அரைகுறை மனதோடு நான் நடிக்க வரவில்லை! - இர்பான்கான் நேர்காணல்





இந்தி நடிகரான இர்பான் கான், புற்றுநோய் பாதிப்பிற்குள்ளாகி அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது குணமாகி வந்து அங்ரேசி மீடியம் என்ற படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றுவருகிறார். அவரிடம் பேசினோம்.

புற்றுநோய் பாதிப்பை முதன்முதலில் மருத்துவர்கள் சோதனை செய்து அறிவித்தபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

என்னால் அதனை நம்பவே முடியவில்லை.

அந்நோயை கடந்து வந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்.

இதுபோன்ற அனுபவங்கள் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். என்னைப் பொறுத்தவரை நான் மிக குறைந்த பதற்றம் கொண்டவனாக இருக்க முயன்றேன். அசாதாரணமான அச்சூழலை எதிர்கொள்ள தியானம்

உதவியது.

அங்கிரேசி மீடியம் படவிழாவில் நீங்கள் உங்கள் ரசிகர்களுக்கு கருணையோடு வாழுங்கள் என்று கூறினீர்கள். உங்கள் செய்திக்கு காரணம் என்ன?

இயற்கை நம்மிடம் கருணையோடு இருப்பதால்தான் நாம் பூமியில் வாழ முடிகிறது. ஆனால் மனிதர்கள் சக மனிதர்களிடம் கருணையோடு நடந்துகொள்வதில்லை. இந்த வருத்தத்தில்தான் நான் அந்த செய்தியை ரசிகர்களுக்கு சொன்னேன். மகிழ்ச்சியான மனம் கொண்டவர்களால்தான் உலகில் மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியும்.

அங்கிரேசி மீடியம் படத்தில் வரும் அப்பா – மகள் உறவு அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்தது. உங்கள் மகனோடு நீங்கள் அப்படித்தான் பழகுகிறீர்களா?

எங்களுக்கு மகள்தான் பிறக்கவேண்டும் என்ற நினைத்தேன். ஆனால் மகன் பிறந்துவிட்டான். அவன் மீதும் நாங்கள் பாசம் காட்டித்தான் வளர்க்கிறோம். நண்பனாகவே கருதி உரையாடுகிறோம். அந்த படத்திற்கான பகுதிகளை நான் என் பிறக்காத மகளிடம் கற்பனையில் உரையாடுவது போல நினைத்து பேசிப் பார்த்துக்கொண்டேன். அப்படித்தான் மகளிடம் பேசும் காட்சிகள் உருவாயின.

சினிமா எனும் கலைக்கான உணர்வுகளை நீங்கள் எங்கிருந்து பெறுகிறீர்கள்.

கலையில் வெளிப்படுத்தும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தின்  உணர்வுகளை நான் என் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பெறுகிறேன். அதிலிருந்து நவரசங்களையும் உள்வாங்கி வெளிக்கொண்டுவர முடியும். அதேசமயம் திரையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையம் நிஜவாழ்க்கையில் தொடர்புபடுத்த முடியாது என்பதையும் கவனத்தில் கொள்வேன்.

 

நீங்கள் ஒரு நடிகராக வளர்ந்து வந்தபோதே புற்றுநோய் பாதிப்பில் சிக்கினீர்கள். அதைப்பற்றிய அனுபவங்களை கூறுங்கள்.

நான் பெரியளவில் ஊடகங்களில் பேசுபவன் அல்ல. புற்றுநோய் சிகிச்சைக்காக லண்டன் சென்றபோது, மனத்தையும் உடலையும் நல்ல நிலைக்கு கொண்டுவர அங்குள்ள பல்வேறு பூங்காக்களுக்கு சென்று நடப்பது வழக்கம். இந்தியாவில் இருந்தபோது பார்க்கமுடியாத படங்களைப் பார்த்தேன். நாடகங்களை ரசித்தேன். நான் திரும்பி இந்தி படவுலகுக்கு வந்து நடிப்பேன் என்று கூட நினைக்கவில்லை. அங்கிரேசி மீடியத்தில் நடிக்கும்போது முன்னர் இருந்த எந்த ஃபார்முலாக்களும் எண்ணங்களும் என்னிடம் இல்லை.

நீங்கள் சிறுவயதில் கிரிக்கெட்டை அதிகம் நேசித்தவர். உங்கள் பெற்றோர் கிரிக்கெட்டிற்காக செலவழிக்க தயாராக இருந்தால் சினிமாவில் நடித்திருக்க மாட்டீர்கள்தானே?

நான் சினிமாவில் நடிப்பது என்பது அரைகுறையான தன்மையோடு அல்ல. நஸ்ருதீன் ஷா, மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரின் நடிப்பைப் பார்த்து வியந்துதான் நான் நடிக்கவேண்டும் என்ற ஊக்கம் பெற்றேன். சினிமா என்பது கிரிக்கெட்டில் தோற்றுப்போனால் இரண்டாவது சாய்ஸ் என்று நான் எப்போதும் நினைக்கவில்லை.

நன்றி: ரீடர்ஸ் டைஜெஸ்ட்,ஏப்ரல் 2020

 ஆங்கில மூலம்: அண்ணா எம்.எம்.வெட்டிகாட்

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்