பின்லேடனின் சதித்திட்டத்தை முறியடிக்கும் ராணுவ வீரனின் கதை - விஸ்வரூபம் - எண்டமூரி வீரேந்திரநாத்
விஸ்வரூபம்
எண்டமூரி வீரேந்திரநாத்
தமிழில் : கௌரி கிருபானந்தன்.
தேசப்பற்று கதை. ராமகிருஷ்ணன் முன்னாள் ராணுவ வீரன். வைதேகி என்ற பெண்ணை காதலித்து வருகிறான். அப்போது அவன் வாழ்க்கையில் தாலிபன் அமைப்பு குறுக்கிடுகிறது. தங்கள் திட்டத்திற்கு இசைந்தால் அவன் காதலி உயிர்வாழ்வாள் இல்லையெனில் போட்டுத்தள்ளிவிடுவோம் என மிரட்டுகிறார்கள். அவர்களை பூண்டோடு அழிக்கும் திட்டத்தோடு ராமகிருஷ்ணா அவர்களின் திட்டத்திற்கு இசைகிறான். அவன் திட்டத்தை நிறைவேற்றினானா, தீவிரவாதிகளை ஒழித்தானா, இந்தியாவை காப்பாற்றினானா என்பதுதான் கதை.
ராமகிருஷ்ணன் தீவிரவாதிகளை சந்தித்து தன் லட்சியத்தை சொல்லிவிட்டு பிற தீவிரவாதிகளுடன் பயணிக்கும்போது, கதை தொடங்குகிறது. அவன் நினைவுகளில் இருந்து வைதேகி யார் என்று அறிகிறோம். அப்போது வைதேகியின் பார்வையில் ராமகிருஷ்ணா எப்படி அவளை சந்தித்தான் எனும் காட்சிகள் விரிகின்றன.
கதை, இந்தியா, டில்லி, பாகிஸ்தான். ஆப்கானிஸ்தான், ஈரான் என பல்வேறு நாடுகளுக்கு, பல்வேறு நகரங்களுக்கு மாறிக்கொண்டே இருக்கிறது. தாலிபன் தீவிரவாதிகள், அவர்களின் மத நோக்கம், சித்திரவதை முறைகளை பளீரென போட்டு உடைக்கிறார் ஆசிரியர். சாரங்கபாணி இதில் வரும் முக்கியமான அப்பாவி கதாபாத்திரம். கஷ்டப்பட்டு படித்து அணு விஞ்ஞானி ஆகிறார். ஆனால் ஆபீஸ் அரசியல் காரணமாக இந்தியாவில் இருந்து வெளியேறி, தீவிரவாதிகளுக்கு அணுகுண்டு தயாரித்து கொடுக்கிறார். ஆனால் அவர்களின் வஞ்சகத்திற்கு பலியாகி உயிர்விடுகிறார்.
தாலிபன்களின் துர்போதனைகளுக்கு உள்ளாகும் பல்வேறு பாத்திரங்களுக்கான பின்கதைகளையும் நேர்த்தியாக உள்ளே நுழைத்து அவர்களின் மீது பரிதாபம் கொள்ளச்செய்கிறார். உதாரணமாக உள்வுத்துறை தலைவரின் தம்பி பற்றிய கதை. அவருக்கு தாலிபன்களின் கூட்டத்தில் சேராததற்காக மாறுகை மாறுகால் வாங்குகிறார்கள். அதனை எப்படி மதம் சார்ந்து நிறைவேற்றுகிறார்கள் என்ற விவரிப்பு நமக்கு அடிவயிற்றில் பீதியை வரவழைக்கிறது.
இறுதியில் சுபமான முடிவுதான். ராமகிருஷ்ணா எப்படியும் நாட்டைக் காப்பாற்றிவிடுவான் என்பதை ஏறத்தாழ அனைவருக்கும் தெரியும். அதன்பிறகு அவனுக்கு இந்தியாவில் வாழ்க்கை அமைந்ததா, வைதேகி அவனுக்கான காத்திருந்தாளா என்பதுதான் கதை. இந்த முடிவை வாழ்வின் போக்கில் ஆசிரியர் அமைத்திருக்கிறார். முடிவும் இயல்பாகவே இருக்கிறது.
தேசப்பற்று சார்ந்த கதை. பரபரவென எழுதியிருக்கிறார் வீரேந்திரநாத். கௌரி கிருபானந்தன் மொழிபெயர்ப்பில் நாவலை வேகமாக வாசிக்கமுடிகிறது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக