மூன்று பெண்களுடன் தீராத காதல் விளையாட்டு!?
சுக்கல்லோ சந்துருடு
ஏஎன்ஆர், சித்தார்த், சார்மி, சலோனி, சதா
தீராத விளையாட்டு பிள்ளை கதைதான். நாயகன், அவன் தாத்தா ஜெர்மனியில் வாழும் தெலுங்கு ஆட்கள். பாட்டி திடீரென இறந்துபோகிறார். அவரது ஆசை, பேரனுக்கு கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்பது... சொத்துக்கு பஞ்சமில்லை. ஆனால், பேரனுக்கு பிடித்தது போல பெண் அமைய வேண்டும். வம்சம் விருத்தியாகவேண்டும் என நினைத்து நினைத்து ஏங்கி தூக்கத்தில் இறந்துபோகிறார்.
நாயகனுக்கு காதல் திருமணத்தில் பெரிய ஆர்வம் எல்லாம் கிடையாது. அவனது பெற்றோர் காதலித்து மணந்தவர்கள்தான். ஆனால் விபத்தில் ஒன்றாக இறந்துபோகிறார்கள் இதனால், தனியாகவே வாழலாம் என நினைக்கிறான்.
அவனது தாத்தா அவனது கருத்தை எதிர்க்கிறார். இதற்காக, தனது பூர்விக கிராமத்திற்கு கிளம்பிச் செல்கிறார். பேரனுக்கு தாத்தாவை எங்கு தேடுவது என தெரியவில்லை. பிறகு எப்படியோ தாத்தா விட்டுச்சென்ற தடயத்தை கண்டுபிடித்து கிராமத்திற்கு வந்து சேர்கிறான். திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்கு கொடுக்கிறான்.
அதன்படி, தனது நண்பன் சுனிலை சந்தித்து பேசுகிறான். பள்ளிக்காலத் தோழிகளில் மூன்று பேர்களை தேர்ந்தெடுக்கிறான். ஷாலினி, டென்னிஸ் வீரர். சந்தியா, முனைவர் படிப்பை படிக்கும் சமூகப் போராளி. ஷிராவணி, மருத்துவம் படிக்கும் மாணவி.
நாயகன் இந்த மூன்று பெண்களையும ஒரே நேரத்தில் காதலிக்கிறான். யாரை மணம் செய்கிறான் என்பதே கதை.
சுண்டா, பரம போக்கு, ஹவுலே என நாயகனை நீங்கள் திட்டலாம். அதற்கு தகுதியான ஆள்தான். அவன் பணக்காரன். எனவே, தனது வாழ்க்கையை பல்வேறு ஆப்சன்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என யோசித்து அதற்கேற்ப காதலிக்கிறான். வெளிநாட்டுவாசி. ஆனால் பெண்களை உடல், மனம் என எந்தவகையிலும் மாசுபடுத்தக்கூடாது என உறுதியாக உள்ளவன். அதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அதை மறுக்கிறான். நண்பன் சுனில் இதைப்பற்றி கூறும்காட்சி படத்தில் உண்டு.
மூன்று பெண்களுக்கு வாழ்க்கையில் சில பிரச்னைகள் உள்ளன. இதெல்லாம் அவர்களின் பார்வைக்கோணம், முன்முடிவு என்று கூட கூறலாம். அதையெல்லாம் தனது புத்திசாலித்தனம் மூலம் தீர்த்து வைக்கிறான். அதனால், அவர்கள் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறான். படத்தில் குத்துப்பாட்டு கிடையாது. மூன்று நாயகிகளும் உடையைக் குறைத்துக் கொள்ளாமல் நடனம் ஆடி, நாயகன் மீதுள்ள காதல் ஆசையை வெளிப்படுத்துகிறார்கள். அந்த வகையில் மசாலா நெடி மிக குறைவு. சண்டைக் காட்சிகளும் பெரிதாக இல்லை.
