுதான் இன்று நம் நாட்டில் நிலவும் மதச்சார்பான நிலைக்கு காரணம் என்ன என்பதை உணர முடியும்.

அகிம்சை, வன்முறை என்ற கருத்தை ஜனநாயகம், சர்வாதிகாரம் என்ற கருத்துகளை உள்ளடக்கித்தான நாம் பேசி வருகிறோம். காந்தி, பனியா சாதிப்பிரிவில் வளர்ந்து வந்தவர். இறைவனை வணங்குவது என்பது அவராக பின்னாளில் உருவாக்கிக்கொண்டதல்ல. அதெல்லாம் அவரது குடும்பத்தின் பாரம்பரியமாக வந்தது. இதில் குறை சொல்ல ஏதுமில்லை. அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் தான் வாழும் காலத்திலேயே பதில்களை முன்வைத்திருக்கிறார். பேசியிருக்கிறார்.

அதேசமயம் அவர் சாதியையும், தீண்டாமையும் விட சுதந்திரத்தை மட்டுமே முக்கியமாக கருதினார். அதனை அவரது பலவீனம் என்று கருதுகிறேன். காரணம், நாம் சுதந்திரம் பெற்றுவிட்டால் மக்களிடம் பேசி அவர்களின் மனதை மாற்றிவிடலாம் என்று கருதினார். ஆனால் அது இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நிராசையான விஷயம் ஆகிவிட்டது. நம் வீட்டிலுள்ள தாத்தாவின் முணுமுணுப்பாக காந்தியை அனைத்து அரசியல்வாதிகளும் மக்களும் கருத தொடங்கினர்.

தன் வாழ்நாளில் தான் வலியுறுத்திய கொள்கைகள் சரிந்து விழுவதைப் பார்த்து மனம் கலங்கிப்போனார் காந்தி. துயரம்தான். இந்த வகையில் பெரியார் இறுதிவரை சாதி விஷயத்தில் சமரசம் செய்துகொள்ளவில்லை. காந்தி நிறையமுறை சமரசம் செய்துகொண்டு மக்களின் வாழ்க்கை அமைதியாக செல்ல உதவினார். ஆனால் இந்த தந்திரம் வெகு நாட்கள் உதவவில்லை.

இங்குள்ளவர்கள் பார்ப்பனர்களை தங்களின் உயர்வுக்கான வழிகாட்டுதலாக கருதி அவர்களை அப்படியே பின்பற்றத் தொடங்கினர். அவர்கள் கைக்கொண்ட அனைத்து சமூக விஷயங்களையும் அதே இடத்தி இடைநிலைச் சாதிகள் செய்தனர். அதனால்தான் இன்றும் சாதியும் தீண்டாமையும் அப்படியே இருக்கிறது. இதில் இறந்துபோன ஒருவரைப் பற்றி மட்டுமே குறை, புகார் சொல்ல ஏதுமில்லை. அவர்களைப் பின்பற்றியவர்கள் என்ன செய்தார்கள் என்பது முக்கியமாகப் படுகிறது. காந்தி மனமாற்றத்தை முக்கியமாக நினைத்தார். அனைத்து இடங்களிலும் அது பயனளிக்கும் என்று கூறமுடியாது. அதற்கு காத்திருக்கவும் முடியாது. பெரியார் போல சில அதிரடியான விஷயங்களையும் செய்யவேண்டும். அப்போதுதான் கெட்டிதட்டிப்போன மனங்கள் மாறும்.

