ஒருதுளி மணலில் ஓர் உலகு - கடிதங்கள் -


2016


இனிய தோழர் ராமமூர்த்திக்கு, வணக்கம். நலமா?


நான் இதை எழுதும்போது கறியமுது உண்டுகொண்டிருப்பீர்கள். அதுசரி, நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு பதிலடியாக சாப்பிட்டு காலத்தை பழிவாங்குகிறீர்கள். மனிதர்கள் வாழத்தான் வேண்டாமா என்ன?


பதஞ்சலி பொருட்களின் விளம்பரங்களைப் பார்த்தேன். ஆனால் கூட பொருட்களை வாங்குவதற்கு பெரிய நம்பிக்க வரமாட்டேன்கிறது. ஆனால் மக்கள் இதுதான் இப்போதைக்கு டிரெண்டிங் போல என்று பொருட்களை பாய்ந்து வாங்கி வருகிறார்கள். பாபா ராம்தேவைப் பொறுத்தவரை நம் நாட்டில் நிலப்பரப்பு சார்ந்த பொருட்களை மக்கள் வாங்கவேண்டும் என்று நினைக்கவில்லை. தன்னுடைய லேபிளில் மக்கள் வாங்கவேண்டும் என்கிறார். அவ்வளவுதான். இப்படி பரிந்து பேசுவதால் அவரின் பொருட்கள் சிறப்பாக தயாரிக்கப்படுகின்றன என்று கூறிவிட முடியாது.


தேன் 250 கிராம் வாங்கிப்பார்த்தேன். எழுபது ரூபாய். ஆனால் தரத்தின் அடிப்படையில் அது தேனா என்றே எனக்கு சந்தேகம். அறை நண்பர் எதுக்கு இந்த கலப்பட தேனை வாங்கிட்டு வந்தே என்றார். டாபர் தேன் 200கி. ரூ.122 எனும்போது மக்கள் பதஞ்சலி தேனை ஏன் வாங்க மாட்டார்கள். பதஞ்சலியில் 500 கி. தேன் ரூ.135தான். விலையைக் குறைத்து பிற பொருட்களில் கலப்படம் என்று சொல்லித்தான் பதஞ்சலி மார்க்கெட்டைப் பிடிக்கிறதே ஒழிய தன்னுடைய பொருளை நன்றாக இருக்கிறது என எப்போதும் சொன்னதே இல்லை. பதஞ்சலியிலும் உற்சாக பானங்கள், கார்ன்பிளேக்ஸ், நூடுல்ஸ் ஆகியவை உண்டு. மேகி நூடுல்ஸ் மீது காரியம் அதிகம் உள்ளது என புகார் எழும்பும்போது பதஞ்சலி நூடுல்ஸை விற்கத்தொடங்கியது. என்ன பிளான் பார்த்தீர்களா?


அனைத்திலும் இந்தி வார்த்தையைக் கவனமாக பயன்படுத்துகிறார்கள். மேலும் மேட் இன் பாரத் என பிரின்ட் செய்கிறார்கள். பாரதம் எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. சோப்பு, ஃபேஷ்வாஷ், ஷாம்பு, தேங்காய் எண்ணெய், சலவை சோப்பு, பிஸ்கெட்டுகள் என அனைத்தும் உள்ளன. பிற உற்பத்தியாளர்களிடம் தங்களது பாக்கெட்டில் பொருட்களை போட்டுத்தரச்சொல்லி அதனை மார்க்கெட்டிங் மட்டும் பதஞ்சலி பேரில் செய்கிறார்கள் போல. சாமியார்களின் ஆட்சிதானே நடக்கிறது. என்னவாகும் என சில ஆண்டுகளில் தெரிந்துவிடும். ராம்தேவுக்கு முன்னரே வாழும் கலை ரவிசங்கரின் ஸ்ரீஸ்ரீ பொருட்கள், சத்குருவின் பொருட்கள் சந்தையில் உள்ளன. அதாவது, தனியான அவர்களின் ஸ்டோர்களில். இவர்கள் அனைவருக்கும் முன்னோடி கார்ப்பரேட் குரு ஓஷோதான்.


நன்றி


சந்திப்போம்


.அன்பரசு

14.3.2016

2

அன்புத் தோழர் ராமமூர்த்திக்கு, வணக்கம்.


சமீப காலங்களில் எழுதுவது, போனில் பேசுவது எல்லாவற்றிலும் நானே முன்னே இருப்பது போல உணர்கிறேன். எனவே உங்கள் கருத்தை நீங்கள் எழுதி அனுப்பினால் நன்றாக இருக்கும். நெருக்கமான நண்பர் நீங்கள் ஒருவரே என்பதால் அனைத்தையும் கொட்டி விடுகிறேன் என்று நினைக்கிறேன்.


பொதுவாக பட்டியலினத்தவர்கள், ஆதிதிராவிடர்கள் பற்றிய நூல்கள் விடியல், கருப்புப்பிரதிகள், காலச்சுவடு, அலைகள் ஆகிய பதிப்பகங்களில் கிடைக்கும். இன்றுள்ள தாழ்த்தப்பட்டோர்களின் தலைவர்கள் பொதுசமூகம் தன்னை ஏற்கும் விதமாக கருத்துகளை உருவாக்கி வென்று விடுகின்றனர். ஆனால் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கும் விதமான நடவடிக்கைகளை செய்வது போல தெரியவில்லை. நீங்கள் எந்த அரசியல் தலைவர்களின் மாநாட்டிற்குச் சென்றாலும் சில நாட்கள் அந்த கருத்துகளின் அதிர்விலேயே இருப்பீர்கள். கவனமாக இருங்கள்.


பேச்சு என்பது குறிப்பிட்ட ஒலி. அவ்வொலி நமது உடலில் குறிப்பிட்ட உணர்வுகளைத் தூண்டுகிறது. சங்கடப்படுத்தும்விதமான சிக்கல்களுக்கு உள்ளாகாதீர்கள். ரொமிலா தாப்பர், ராமச்சந்திர குஹா ஆகியோரின் கட்டுரை நூல்களை வாசித்திருப்பீர்கள். நடுநிலை என்று கூற முடியாது. ஓரளவு பல்வேறு தரவுகளை அறிந்து படிக்க உதவிகரமாக இருக்கலாம். நீங்கள் அரசியல் அறிவியல் மாணவர் என்பதால் மேற்சொன்ன எழுத்தாளர்களின் நூல்களை முன்னமே படித்திருப்பீர்கள். நான் சிந்திப்பதும் எழுதுவதும் நூல்களை படிப்பதும் என்னுடைய கவனத்திற்குட்பட்டவற்றை மட்டுமே செய்கிறேன். நாமே கருத்துகளை உருவாக்கி அதனை செம்பமைப்படுத்த வேண்டும். அதற்கு நீங்களாகவே சிந்தித்துபிறகு பேசுவது நல்லது.


நன்றி!


சந்திப்போம்!


.அன்பரசு


8.4.2016


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்