பித்தேறிய காதலனும், சுயநலமாக யோசிக்கும் காதலியும் - மல்லி ராவா
மல்லி ராவா தெலுங்கு
இயக்கம் - கௌதம் தின்னனூரி
ஒளிப்பதிவு - சதீஷ் முட்யாலா
இசை - ஷ்ரவன்
பள்ளி பருவத்தில் மாணவன் கார்த்திக், அஞ்சலி என்ற மாணவியை காதலிக்க தொடங்குகிறான். இளைஞராக இருக்கும்போது அதே காதலுடன் அவளை திருமணம் செய்ய விரும்புகிறான். ஆனால் அஞ்சலி, காதலை தான் அந்த உறவில் முக்கியப்படுவதை மட்டுமே விரும்புகிறாள். அந்த காதலை அதற்கு மேல் முக்கியத்துவம் கொண்டதாக கருதுவதில்லை. இதனால் அவர்களின் உறவில் நேரும் பிரச்னைகள்தான் கதை. நான்லீனியர் கதையாக 1999 முதல் 2012 வரை நடைபெறுகிறது.
கதையைப் பொறுத்தவரை எந்த பிரச்னையுமில்லை. இயக்குநர் கதையை தெளிவாக சொல்லியிருக்கிறார். காதல் என்பதை விட அதனை பித்து என்று சொல்லலாம். கார்த்திக் பள்ளிப் பருவத்திலும், இளைஞராக இருக்கும்போது அதேபோல்தான் இருக்கிறார். ஆனால் அஞ்சலிக்கு இதெல்லாம் கேட்கும்போது நன்றாக இருந்தாலும் அவளால் அதனை முழுமையாக உணர முடிவதில்லை. காரணம், அவளது குடும்பம் தோற்றுப்போன திருமணத்திற்கு ஆதாரமாக கண்முன்னே இருக்கிறது. இதன் காரணமாக அஞ்சலி திருமணம் செய்துகொள்ளலாமா, வேண்டாமா என்ற தடுமாற்றத்திலேயே இருக்கிறாள்.
கதையின் நாயகன் சுமந்த் என்றாலும் அவரிடம் எதிர்பார்க்க ஏதுமில்லை. பெரிய உணர்ச்சிகள் எதையும் முந்தைய படத்தைப் போலவே வெளிப்படுத்துவதில்லை. பக்கத்து இலைக்கு கிடைத்த பாயசம் எனக்கு கிடைக்கவில்லை என்ற முகபாவத்தை காட்சிக்கு காட்சி வெளிப்படுத்துகிறார். நாயகி, ஆகான்சாசிங் ஊட்டச்சத்து குறைவில் அவதிப்படுபவர் போல தோன்றினாலும் நடிக்க முயற்சித்திருக்கிறார். நண்பனின் திருமண விழாவில் தன் காதலைச்சொல்லும் இடம் நன்றாக இருக்கிறது. கார்த்திக், அஞ்சலியின் சிறுவயது காதல் நன்றாக இருக்கிறது. அதில் நடித்துள்ள இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
சுமந்தின் உறக்க குறைபாடு பற்றிய படம் பற்றி முன்னமே வலைத்தளத்தில் எழுதியிருந்தோம். அப்புறம் தேடிப் பார்த்ததில் நைட் க்ராவ்லர் என்ற ஆங்கிலப்படத்தின் நகலாக இருந்து தொலைத்தது. இந்தப்படமாவது அப்படியில்லாமல் இருந்தால் இயக்குநருக்கு வாழ்த்துகளைச் சொல்லலாம். குத்துப்பாட்டு, நியூட்டனுக்கு சவால் விடும் சண்டைக்காட்சிகள் என ஏதுமில்லை. அதனால் படத்தின் கதை, அதைச் சார்ந்த காட்சிகள் என்று நிதானமாக பார்க்கலாம். படத்தின் நகைச்சுவை திணிக்கப்பட்டதாக தனியாக தெரிகிறது. வலிந்து உருவாக்கப்பட்டதாக இருந்தாலும் சில காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக