பள்ளி மாணவர்களை கிராமங்களிலிருந்து வேன் வைத்து பள்ளிக்கு அழைத்து வரும் தலைமை ஆசிரியர்!

 

 

 

 

 

 


 

 

 

 தெருவிளக்கு

 

பெரும்பாலான அரசு பள்ளிகளில் மேல்சாதி ஆசிரியர்கள் பணியில் இருப்பார்கள். இவர்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களை அவர்களின் தந்தை செய்யும் தொழில்களை அடிப்படையாக வைத்து, அதே விஷயங்களை பள்ளிகளில் செய்ய வற்புறுத்தி அடிப்பதுண்டு. தலித் என்றால் துப்புரவுப் பணி. டீக்கடை வைத்திருக்கிறார்கள் என்றால், பள்ளியில் டீயைப் போட மாணவிகளை, கட்டாயப்படுத்துவார்கள். இதுபோன்ற சல்லித்தனமான ஆட்களைக் கடந்து மிகச்சில ஆசிரியர்களே  சாதி/மத/இன மனநிலையைக் கடந்து ஆசிரியர் என்ற பணியைப் புரிந்து அதற்கேற்ப அர்ப்பணிப்பாக நடந்துகொள்கிறார்கள். அப்படியான ஒரு ஆசிரியர் திருச்செல்வராஜா.

இவர், தனது உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக சொந்த காசைப்போட்டு இரண்டு வேன்களை வாங்கி, இயக்கி அவர்களை கிராமத்திலிருந்து பள்ளிக்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறார். பத்து கி.மீ. தூரத்திற்கு ஐந்து முறை செல்லும் வேன்கள், மாணவர்களின் கல்வியை மேம்படுத்தி வருகின்றன. இதற்கான செலவுகளை தலைமை ஆசிரியர் ராஜாவே பார்த்துக்கொள்கிறார். ஓட்டுநருக்கான சம்பளத்தை மாணவர்களும் இயன்ற வகையில் கொடுத்து வருகிறார்கள்.

பட்டம்புதூரில் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 244 மாணவர்கள் படிக்கிறார்கள். ஆறாவது தொடங்கி பத்தாவது வரையிலான வகுப்புகள் உள்ளன. இங்கு படிக்க வரும் மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலை 44 என்ற நான்கு வழிப்பாதையைப் பயன்படுத்தித்தான் வரவேண்டும். இப்பாதையில் போக்குவரத்து நெருக்கடி அதிகம். இதில், மாணவர்கள் பள்ளிக்கு வர பேருந்து வசதியும் இல்லை. அப்படி போராடி ஏறினாலும் பேருந்துகளில் நெரிசல் அதிகம். இதனால், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர் பயந்தனர். எட்டநாயக்கன்பட்டியில் இருந்த மாணவர்கள் கால்நடையாக அல்லது கிடைக்கும் ஏதேனும் வண்டியில் ஏறி பள்ளிக்கு சென்று படித்து  வந்தனர்.

2015ஆம் ஆண்டு பட்டம்புதூர் உயர்நிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்தார் திருச்செல்வ ராஜா. பிறகுதான் அங்குள்ள மாணவர்களின் இடர்ப்பாடுகளை அறிந்தார். அதை தீர்க்க இரு வேன்களை சொந்த பணத்தில் வாங்கினார். அதற்கென ஓட்டுநர்களையும் நியமித்தார். மொத்தம் ஏழு கிராமங்களுக்கு சென்று மாணவர்களை பள்ளிக்கு அழைத்துவருகிறார் ராஜா. இந்த வேன் வந்தபிறகு மாணவர்கள் பள்ளிக்கு எந்தவித அபாயமின்றி வருவதோடு, பள்ளி முடிந்தபிறகு நேரத்தோடு வீட்டுக்கும் சென்று வருகிறார்கள்.

பயண நேரம் குறைந்ததால் கிடைக்கும் நேரத்தை கல்விக்கு, கூடுதல் திறன்களைக் கற்க செலவிட்டு, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறார்கள். 2018ஆம் ஆண்டு முதல்  தலைமை ஆசிரியர் ராஜா, பள்ளியில் உள்ள கூடுதல் இடத்தில் தோட்டத்தை உருவாக்கினார். அங்கு, பழ மரங்களை நட்டு வைத்து அதில் கிடைக்கும் பழங்களை (கொய்யா, மாதுளை) மதிய உணவில் சேர்த்து மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். பழமரத் தோட்டத்தையும் மாணவர்களே பராமரிக்கிறார்கள். பள்ளிக்கு வரும் மாணவர்களின் பெற்றோர் பலரும் தினக்கூலி தொழிலாளர்கள். தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலை, கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். எனவே, மாணவர்களை பாதுகாப்பாக ஆட்டோவில் கொண்டு வந்து விடுமளவு பொருளாதார வசதி கிடையாது. அதனால் தலைமை ஆசிரியரின் வேன் வசதி, அவர்களுக்கு நிம்மதி பெருமூச்சை தந்திருக்கிறது.

தலைமை ஆசிரியர் ராஜா வந்தபிறகு, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் நூறாக மாறியுள்ளது. நடனம், விவாதம், நாட்டுப்புறக்கலைகள் என மாணவர்களின் ஆர்வமும் கூடியுள்ளது. படிப்பை நிறைவு செய்து வேறு பள்ளிக்கு செல்பவர்களுக்கு தலைமை ஆசிரியர் வழிகாட்டி உதவிகளை செய்து வருகிறார்.

ஹரிணி (விழுப்புரம்)
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்