ஆட்சி மோகத்தால் நோய் தடுப்பில் கோட்டைவிட்ட மத்திய அரசு!

கொரோனாவும் மத அரசியலும்


பாஜக தலைமையிலான அரசு, கொரோனா விவகாரத்திலும் கூட தனது நிர்வாக செயலின்மையை மறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. மார்ச் 24 அன்று இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியபோது, அச்சூழ்நிலை அனைத்து மக்களுக்கு துயராக இருந்தது. மக்கள் அச்சூழ்நிலைக்கு தயாராக நான்கு மணிநேரங்கள் மட்டுமே அரசு நேரம் கொடுத்திருந்தது. இச்சூழ்நிலை அப்படியே 2016ஆம் ஆண்டு பணமதிப்புநீக்க நடவடிக்கை சூழலுக்கு ஒத்துவருவதை அனைவருமே உணர்ந்திருப்பார்கள்.


ஏப்ரல் 3ஆம் தேதியன்று காலைக்காட்சியாக தனது உரையைப் பேசினார் இந்திய பிரதமர் மோடி. அதில் ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை அணைத்து அகல் விளக்குகளை அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுங்கள். நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு கொரோனாவை எதிர்ப்போம் என்று நெஞ்சுருக பேசினார். இதற்கு முன்னர் பாத்திரங்களை தட்டுவது, சங்கு ஊதுவது, கைதட்டுவது என வினோத விழாவை தொடங்கி வைத்ததன் பின்னணியில் இந்த நிகழ்ச்சி உருவானது.


டிசம்பரில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிக்கொண்டிருந்தது. அப்போது இந்திய அரசு சீனாவில் பணியாற்றி வந்த மாணவர்களை அழைத்து வர ஏர்இந்தியா விமானங்களை அனுப்பியது. அங்கிருந்து வந்தவர்கள் எளிமையாக சோதித்து வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டனர். இன்று அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகளுக்கு இந்த நடைமுறை முக்கியமான காரணம் ஆகும். சோதனை, சிகிச்சை ஆகிய விஷயங்கள் தோல்வியுற்ற இந்திய அரசு தனது நடவடிக்கைகளில் பிழை இல்லை என்று கூற தப்ளிக் ஜாம் மாநாடு, நாடு முழுவதும் கொரோனாவை பரப்பியது பொய்யை அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்பி வருகிறது. டில்லியில் நடைபெற்ற அந்த விழாவுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்தது உண்மைதானே? அதேசமயம் இதையொத்த மாநாடு ஒன்று மகாராஷ்டிராவில் நடைபெற இருந்ததை மாநில அரசு அனுமதிக்க மறுத்துள்ள உண்மையை பலரும் பார்க்க தவறுகின்றனர்.


மார்ச் 30 இல் இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்புற்ற நோயாளி கண்டறியப்பட்ட பிறகும் அரசு தேமேயென்றுதான் இருந்தது. குடியுரிமைச்சட்டம், என்பிஆர், முஸ்லீம்களை கட்டம் கட்டுவது என தனது அடிப்படை கருத்தியல் சார்ந்த பணிகளைத் தொய்வின்றி தொடர்ந்து வந்தது. மார்ச் 30 அன்றே, உலக சுகாதார நிறுவனம் அதனை அவசர காலநிலை நோயாக கருதவேண்டும் என்று அறிவித்துவிட்டது. இந்திய அரசு பட்ஜெட்டை நிதானமாக தாக்கல் செய்து அதனை விமர்சித்து வரும் கட்டுரைகளை படித்து எழும்போது ஈரான், கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளில் கோவிட் -19 பாதிப்பு தொடங்கி இறப்புகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.


மார்ச் 3 அன்று இத்தாலி, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான விசாக்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு. அதற்குப்பிறகு மார்ச் 13ஆம் தேதி இந்தியாவில் 81 பேர்களுக்கு கோவிட் -19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதுவரையில் சுகாதாரத்துறை செயலரான லவ் அகர்வால் இதுபற்றிய அறிக்கையை வெளியிடவில்லை. அப்போது இந்திய அரசு, பாஜக கட்சி இரண்டுமே ஒரே நோக்கத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வந்தன. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் முதல்வரான கமல்நாத்தின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு சிவ்ராஜ்சிங் சௌகான் ஆட்சியை உருவாக்குவதே அது. அமித்ஷா நாட்டு மக்களை விட கட்சியை வலுப்படுத்த அப்போது வியர்வை சிந்திக்கொண்டிருந்தார் நாம் பிழையென கூறமுடியாது. அப்பணியை வெற்றியுடன் முடித்தபிறகே மருத்துவ அவசர நிலையை அறிவித்து ராணுவத்தை நாட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தி என்ன ஆச்சு பார்ப்போமே என மக்களை அரசு கவனிக்கத்தொடங்கியது.


