புரட்சி, அரச பயங்கரவாதம் என இரண்டுக்கும் இடையில் உயிர்பிழைக்கப் போராடும் ஆதிவாசிகள்!

 



வாழும் பிணங்களாகிவிட்ட ஆதிவாசி மக்களின் கதை

மரணத்தின் கதை
ஆசுதோஷ் பரத்வாஜ்
தமிழில் அரவிந்தன்
காலச்சுவடு
பக்கம் 333.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர், தண்டகாரண்யம் ஆகிய காட்டுப்பகுதியில் வாழும் ஆதிவாசி மக்களின் வாழ்க்கை எப்படி, மரணத்தின் கதையாக மாறியது என்பதை நூல் விரிவாக விளக்குகிறது. இந்த நூல், அபுனைவு வகையைச் சேர்ந்தது. ஆனால் நூலை வாசிக்கும்போது அதை உணர முடியாது. புனைவு நூலின் மொழியில் அபுனைவு நூல் என புரிந்துகொள்ளுங்கள். தமிழில் அரவிந்தன் நூலை சிறப்புற மொழிபெயர்த்திருக்கிறார்.

ஆசுதோஷ் பரத்வாஜ், நேரடியாக களத்திற்கு சென்று செய்திக்கட்டுரைகளை எழுதி அனுப்பி பத்திரிகைக்கு அனுப்பியிருக்கிறார். அதோடு,  ஏராளமான வெளிநாட்டு எழுத்தாளர்களின் மேற்கோள்கள், நூல்களை சுட்டிக்காட்டி கட்டுரை நூலாக தொகுத்து எழுதியிருக்கிறார். அதுவே நூலுக்கு தனித்த தன்மையை அளிக்கிறது. 2000 தொடங்கி 2021 வரை ஆதிவாசிகளின் கிராமங்களுக்கு சென்று வந்த அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். இவர் ஒரு பத்திரிகையாளர் என்றாலும் அதில் நடைபெறும் செயல்கள், துரோகங்கள், நக்சல் பெண்களை இழிவுபடுத்தும் செய்திகள், கிராமத்து செய்தியாளர்களுக்கு அங்கீகாரம் வழங்காத குணம், உண்மையை அறியாமல் செய்தியை அரசுக்கு ஆதரவாக வெளியிடுவது என நிறைய விஷயங்களை கட்டுடைத்து எழுதியிருக்கிறார்.

நூலின் இறுதியில், பின்பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பு தோன்றிய வரலாற்றை எழுதியிருக்கிறார். அதை முன்னமே படித்துவிட்டு நூலை வாசிப்பது நலம். நிறைய விஷயங்களை எளிதாக புரிந்துகொள்ளலாம். நூலில் ஏராளமான அடிக்குறிப்புகள் உள்ளன. அவை பலவும் மாவோயிஸ்ட் குறித்த செய்திகளின் விரிவாக்கமாக, வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதிய நாவல், கட்டுரைகளின் விரிவாக்கமாக இடம்பெற்றுள்ளது. இந்த நூலைப் படித்தாலே அடுத்து வாசிக்கவேண்டிய நூல்களின் பட்டியல் ஒன்று வாசகர்களுக்கு கிடைத்துவிடும். அந்தளவு சிறந்த வாசிப்பாளராக நூலாசிரியர் உள்ளார். தனது பைக் ஆற்றில் மூழ்கி, கீழே விழுந்து பல் ஒன்று உடைந்துவிட்ட சூழலிலும் கொண்டு சென்ற நூலை வாசித்துக்கொண்டே பத்திரிகை வேலையை செய்திருக்கிறார்.

நூலின் முதல் அத்தியாயம் இறந்துபோன நக்சல் வீரர், தனது இறப்பு பற்றி தானே பேசுவது போன்ற தொனியில் உரைநடை அமைகிறது. இந்த நடையழகு நூல் முழுவதும் உள்ளது. அதுவே நூலை தனித்தன்மை கொண்டதாக மாற்றுகிறது. முதல் அத்தியாயத்தில் கதையைத் தொடங்கும் நபர், நக்சல் அமைப்பில் இருந்து பிரிந்து வந்து காவல்துறையில் தகவல் கொடுப்பவராக இருப்பவர். அதன் விளைவாக நக்சல் அமைப்பால் கொல்லப்படும் பட்டியலில் இடம்பெற்ற ஆள். துரோகி என்றால் தெளிவாக புரிந்துவிடும்.

ஆதிவாசிகளுக்கு அரச வன்முறையில் இருந்து தப்பிக்க இருக்கும் ஒரே வாய்ப்பு, மாவோயிஸ்ட் அமைப்பில் சேருவதுதான். இல்லையெனில் அவர்கள் செய்யாத குற்றத்திற்கு சிறையிலேயே இருக்க வேண்டியதுதான். மத்தளத்திற்கு இருபுறமும் அடி என்பது தேய்வழக்கு. ஆனால், அதை இங்கே சொல்லியாகவேண்டும். மாவோயிஸ்டுகள் ஆதிவாசி மக்களிடம் தங்களது புரட்சிக் கனவை விதைக்கிறார்கள். அதை கோண்டு மொழியில் செய்கிறார்கள். ஆனால், அரசு, ஆதிவாசிகளின் மொழிகளை புறக்கணித்து வடமொழியில் அல்லது ஆங்கிலத்தில் பள்ளிப் பாடங்களை நடத்துகிறது. அது எடுபடுவதில்லை. ஆதிவாசிகளுக்கு, மாவோயிஸ்ட் லட்சியங்கள் பற்றி ஏதும் தெரியாது. ஆனால், அவர்கள்தான் அம்மக்களுக்கு நெருக்கமாக இருந்து உதவுகிறார்கள். பதிலுக்கு மக்களும் உதவுகிறார்கள். சிலர் பயன் கிடைக்கும் என்றால் காவல்துறை மாவோயிஸ்ட் என இருபுறமும் தகவல்களைக் கொடுக்கிறார்கள். துரோகமாக தெரிகிறதா? உயிர்வாழ இந்த துரோகத்தை செய்கிறார்கள்.

பஸ்தர், தண்ட காரண்யம் ஆகிய காடுகளை தனியார் சுரங்க நிறுவனங்களுக்கு விற்றுவிட ஒன்றிய அரசு முனைகிறது. அதை ஆதிவாசிகள் விரும்பவில்லை. மாவோயிஸ்டுகள் அரசை ஆயுதம் தாங்கி எதிர்க்கிறார்கள். அரசும் சும்மாயில்லை. 2005ஆம் ஆண்டு சல்வா ஜூடும் என்ற ஆயுதம் தாங்கிய ஆதிவாசி படையை உருவாக்கியது. 2007ஆம் ஆண்டிலேயே இதைக் கலைத்துவிட்டனர். இந்த காலகட்டத்தில் இந்த அமைப்பு செய்த கொடூர கொலை, வல்லுறவுகள் அதிகம். பழங்குடி இனத்தில் பிறந்து பேராசையில் காட்டை ஆள விரும்பி மண்ணையும், மக்களையும் விற்றுவிட முயன்ற அரசியல் தலைவர்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் கூடுதலாக உள்ளன. அப்படி மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்ட ஒருவர் மகேந்திர கர்மா. பழங்குடியான இவரது செயல்பாடுகளைப் பற்றி பரத்வாஜ் விவரித்து எழுதும்போதே தெரிந்துவிடுகிறது, சுரங்கங்களுக்கு ஆதரவான மனநிலை கொண்டவர் என. வளம் மக்களுக்கு சென்று சேர்கிறதா என்று கேட்டால் இல்லை. கர்மா குடும்பத்திற்கு சேர்கிறது. பஸ்தர் காடுகளின் வளத்தை தனியொரு குடும்பமாக கர்மா ஆள நினைத்தார். அதை மாவோயிஸ்டுகள் தடுத்தனர். இதுதான் அடிப்படையான விஷயம்.

இதில், இந்து மதவாத கட்சியான பாஜக பற்றிய பகுதிகள் சில உண்டு. அசல் பச்சோந்தித்தனம். சந்தர்ப்பவாதம்  என்றால் அந்த கட்சியின் செயல்பாடுகளைக் கூறலாம். குறிப்பாக முதல்வர் ராமன்சிங் பற்றிய விவரிப்புகள். எல்லாமே குறுகிய சுயநல நோக்கங்களைக் கொண்டவை. இதில், அன்றைய ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் கூட விதிவிலக்காக இல்லை.  மதவாதகட்சி, காங்கிரஸ் கட்சி என இரண்டுமே மாவோயிஸ்டுகளை அழிக்கவேண்டும். அதற்கான முயற்சியில் ஆதிவாசிகள் இறந்தாலும் தவறில்லை என அரசு துணிந்துவிட்டதை இறுதியாக நூலாசிரியர் எழுதியே விட்டார். தொடக்கத்தில் நூலை வாசிக்கும்போது நமக்கு தோன்றுவதும் கூட இதே எண்ணம்தான். சொந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்ணை ஒன்றிய அரசின் ராணுவப்படையினர் சுட்டுக்கொல்கிறார்கள். ஆனால் அதை மறுத்து அந்தப் பெண் வேசி என பழங்குடி இன மருத்துவர் ஒருவரே பிணக்கூராய்வு அறிக்கை அளிக்கிறார். அதை ஊடகங்களில் வெளியிட்டு பழங்குடி அரசியல்வாதி, மனதில் ஈரமே இல்லாமல் இறந்த பெண்ணை இழிவுபடுத்துகிறார். இந்த பகுதிகளை வாசிக்கும்போது வலி, வேதனை, விரக்தி என பல்வேறு உணர்வுகள் தோன்றுகின்றன. கல்வியறிவு இல்லை, ஆதரவாக பேச ஆட்கள் இல்லை. பத்திரிகையாளர்கள் இல்லை, உதவி செய்ய மனிதர்களும் இல்லை. எனவே, ஆதரவற்ற ஆதிவாசிகளைப் பற்றி என்னவேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் என பிழைப்புவாதிகள் துணிந்துவிட்டனர்.

