காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கோணுங்க.....

 

 

 

 

 

 


 


காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கோணுங்க.....

மிளகாயின் காரம், உடலில் வெப்பத்தையும் வலியையும் ஏற்படுத்தக்கூடியது. ஆனால் அப்படி இருந்தாலும் கூட மக்கள் அதை உணவில் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அதிக காரம் கொண்ட சிவப்பு மிளகாய், சீனி மிளகாய் என எந்த ரகம் வந்தாலும் அதில் தூள் வாங்கி அல்லது நேரடியாகவே வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஏன் இந்த காரசார மோகம்?

அண்மையில், டென்மார்க் நாட்டின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தென்கொரிய நாட்டின் மூன்று வகை நூடுல்ஸ் வகைகளை விஷத்தன்மை கொண்டதாக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு காரணம், அந்த மூன்று வகை நூடுல்ஸ்களுமே அதீத காரச்சுவையைக் கொண்டவை. குழந்தைகளுக்கு இந்த நூடுல்ஸ் வகைகளை உண்ணக்கொடுப்பது ஆபத்து. இதில் காப்சைசின் என்ற வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளது. இதுவே காரத்தன்மையை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர். 



தெற்கு, மத்திய அமெரிக்காவிலிருந்து மிளகாய் செடியை உலகிற்கு அறிமுகம் செய்தவர், கிறிஸ்டோபர் கொலம்பஸ். இவர் மூலமே காப்சிகம் என்ற அறிவியல் பெயர் கொண்ட மிளகாய், சந்தையில் இருக்கிறது. நம் உணவிலும் காரசார சுவையை சேர்க்கிறது.

நம் உடலில் வெப்பம் அதிகரித்தால் டிஆர்பிவி1 என்ற உணர்வி அதை மூளைக்கு தகவல் அனுப்பும். பிறகு வெப்பத்திலிருந்து உடலைக் காக்கும் பணிகள் தொடங்கும். மிளகாய் சட்னி அல்லது மிளகாய் சேர்த்த உணவுகளை உண்ணும்போது, மேற்சொன்ன உணர்வி தூண்டப்படுகிறது. இந்த உணர்வி மனிதர்களின் வாய், மூக்கு, தோல் ஆகிய உறுப்புகளில் உள்ளது. உண்டவுடன் உடலே பற்றி எரிவது போன்ற எரிச்சலை மிளகாய் ஏற்படுத்துகிறது.

மூளையின் செயல்பாட்டால் உடல் வெப்பத்தைக் குறைக்க வியர்வை சுரக்கிறது. முகத்தில் ரத்த ஓட்டம் கூடுகிறது. இதன் விளைவாக முகம் சிவந்துபோகிறது. கண்ணிலிருந்து கண்ணீர், மூக்கிலிருந்து நீர் கொட்டத் தொடங்குகிறது. இதன் அடுத்த விளைவாக வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

2001ஆம் ஆண்டு பறவை, பாலூட்டிகளுக்கு உயிரியலாளர் ஜோஷ் டியூஸ்பரி, கேரி நாபன் ஆகியோர் இணைந்து சோதனை ஒன்றை நடத்தினர். அவை உண்ணும் உணவில் மிளகாயை சேர்த்தனர். பாலூட்டிகள் அதை கவனமாக தவிர்த்தன. பறவைகள் அதை மிட்டாய் போல எடுத்து சாப்பிட்டன. எனவே, பறவைகளுக்கு மனிதர்களுக்கு இருப்பது போல உணர்விகள் இல்லை என முடிவுக்கு வந்தனர்.

பறவைகள் மிளகாய் விதைகள் அப்படியே விழுங்கி செரித்து அதை தனது எச்சத்தின் வழியாக வெளியேற்றுகிறது. இப்படி பரவும் விதைகள் வழியாக மிளகாய் செடிகள் சரியான சூழல் அமைந்தால் பரவலாக வளர்கின்றன. பாலூட்டிகள் அதை மென்று தின்கின்றன. மிளகாய் விதைகளில் அதை பூஞ்சை, பூச்சிகளிலிருந்து பாதுகாக்கும் வேதிப்பொருள் காணப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
மிளகாய் செடி வளர நைட்ரஜன், நீர் அவசியத்தேவை.
தற்போது, ஐந்து மிளகாய் இனத்தில் இருந்து மூன்றாயிரம் மிளகாய் வகைகள் பயன்பாட்டில் உள்ளன. குளிர் நாடுகளை விட வெப்பமண்டல பகுதியைச் சேர்ந்த மக்கள் மிளகாயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், அதிக வெப்பம் சமைத்த உணவை விரைவில் கெட்டுப்போகச் செய்கிறது. அதைத் தடுக்க மிளகாயின் காரம் உதவுகிறது.

உளவியலாளர்கள், மிளகாயின் காரத்தை விரும்புபவர்கள் சாகச இயல்பு கொண்டவர்கள், சவால்களை எதிர்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள் என கூறுகிறார்கள். மிளகாயை அதிகளவு உணவில் பயன்படுத்தினால் தொடக்கத்தில் வயிற்றுவலி, நெஞ்சில் எரிச்சல், வயிற்றுப்போக்கு பிறகு குடல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.

டென்மார்க் உணவுத்துறை விவகாரத்திற்கு வருவோம். மிளகாயிலுள்ள காப்சைசின் வேதிப்பொருள் நச்சுத்தன்மையை அடைவதற்கு முன்னதாக அதை சாப்பிடவேண்டும் என உணவுத்துறை அதிகாரிகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றனர். ஆனால் அதை சமூக வலைத்தளத்தில் பார்த்த இளைஞர்கள், அவர்களுக்கு சவால் விடுவோம் என்று கூறி அதிக காரம் சேர்ந்த நூடுல்ஸ் சூப்பை குடிக்கும் சவாலை நடத்தினர். இப்படி இளைஞர்கள் சவால் விடுப்பது புதிதல்ல. கடந்த ஆண்டு, அமெரிக்காவின் மசாசூசெட்சிலுள்ள இளைஞர் அதிக காரம் கொண்ட உணவு உண்டு, இதயம் பாதிக்கப்பட்டு இறந்துபோனார். அந்த இளைஞருக்கு இதயம் தொடர்பான நோய் முன்னமே இருந்திருக்கிறது. அதை அர் சவால் வேகத்தில் கண்டுகொள்ளவில்லை. மிளகாயின் காரம், நச்சுத்தன்மையாகி அவரை சாய்த்துவிட்டது. உணவில் மிளகாயை குறைவான அளவில் பயன்படுத்துவதே நல்லது. உணவு கட்டுப்பாட்டு நிறுவனங்கள், லஞ்ச லாவண்யத்தில் புரண்டெழுவதால், மக்கள் தாங்கள் வாங்கி உண்ணும் உணவுகள், அதில் சேர்த்துள்ள பொருட்கள் பற்றி கவனமாக இருப்பது அவசியம்.


WHY CHILIS BURN. AND WHY HUMANS STILL LOVE THEM


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்