ஆனால் ஊரடங்கில் இந்திய அரசு மறந்துவிட்ட முக்கியமான அம்சம். இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி. உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், டில்லி, மேற்கு வங்காளம் என பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்தவர்கள் அப்போதுதான் சொந்த ஊருக்கு திரும்பத் தொடங்கினர். இதனால் ஊரடங்கு என்ற உத்தரவு பயனின்றி போனது. காரணம், அரசின் சரியான திட்டமின்மைதான். இதில் சிறப்பான செயல்பட்டது தென் னாப்பிரிக்கா. இந்நாடு தொழிலாளர்கள், நிறுவனங்களுக்கு 72 மணிநேரம் நேரம் கொடுத்து பின்னரே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்திய அரசு நமக்கு கொடுத்த நான்கு மணிநேரத்தையும் எழுபத்திரெண்டு மணிநேரத்தையும் ஒப்பிட முடியுமா? இந்திய அரசு இந்த நடவடிக்கைகளை எடுக்கும்போது சீனாவில் ஊடரங்கு உத்தரவு அமலாகி இருமாதங்கள் ஆகியிருந்தன. இத்தாலியில் ஒருமாதம் ஆகியிருந்தது. மத்திய அரசு, விவசாய பயிர்களுக்கான அறுவடைக்காலம் நெருங்கியிருப்பதையும் இதில் கணக்கில் கொள்ளவில்லை.


வெண்டிலேட்டர்கள், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கருவிகளை தயாரிக்க அவசர கதியில் எட்டு நிறுவனங்களிடம் அரசு பொறுப்புகளை ஒப்படைத்தது. அவர்களில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே பொருட்களை தயாரித்து வருகின்றன. தொழிற்சாலை நிலைமைகள் மட்டுமல்ல. சுகாதார பணியாளர்கள் நேரம் காலம் பார்க்காமல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ரெயின்கோட்டும் கூலிங்கிளாசும் போட்டபடி நோய்த்தோற்று பாதிப்பையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் ஸ்ரீநகர், பஞ்சாப், டில்லி ஆகிய பகுதிகளில் மருத்துவர்கள் போராடத் தொடங்கினர். இதற்காக தங்களது பணியைக் கூட ராஜினாமா செய்துவிட்டனர். அவர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. பின்னர் நிதி ஆயோக அமைப்பிடம் மருந்து தயாரிப்பு, அதன் மேம்பாடு பற்றிய திட்டத்தை தயாரிக்க கேட்டுள்ளது. இத்துறையில் ஆராய்ச்சி மேம்பாடு ஆகியவற்றுக்காக ஐஐடி, ஐஐசி ஆகிய அமைப்புகளிடம் திட்டங்களை நிதி ஆயோக் கேட்டுள்ளது. இதற்கு மூன்று மாதங்கள் ஆகும். அரசு அதனை அமல்படுத்த எத்தனை நாட்கள் ஆகுமோ?


பிரதமரின் முதல் நாள் ஊரடங்கு உத்தரவை அனைத்து கட்சிகளும் ஆதரித்தன. ஆனால் இரு நாட்கள் கழித்து காலைக்காட்சி நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கியபோது எதிர்கட்சிகள் விமர்சனங்களை எழுப்பின. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர், பிரதமர் புகைப்படங்களுக்கான மனிதராக மாறிவிட்டார். அனைத்து தருணங்களையும் தன்னுடைய சிறந்த புகைப்படங்கள் எடுக்கப்பட பயன்படுத்திக்கொள்கிறார் என விமர்சித்தார். முன்னால் நிதியமைச்சரான ப.சிதம்பரம், தினசரி கூலித்தொழிலாளர் முதல் தொழிலதிபர்கள் வரை அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து பொருளாதாரத்தை காப்பாற்றுவார் என நினைத்தார்கள் . ஆனால் பிரதமர் அனைவரது எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றி அதிருப்தியை சந்தித்துள்ளார் என்றார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகுவா மித்ரா, விளக்குகளை ஏற்றி அணைப்பது பசியில் இருக்கும் மக்களையும், நோயில் உயிர்பிழைக்க போராடுபவர்களையும் காப்பாற்றாது. இந்த வகையில் பிரதமர் மோடி ஓர் குற்றவாளி என்றார்.


பிரதமரின் நிதி திட்டத்திற்கு நிதி அளித்தால் சிஎஸ்ஆர் கணக்கில் வரவு வைக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இது பொருளாதார சுமையால் தடுமாறும் மாநிலங்களுக்கு பாதகமானது. இதன்விளைவாக மாநிலங்களிலுள்ள தொழில் நிறுவனங்கள் கூட முதல்வர் நிவாரண நிதிக்கு தொகையை அளிக்காமல் மத்திய அரசுக்கு அனுப்புவர். இது மாநில அரசு எடுக்கும் பல்வேறு திட்டங்களை முடக்கும் செயல்பாடு. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் அளவுக்கு இன்னும் இங்கு இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அது ஒன்றே இந்திய அரசுக்கு தற்போது இருக்கும் வாய்ப்பு.


நன்றி: ஃபிரன்ட்லைன், வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் - பூர்ணிமா எஸ். திரிபாதி

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்