ஷிராவணி என்ற மருத்துவம் படிக்கும் பெண்ணுக்குத்தான் அவசிய உதவிகள் தேவை என தொடக்கத்திலேயே பார்வையாளர்களுக்கு புரிந்துவிடுகிறது. அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில் பாட்டி. சொத்துக்களை அனுபவிக்கும் சித்தப்பா, அவர் தம் குடும்பம். படித்து முடித்து வேலை கிடைத்தால்தான் வாழ்க்கையை சுதந்திரமாக வைத்துக்கொள்ள முடியும் நிலை. இப்படியான சூழலில்தான் நாயகன் அறிமுகமாகிறான். அவள் தனக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஏற்றுக்கொள்பவளாக இருக்கிறாள். அதை நாயகன் தவறு என சுட்டிக்காட்டி மாற்றிக்கொள்ள கூறுகிறான். அதை அவள் ஆறுதல் கூறுவதாக எடுத்துக்கொள்கிறாள். அந்தேனா... அந்தே
படத்தின் இறுதியில் கூட அவள் தனது லட்சியமான மருத்துவராகும் கனவை அடைந்தாள் என்று காட்டியிருந்தால் பார்வையாளர்களுக்கு நன்றாக நிறைவாக இருந்திருக்கும். ஆனால் திருமணம் செய்துகொள்வதாக காட்டி தெலுங்கு சினிமா ஃபார்முலாவுக்குள் படம் நுழைந்தது பெரிய ஏமாற்றம். இப்படி இயக்குநர் ஷிராவணி பாத்திரத்தை வடிவமைத்த காரணத்தால், அதன் அடிப்படை நேர்மையே அடிபட்டு போகிறது. பிச்சி, திங்கர்தனா என்று கூறாததுதான் பாக்கி.
ஷாலினி பாத்திரத்தைப் பார்ப்போம். டென்னிசுக்காக மட்டுமே உழைப்பவள். இதனால் அந்த வயதுக்கான காதலோ, நட்போ எதுவுமே அவளுக்கு நினைவில் இருப்பதில்லை. எப்போது போட்டி, வெற்றியா, தோல்வியா இவ்வளவுதான் அவளது வாழ்க்கை. நாயகன் அவளது வாழ்க்கையில் அறிமுகமாகி பார்ட்டி செய், மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள் என்கிறான். நாயகிக்கு அவளது அப்பாவின் கண்டிப்பான பயிற்சியிலிருந்து தப்பித்துக்கொள்ள சற்று ஓய்வெடுத்துக்கொள்ள ஆசை. போட்டி, வெற்றி, தோல்வி என வட்டமாக சுற்றிக்கொண்டிருப்பது அவளுக்குமே சலிப்பைத் தருகிறது.
போட்டி என வரும்போது சலிப்பை வெளிக்காட்டுவதிலை. உறுதியாக நின்று வெல்கிறாள். நாயகனுடைய காதலுக்காக போட்டியை விட்டுத்தரும்போது, அவனே சற்று அதிர்ந்து போகிறான். பிறகு, அவளது அப்பாவின் கருத்தைக் கேட்டு தனது காதலை விட்டுக்கொடுத்து அவளை டென்னிசில் கவனம் செலுத்தக் கூறுகிறான். அந்த இடத்தில் நாயகன் பேசும் வசனங்கள் சிறப்பாக உள்ளன.
இதற்கடுத்து, சந்தியா. அகண்ட பாரதத்தில் அர்பன் நக்சல், சப் அர்பன் நக்சல், ரூரல் நக்சல் என அழைக்கப்படும் ஆபத்திலுள்ள போராளி. பசுமை இயக்கம் தொடர்பாக இயங்குபவள். விலங்குகளை நேசிப்பவள். மனிதர்களை பெரிதாக நம்பாதவள். இவளுடைய அப்பா வழக்குரைஞர். அவளுக்கு ஆதரவாக நிற்பவர். பள்ளிக் காலத்தில் நாயகனுக்கு உதவி செய்து அடிவாங்குபவள். அன்றிலிருந்து இன்றுவரை தனது ஒரே நண்பன் நாயகன்தான் என்பதை உறுதியாக நம்பி வாழ்பவள். அதை நாயகன் அறிந்து நெகிழ்கிறான். தனது அடையாளத்தை மாற்றி வேறு பெயர் சொல்லி காதலிக்கிறான்.
