வாழ்க்கையை இஷ்டப்படி வாழ வாய்ப்பு கிடைத்தால்... ஓ பேபி திரைப்படம் எப்படி?
ஓ பேபி
வாழ்க்கையை திரும்பி முதலிலிருந்து வாழ ஒரு வாய்ப்பை கடவுள் தந்தால் அதுதான் ஓ பேபி.
பேபிக்கு தன் வாழ்க்கை கஷ்டங்களில் வீணாக போனது பற்றி எப்போதும் வருத்தம் இருந்துகொண்டே இருக்கிறது. ராணுவ வீரரான கணவன் தனக்கு சரியான சமயத்தில் உதவவில்லை. தான் விரும்பியவனை திருமணம் செய்திருந்தால் இப்படி நடந்திருக்காது. என் வாழ்க்கையை குழந்தைகளை நல்லபடியாக வளர்ப்பதிலேயே செலவிட்டு விட்டேன் என புலம்புகிறார். ஒரு கட்டத்தில் அவரின் மகன்களை பாதுகாக்கும் அவரது குணம், அவரது குடும்பத்தில் கடுமையான எதிர்விளைவை உருவாக்குகிறது. அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாமா என அவரது மருமகள், பேரன், பேத்திகளை யோசிக்க வைக்கும் அளவுக்கு. இதனால் வருத்தப்படும் பேபி, கடவுளை சபிக்கிறார்.
இதனால் கடவுள் அவருக்கு தரும் இரண்டாவது வாய்ப்புதான், இளமையான உடல், முதிய மனம் எனும் முரண்பாட்டு உருமாற்றம். இளமை திரும்பியதால் தனக்கு பிடித்தாற் போல வாழத் தொடங்குகிறாள் பேபி. ஆனால் அம்மா காணாமல் போனதால் கடுமையான குற்றவுணர்வுக்கு ஆளாகிறார் அவரது பேராசிரியர் மகன். தன்னால்தான் இப்படி நேர்ந்தது சில நாட்கள் சாப்பிடாமல் காவல்நிலையத்திற்கும் வீட்டிற்குமாக அலைந்துகொண்டு இருக்கிறார்.
சுவாதி என்ற பெயரில் பேபி திரும்ப தன் வீட்டிற்கே வந்து வாடகைக்கு தங்குகிறார். அவரது குடும்பத்தினரின் பிரச்னைகளுக்கு உதவுகிறார். இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் பேரனுக்கும் உதவுகிறார். இதன் விளைவாக சுவாதி பேரனின் குழுவில் பாடகியாகிறார். அவரின் குரலைக் கேட்டு அவரை மானசீகமாக காதலிக்கத் தொடங்குகிறார் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளரான நாக சௌரியா. தன் மனைவி பேபியை காணாமல் கடும் வேதனையில் ஆழ்கிறார் அவரது கணவர் ராஜேந்திர பிரசாத்.
சுவாதி இரண்டாவது வாய்ப்பில் தான் விரும்பியபடி வாழ்ந்தாரா, அவர்தான் பேபி என்பதை பிறர் கண்டுபிடித்தார்களா பேரனின் இசைக்கனவு நிறைவேறியதா என்பதுதான் படம்.
இளமையான பேபியாக சமந்தா, வயதான பேபியாக லஷ்மி, இவரின் மகனாக ராவ் ரமேஷ், பேபியின் கணவராக ராஜேந்திர பிரசாத் நடிப்பில் அசத்தியுள்ளனர். இளம் பேபி மீது காதல் கொள்ளும் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளராக நாக சௌரியா சிறப்பு,
படம் உணர்ச்சி, நெகிழ்ச்சியுமாக செல்கிறது. படத்தில் முக்கியமான குறைபாடு இசை சார்ந்த நிகழ்ச்சி வருகிறது. அதில் வரும் பாடல்கள் முணுமுணுக்கும்படி கூட இல்லை என்பதுதான்.
சூப்பர் பேபி
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக