ஊரடங்கு நீட்டிக்கப்படுவது முக்கியமா?
உயிர் முக்கியமா? பொருளாதாரம் முக்கியமா?
உலகம் முழுக்கவே கொரோனா பாதிப்பைத் தவிர்க்க ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவிட்டு நோய் பாதிப்பைக் குறைக்க முயன்று வருகின்றனர். அதேசமயம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போன்றோர், கொரோனாவின் பாதிப்பு தெரியாமல் பொருளாதாரம் முடங்குகிறது என்று அலறி வருகின்றனர். இப்போது பார்த்தால் நோய் பாதிப்பு வரிசையில் அமெரிக்கா வேகமாக முன்னேறி வ ருகிறது. கொரோனா பாதிப்பு வளர்ந்த நாடு, வல்லரசு நாடு என்று பாரபட்சம் பார்க்காமல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவு அந்நாட்டிற்கு மிக கடுமையான பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். மக்கள்தொகை பெருக்கம் அதிகம் கொண்ட நாட்டில் வேறுவழியில் நோய் பாதிப்பை குறைப்பது கடினம். வல்லரசு நாடுகள் வேலைவாய்ப்பற்றவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் அளிக்கும் நிதியுதவிகளை இந்தியா போன்ற நாடுகள் வழங்குவது நடைமுறையில் சாத்தியம் கிடையாது. அந்நாட்டில் பரவும் வைரஸ் பாதிப்பை விட தொழில்கள் முடங்குவது பெரியளவு அம்மக்களை பாதிக்கும் என்று கூறியுள்ளார் முதலீட்டாளர் ருச்சிர் வர்மா.
இந்தியாவில் குடும்பங்களே மிகச்சிறிய அறையில் அடைசலாக வசிக்கும் நிலையில் சமூக விலகல் என்பது அர்த்தமற்றதுதான். பல்வேறு நாளிதழ்களில் காசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்திருப்பீர்கள். அரசு விளம்பரம் செய்தாலும் மக்களுக்கு அதுபற்றி எந்தவித கவனம் இல்லாதநிலைதான் இங்கு நிலவுகிறது. அரசின் நியாயவிலைக்கடைகளில் தரும் நிதியுதவியைப் பெறும் இடங்களிலும் கும்பலாகவே மக்கள் நின்று உதவியைப் பெற்றனர். நோய் பற்றிய விழிப்புணர்வுக்கு நாம் வெகு தூரம் செல்லவேண்டும். நகரச் சேரிகளில் வசிக்கும் மக்கள் கோவிட் -19 பாதிப்பு தொற்றினால் அதற்குப் பிறகு அதனைக் கட்டுப்படுத்துவது மிக சிரமம். எனவே, அரசு ஊரடங்கை நீட்டிக்கும் வாய்ப்பு உள்ளது. நம்மிடம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகளும் வாய்ப்பும் குறைவாகவே உள்ளன. இந்நிலையில் நோய் பரவும் வேகத்தை குறைத்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களை குணப்படுத்த முடியும்.
ஜனவரியில் சீனாவில் கோவிட்-19 நோய் பாதிப்பு கண்டறியப்பட்டபோதே இந்தியா ஊடரங்கு அறிவித்திருக்கவேண்டும் என்பது உண்மையே. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசுகள் கூட நோயின் பாதிப்பை கணிக்கத் தவறிவிட்டன. இதில் இந்தியாவை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தாலும், அதனை உடைக்கும் செயல்பாடாக இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் வரவு அமைந்துவிட்டது. அவர்களை அவர்கள் வேலைசெய்யும் ஊரிலே தங்க வைத்து சிகிச்சை அளித்திருந்தால் அவர்களுக்கும் நடந்து செல்லும் அவலம் நேர்ந்திருக்காது. அப்படி செல்பவர்களும் உடனே ஊருக்குள் போகமுடியாது. ஏராளமான மருத்துவச் சோதனைகளைத் தாண்டியே அவர்கள் வீட்டுக்குசெல்ல முடியும். அருகிலிருப்பவர்கள் அனைவரையும் சந்தேகமாக பார்க்கச் செய்துவிட்டது கோவிட் -19.
மொத்த உற்பத்தியில் ஒரு சதவீதம் அளவுக்கு மட்டுமே நிதியுதவியை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. கொரோனா பாதிப்புக்காக இந்தியா தன் இறையாண்மையை கடனாக வைக்கவில்லை. இதனோடு ஒப்பிட்டால் அமெரிக்கா கொரோனா பாதிப்பிற்காக உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் செலவிட நிதி ஒதுக்கியுள்ளது.
பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது நிஜம்தான். உலகப்போர் காலகட்டத்திலும் இதுபோல அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் இறங்கிப்போய்தான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு பல்வேறு உலக நாடுகளின் பொருளாதாரம் வளரவில்லையா என்ன? இந்தியாவும் நோய் பாதிப்பை எதிர்கொண்டு வென்று பொருளாதார வளர்ச்சி பெறும்.
நன்றி - எகனாமிக் டைம்ஸ் - மைதில் பூசர்மத்
கருத்துகள்
கருத்துரையிடுக