முதலிரண்டு பெண்கள், சமூகத்தில் நடுத்தர வர்க்கத்திற்கும் சற்று மேலே உள்ளவர்கள். ஆனால், ஷிராவணி மட்டுமே சற்று தாழ்ந்த வாழ்க்கை நிலை கொண்டவள், சிறுவயதில், நாயகனின் வீட்டில் ஓட்டுநராக வேலை செய்பவரின் மகள்தான் ஷிராவணி. சாதியிலும் கூட தாழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.
பள்ளிக்கால தோழிகளில் மனம் கவர்ந்தவர்கள் மூவர். இவர்களை நாயகன் தனது அடையாளம் மறைத்து காதலித்து அவர்களது எதிர்வினையைக் கவனிக்கிறான். ஷாலினி, சந்தியா ஆகியோருக்கு தங்கள் வாழ்க்கையிலிருந்து, பிரச்னைகளிலிருந்து தப்பிக்கும் நோக்கமாக காதல் இருக்கிறது. அதற்காக நாயகனை, அவனுடைய காதலை பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஷிராவணிக்கு. தனது வாழ்க்கையை சுதந்திரமாக வாழும் வேட்கை உள்ளது. அதேசமயம் அவள் அகவயமானவளாக இருக்கிறாள். தனக்கானதை கேட்டுப்பெறக்கூட தடுமாறுகிறாள். பாராட்டோ, பிறந்த நாள் வாழ்த்தோ கூட கிடைக்காமல் அல்லாடுகிறாள். அந்த நேரத்தில் நாயகனின் அறிமுகம் கிடைக்கிறது. பெரிதாக நாயகனிடம் எதையும் கேட்பதில்லை. தனியாகவே அனைத்தையும் சமாளிக்கிறாள்.
அவளுக்கு வாழ்க்கையில் இருந்த கசப்புணர்வு சற்று மாறுகிறது. பொதுவாகவே, பெண்களால் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும்தான். ஆனால், அடிப்படையான ஆதரவு கிடைப்பதில்லை. அந்த ஆதரவை நாயகன் ஒருமுறை மருத்துவமனையில் வழங்குகிறான். பெரிதாகவெல்லாம் ஒன்றுமில்லை. அவளது கரத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டு உரக்கப் பேசச் சொல்லுகிறான். அதனால், அவளது பாட்டியின் உயிர் காப்பாற்றப்படுகிறது.
முக்கியமான குறைபாடு ஒன்றுள்ளது. ஷிராவணியின் தங்கை, நாயகன் தனது பாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய காசு கொடுப்பதைப் பார்க்கிறாள். அதை தனது அக்காவிடம் கூறுவதில்லை. அடுத்து, திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை ஷிராவணியை அனுபவித்துவிட்டு தூக்கி எறிந்துவிடலாம் என கூறுவதைக் கேட்கிறாள். அதையும் கூறாமல் கடைசியில் கூறுகிறாள். புரியவில்லை. எதற்கு இந்த காட்சிகள். தங்கை இப்படி நடந்துகொள்ள என்ன காரணம்? இயக்குநருக்குத்தான் தெரியும்.
ஏஎன்ஆர் வயதான தாத்தா பாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். காட்சிகளும் பரவாயில்லை. மோசமில்லை.
அக்மார்க் யு சர்டிபிகேட் படம். நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம்
தீராத காதல் விளையாட்டு
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக