நீதிக்கு புல்டோசரே போதுமானது!

 

 

 



 
நீதிக்கு புல்டோசரே போதுமானது!

கடந்த பத்தாண்டுகளில் வலதுசாரி மதவாத கட்சியான பாஜக ஆளும் மாநிலங்களில் மாறாத காட்சி ஒன்றைப் பார்த்திருப்போம். அதுதான் மஞ்சள் நிற புல்டோசர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் காட்சி. இதற்கு ஆக்கிரமிப்புகள் அல்லது நகரை அழகாக்குகிறோம் என உள்ளூர் நிர்வாகம், நீதிமன்றம், மாநில அரசு என அனைவருமே ஒன்றுபோல ஒரு காரணத்தைக் கூறுவார்கள். இந்த நடவடிக்கையில் முறையான ஜனநாயக நடவடிக்கைகள் ஏதும் கடைபிடிக்கப்படுவதில்லை. உதாரணமாக அறிவிப்பு நோட்டீஸ்களை வழங்குவது.

 குறிப்பாக சிறுபான்மையினரான முஸ்லீம், கிறிஸ்தவர்கள் வீடுகள் என்றால் புல்டோசர்களுக்கு கூட ஆவேசம் வந்துவிடுகிறது. இந்த ஆவேசம் எந்தளவு செல்கிறது என்றால், பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் கட்டிய வீடுகளைக் கூட விட்டுவைப்பதில்லை. எப்படி விடுவதாம்? அங்கு ஊடுருவல்காரர்களான, நாட்டின் சொத்துகளைத் திருடித் தின்னும் முஸ்லீம்கள் வாழ்கிறார்களே?

கடந்த ஜூன் 19ஆம் தேதி, லக்னோவின் அக்பர் நகரில் மாநில அரசு 1800 கட்டுமானங்களை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து நொறுக்கித் தள்ளியது. இதில் 1,169 வீடுகளும், 101 வணிக கட்டுமானங்களும் உள்ளடங்கும். சூழல் சுற்றுலாவுக்கான கட்டுமானங்களை அரசு அங்கு உருவாக்க விரும்பியது. அங்குள்ள மக்கள் வீடுகளை இழந்து தெருவுக்கு வந்ததைப் பற்றிய எந்த புகார்களையும் கேட்க யாருமே தயாராக இல்லை. வீடு முக்கியமா, சுற்றுலா முக்கியமா என்று கோபமாக கேட்ட ஏழைகளின் சொல்லைக் கேட்க நீதிமன்றங்கள் கூட இப்போது நேரம் ஒதுக்க முடியாத நிலையில் பரபரப்பாக புதிய இந்தியாவில் இயங்கி வருகின்றன. அகண்ட பாரதம் என்று கூறவேண்டுமோ?

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை ஆகிய ஒன்றிய அரசின் அமைப்புகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது ஏராளமான வழக்குகளைத் தொடுத்துக் கொண்டு இருக்கின்றன. இவற்றை சமாளிக்கவே நீதிமன்றங்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இதில் மக்களுக்கு எங்கே சென்று நேரம் ஒதுக்குவது?


புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.

2022 தொடங்கி 2023ஆம் ஆண்டு வரை உள்ளூர் நிர்வாகம், மாநிலம், ஒன்றியம் என எத்தனை கட்டுமானங்களை இடித்துள்ளனர். பார்ப்போம். 2022ஆம் ஆண்டு, 1,53,820 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. கிராமம், நகரம் என சேர்த்து 7,38,438 நபர்கள் வீடுகளை இழந்து தெருவுக்கு வந்துவிட்டனர். 2017ஆம் ஆண்டு தொடங்கி 2023 வரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளது. 1.68 மில்லியனுக்கும் மேற்பட்ட  மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

2019 - 1,07,625

2022 - 2,22,686

2023 - 5,15,752

உறுதியாக நின்று புல்டோசர் சுழன்று அடித்து நொறுக்கியதில் லட்சக்கணக்கிலான வீடுகள் தரைமட்டமாகி வருகின்றன. இதற்கு காரணமான மாநில முதல்வரை, மனச்சிதைவு கொண்ட கூட்டம் புல்டோசர் பாபா என போற்றி பாராட்டுகிறது. ஒருவேளை, உண்மையாகவே நாடு பொருளாதாரத்தில் முன்னேறி, பணவீக்கம் குறைந்து தனிநபர் வருமானம் அதிகரித்தால் கூட இப்படியான மகிழ்ச்சி கிடைத்திருக்காது.

கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என ஏழை மக்களின் வீடுகளை மாநில, ஒன்றிய அரசுகள் இடித்து வருகின்றன. வறிய மக்கள் மீது அரசின் கண்டிப்பு கூடிக்கொண்டே வருகிறது என மனித உரிமை வழக்குரைஞர் ஆகான்சா பத்கூர் கூறுகிறார்.

மத்தியப் பிரதேசத்தின் ஜிராபூர், உ பியின் பிரக்யாராஜ், சகாரன்பூர், ஹரியானாவின் நூ, டெல்லியின் ஜகாங்கிர்புரி மற்றும் பிற இடங்களில் உள்ள முஸ்லீம்கள் வாழும் இடங்களில் ஆக்கிரமிப்புகள், அழகுபடுத்துதல் பணியை செய்ய அரசுக்கு திடீர் ஆர்வம் வந்துள்ளது. இங்கு நடைபெறும் இப்பணிகள் குறிப்பிட்ட சூத்திரமுறையை அடிப்படையாக  கொண்டவை. ஏதோ ஒரு குண்டர்களைக் கொண்ட இந்துத்துவ அமைப்பு,  ஜெயந்தி விழாவைக் கொண்டாடும். அமைப்பைச் சேர்ந்த தொண்டூழியர்கள் போகும் வழியில் குறித்து வைத்துள்ளபடி முஸ்லீம்களின் கடைகளை மட்டும் அடித்து நொறுக்குவார்கள். பிறகு, அவர்களைப் பின்பற்றி உள்ளூர் நிர்வாகம் பொதுநிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு என முஸ்லீம்களின் கடைகளை, வீடுகளை முறையாக இடித்து நொறுக்கும். நிர்மூலம்தானே மகிழ்ச்சி. காவல்துறை, நீதிமன்றம் ஆகிய அமைப்புகள் கள்ள மௌனத்தோடு, நிற்பார்கள். தொடக்கத்தில் அப்படி நின்றனர். ஆனால் இப்போது மனம் மாறி ஆக்கிரமிப்புகளை இடிக்க கூட தேவையான உதவிகளையும் சட்டப்பூர்வமாக வழங்கி ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.


அடுத்த ஆண்டு வலதுசாரி மதவாத கட்சியின் தாய் அமைப்பு, நூறாவது பிறந்த தினத்தை கொண்டாடவிருக்கிறது. ஆங்கிலேயர்களின் காலணிகளை நாக்கால் துடைக்கத் தொடங்கி, சாதி, மதம் ரீதியாக  விஷ வித்துகளை இந்தியாவில் ஊன்றும் பணியில் நூற்றாண்டு.  இந்த கொண்டாட்டத்தில் கலவரம், வீடுகளை இடிப்பது, சிறுபான்மையின பெண்களை வல்லுறவு செய்வது, சொத்துகளை கொள்ளையிடுவது, நெருப்பிட்டு அழிப்பது என நிறைய காட்சிகள் சட்டப்பூர்வமாகவே அரங்கேறக்கூடும். அகண்ட பாரதத்தில் சாமானிய மக்கள் வாழ்வது எளிதானதல்ல.


ஃபிரன்ட்லைன்
அனுஜ் பெகல்
மூலக்கட்டுரையை தழுவியது.

 

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்