தடய அறிவியல் விசாரணை செய்ய போதுமான பணியாளர்கள், கருவிகள் உள்ளனவா? - தென்னிந்தியாவில் ஓர் அலசல்

 

 

 

 

 

 




 

தடய அறிவியல் பரிசோதனை

இதைப்பற்றி அறிய நீங்கள் கொரியா, ஜப்பான், சீன சீரியல்களைப் பார்த்திருந்தால் கூட போதுமானது. மலையாள மொழியில் கூட நிறைய திரைப்படங்கள் தடய அறிவியலை மையப்படுத்தி வந்திருக்கின்றன. பார்க்கவில்லை என்றாலும் கூட குற்றமில்லை. கொலை வழக்கில் கிடைத்துள்ள ஆதாரங்களை அறிவியல் முறைப்படி சோதிப்பதே தடய அறிவியல் பரிசோதனை அல்லது விசாரணை என்று கூறலாம். ஓடிடி தளங்களில் ஏராளமான படங்கள் தடய அறிவியல் சார்ந்து வெளிவந்துள்ளன. அதைப் பார்த்தால் ஓரளவுக்கு விஷயங்களைப் புரிந்துகொள்ளலாம்.

பென்ஸ் அல்லது போர்ச் காரை ஒருவர் வேகமாக ஓட்டிச்சென்று சாலையில் செல்லும் மக்கள் மீது ஏற்றிக்கொல்கிறார். மக்கள் இறப்பது, அவர்களுக்கு நீதி கிடைக்கிறதா இல்லையா என்பதல்ல விஷயம். அது, ஒருவர் வசதியானவரா, ஏழையா என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். தடய அறிவியலில் பார்க்கவேண்டியது ஓட்டுநரின் நிலையை...
வாகன விபத்து குற்றவழக்காக பதிவானபிறகு, வாகனம் ஒட்டியவர் என்ன நிலையில் இருந்தார், மது அருந்தியிருந்தாரா, இல்லையா என ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை எடுத்து சோதிப்பார்கள்.

கைரேகை, டிஎன்ஏ சோதனை, ஆயுதம், துப்பாக்கி ஆகியவற்றை தேடி எடுத்து சோதிப்பது, மருந்துகள், விஷம், உடலில் கலந்துள்ள வேதிப்பொருட்களை சோதிப்பது, கத்தியால் குத்தப்பட்டு இறந்திருந்தால், ரத்த துளிகள் சிதறியுள்ள விதம், வடிவம் பற்றிய சோதனை, தலைமுடி, வேறு ஏதேனும் கயிறு, நரம்பிழைகள் ஆகியவற்றை சேகரித்து சோதிப்பது ஆகியவை வரும். இப்போது கூடுதலாக, கணினி, திறன்பேசி, டேப்லெட் ஆகியவற்றை சோதித்து மின்னஞ்சல், சர்வர் பதிவுகள், மேக கணினிய சேமிப்பு, சமூக வலைதள பதிவுகள், செய்திகள், வலைதளங்கள், இடம் சார்ந்த தகவல், குரல் பதிவுகள், அழைப்புகள் ஆகியவற்றையும் எடுத்து சோதித்து வருகிறார்கள்.

இப்படியான சோதனைகளை செய்ய தென்னிந்தியாவில் உள்ள வசதிகளைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

தமிழ்நாடு

254 பேர் தடய அறிவியல் துறையில் பணியாற்றுகிறார்கள். ஆய்வக உதவியாளர்கள் பிரிவில் 144 பேர் உள்ளனர். கூடுதல் பணிக்காக 103 பேர் உள்ளனர். அண்மையில் தமிழ்நாடு அரசு, டிஎன்ஏ சோதனை பிரிவுக்காக 10.13 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. கூடுதலாக, துப்பாக்கி, குண்டுகள் தொடர்பான விசாரணையை செய்ய 50 லட்சம் ரூபாயை ஒதுக்கி அதற்காக பொருட்களை வாங்கித் தர இசைந்துள்ளது.

கேரளா

168 தடய அறிவியல் பரிசோதகர்கள் உள்ளனர். கூடுதலாக 28 பேர்களை நியமிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. காவல்துறை, அரசுக்கு இன்னும் 98 பரிசோதகர்களை நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளது. 2018ஆம் ஆண்டு 6,506 வழக்குகளை தடய அறிவியல்துறை விசாரணைக்கு உட்படுத்தியது. இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு, 13, 273 என அதிகரித்துள்ளது. எர்ணாக்குளத்தின் பெரும்பாவூரில் தலித் மாணவி வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தடய அறிவியல் சோதனை பெரும் உதவியாக இருந்தது. 2016ஆம் ஆண்டு நடந்த இக்குற்றச்சம்பவத்தில், கொலையுண்ட மாணவியின் உடலில் இருந்து திரவ மாதிரியை எடுத்துச் சென்று சோதித்து வழக்கில் காவல்துறை உண்மையைக் கண்டறிந்தது.

கர்நாடகா

230 தடய அறிவியல் நிபுணர்கள் உள்ளனர். அதிகாரிகள், பரிசோதனை வசதிகள், கருவிகள் என்ற வகையில் நாட்டிலேயே சிறப்பான மாநிலம் கர்நாடகம்தான். மொபைல் ஃபாரன்சிக், ஆடியோ வீடியோ பிரிவுக்கு மட்டும் ஆட்கள் தேவைப்படுகிறது. மற்றபடி காவல்துறையோடு சம்பந்தம் நடந்த இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்கள் கூடவே சென்று தடயங்களை சேகரித்து கொண்டு வருகிறார்கள். வழக்கில் உள்ள குழப்பங்களை தீர்த்து வருகிறார்கள்.

ஆந்திரம்

கேரளா, கர்நாடகத்திற்கு கீழேயுள்ள மாநிலம். 500 பணியாளர்கள் இத்துறையில் உண்டு. ஆனால் கூடுதலாக 400 பேர் தேவைப்படுகிறார்கள். புதிய குற்றச்சட்டங்களுக்கு இந்தளவு ஆட்கள் தேவை என கூறப்படுகிறது. தற்போதுவரை ஆண்டுக்கு பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை வழக்குகளை ஆய்வகத்தில் ஆராய்ந்து வருகிறார்கள். புதிய குற்றச்சட்டங்கள் வந்தபிறகு இந்த எண்ணிக்கை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் போதுமான தடய அறிவியல் குழுக்கள் இல்லை. கருவிகளும் கூட இல்லை என ஓய்வுபெற்ற டிசிபி வி சுரேஷ்பாபு கூறியுள்ளார்.

தெலங்கானா

தென்னிந்தியாவில் பின்தங்கியுள்ள மாநிலம் இதுதான். மொத்தம் 66 சதவீத பணியிடங்களை இன்னும் நிரப்பவில்லை. தடய அறிவியல் நிபுணர் பணியில் பத்து நபர்கள்தான் உள்ளனர். இதே எண்ணிக்கையில்தான் ஆய்வக உதவியாளர்களும் உள்ளனர். இரண்டு பணிப்பிரிவிலும் இருபத்தைந்து ஆட்கள் தேவைப்படுகின்றனர் என பரிந்துரை இருந்தும் அரசு நியமித்தது பிரிவுக்கு பத்து என இருபது நபர்களை மட்டுமே.

டைம்ஸ் ஆஃப் இந்தியா
செல்வராஜ், ராஜிவ் கல்கோட், சாய்கிரண் கேபி

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்