அம்பேத்கர் பற்றியும் அரசியல் சார்ந்த நூல்கள் வாசிப்பதும் நம்முடைய சூழல், நாம் இருக்கிற இடம் சார்ந்த தன்மையை தக்க வைத்துக்கொள்வதற்குதான். இதில் பிரமிக்க ஏதுமில்லை. உணவு, உடை, இருப்பிடம் ஆகிய தேவைகளை நிறைவு செய்துகொண்டால் நீங்கள் காலச்சுவடு, உயிர் எழுத்து, அம்ருதா படிக்கலாம். என்னால் நான் இருக்கும் பதவி, அதில் மேலே உயருவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருகிறேன். எனவே, அதற்கும் உரிமைகோரி கேட்பதற்குமான விஷயங்களைப் படித்து வருகிறேன். காந்தி நூல்களைப் படிப்பு அவரது தேவைக்கு மீறியது. ஆனால் அம்பேத்கர் படிப்பது மிக அவசியம். அவரால் அவரது சமூகமே மேலெழும் அவசியம் இருக்கிறது. இந்த வேறுபாடுதான் எனது வாசிப்பிற்கும் உங்களுக்கும் இருக்கிறது.

இயல்பாகவே கைக்கட்சி செய்த பல்வேறு ஊழல்களால் வலதுசாரிக்கட்சியான தாமரைக்கட்சி ஆட்சிக்கு வந்தது. நிறைய விளம்பரங்கள்தான் அதற்கு காரணம். மேலும் நம் ஊரில் இளைஞருக்கு வாய்ப்பு என்பதை விட வயதான அனுபவம் என்பதற்கு அதிக மதிப்பளிக்கிறார்கள். இளமையின் வேகமும், கற்றுக்கொள்ளும் முனைப்பு இவர்கள் பொருட்படுத்துவதில்லை. சிறப்பான உடை. நல்ல விளம்பரம் ஆகியவற்றை வைத்தே இன்றைய பிரதமர் வென்றார். நீங்கள் பாராட்டி பேசும்போது, எனக்கு குஜராத் விஷயங்கள் நினைவுக்கு வந்தது. பழங்குடிகள், தலித்கள், முஸ்லீம்களை பலி கொடுக்க போகிறார்கள் என்று நினைத்தேன். நடக்கும் சம்பவங்கள் நினைப்பு சரியாகவே இருக்கிறது என்று நிரூபிக்கின்றன. துயரம்தான். உங்களுக்கும் எனக்கும் பிடிக்கிறதோ இல்லையோ அவர்தான் இந்தியாவுக்ககு பிரதமர். துயரத்தை, வேதனைகளை அனைவரும் அனுபவித்தே ஆகவேண்டும்.

காவலராக உள்ள நண்பர் சாதிப்பிரிவு என்ற நீங்கள் சொல்லவில்லை. எதுவாக இருந்தாலும் அரசு அமைப்புகளை தனக்கு அனுகூலமாக மாற்றிக்கொள்ளும் ஆசை இந்தியர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கிறது. காரணம், அரசு அமைப்பின் ஆணைகளுக்கு இணங்கி கட்டுப்பட்டே பழகியவர்கள் நாம். அது முக்கியமான காரணமாக இருக்கலாம். மற்றொன்று மற்றவர்கள் எப்படி போனால் என்ன? நம்மை நாம் காப்பாற்றிக்கொள்வோம் என்னும் தன்மை. அதுதான் மனிதர்கள் இங்கு வாழ்வதற்கு முக்கியக் காரணம், அவர்கள் வாழும் சூழல் அப்படியொரு இக்கட்டை மனத்தளவில் ஏற்படுத்தியிருக்கலாம்.

அரசு ஊழியர் வரலாற்றில் எம்ஆர்ஏ என்ற நூலை படித்துவருகிறேன். தொழிலாளர் அமைப்புகளை கட்டிய எம்ஆர் அப்பன் என்பவரைப் பற்றிய நூல்.

புது விடுதிக்கு மாறிவிட்டீர்கள். அங்கு வசதிகள் எப்படி? நன்றாக இருக்கிறீர்கள் அல்லவா? நன்றாக சாப்பிடுங்கள். உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

நன்றி

சந்திப்போம்.

.ராமமூர்த்தி

2.12.2018



கருத்துகள்