ஆதிவாசிகளை சுட்டுக்கொன்றுவிட்டு, பிறகு கத்தியால் உடல் முழுவதும் குத்தி பிணத்தை சிதைப்பது என்பதை காவல்துறை (ஒன்றிய ராணுவப்படை) தொடர்ச்சியாக செய்கிறார்கள். இது மாவோயிஸ்டுகளை வெறியேற்றுகிறது. இதன் விளைவாக பழங்குடி இனத்திற்கு துரோகம் செய்த மகேந்திர கர்மாவின் உடலில் எண்ண முடியாத அளவில் கத்திக்குத்து காயங்கள் இடம்பெற்றன. வன்முறையை எந்த இடத்திலும் சரியென நியாயம் செய்யமுடியாது. ஆனால் இங்கு கத்தியோ, துப்பாக்கியோ தூக்கவில்லையென்றால் உயிரோடு இருக்க முடியாது என்றால் என்ன செய்வது?   

இந்த நூலை வாசித்தால் மாவோயிஸ்டுகள் பற்றி விலைபோன ஊடகங்களில் வரும் முட்டாள்தனமான செய்திகளை பற்றிய புரிதல் தெரியவரும்.பிறகு, தெளிவு கிடைக்கும்.

செங்கோட்டையில் செங்கொடி என்பது மாவோயிஸ்டுகளின் கனவு. அதை சாத்தியப்படுத்த அவர்கள் முயல்கிறார்கள். நிறைவேற்ற முடியாத கனவு என தெரிகிறது. ஆனாலும் இயங்குகிறார்கள். இன்றைக்கு, 1980இல் கொண்டப்பள்ளி சீதாராமையாவால் தொடங்கப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் மக்கள் யுத்தக்குழு என்பதே வலுவான இயக்கமாக உள்ளது. காலப்போக்கில், இதில் நிறைய சகோதர இயக்கங்கள் இணைந்துள்ளன. மத்தியக்குழுவில் உள்ளவர்களில், ஆந்திர உறுப்பினர்களே அதிகம். பிற மாநில மக்களைவிட தத்துவப் புரிதல் கொண்டவர்களாக கொள்கை பிடிப்புள்ளவர்களாக இவர்களே உள்ளனர் என நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இதற்கு ஆதாரமாக பல்வேறு இடங்களில் உள்ள செயல்பாடுகளை அடையாளம் காட்டுகிறார்.
 
இந்த நூல் மாவோயிஸ்டுகள், அரசு செய்யும் செயல்களை பாரபட்சமின்றி முன்வைக்கிறது. ஆதிவாசி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. இறந்துபோன ஆதிவாசிகளின் உடல்களைப் பார்த்து அதை புகைப்படம் எடுக்க கூட மறந்து அதிர்ச்சியில் உறைந்து போகிறார் பத்திரிகையாளர் பரத்வாஜ். இதனால், ஒரு கட்டத்தில் சில அத்தியாயங்களில் அவரின் மனநிலை பிறழ்ந்துவிட்டது போன்ற எழுத்தை வாசிக்கிறோம். குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகி  தன்னை மரண செய்தியாளன் என கூறிக்கொள்கிறார் பரத்வாஜ். அப்படியும் சுதாரித்து ஆதிவாசிகளின் மரணங்களைப்பற்றி செய்திகளை எழுதி உண்மை வெளிவரவும், அரசியல் தளத்தில் பஸ்தர், தண்டகாரண்ய காடுகளைப் பற்றி பேசப்படவும் முயன்றிருக்கிறார்.

காவல்துறையினர், மாவோயிஸ்டுகள் என இரு தரப்பினரோடும் இணைந்து பயணித்த பத்திரிகையாளர் இவர்.  நூலில் ஓரிடத்தில் காவல்துறை அவரது கட்டுரைகளை தட்டச்சு செய்ய தங்களது கணினியைப் பயன்படுத்த அனுமதி கொடுத்தது பற்றிய நன்றியறிதலை தெரிவிக்கிறார். இப்படியான பகுதி எதற்கு என்று புரியவில்லை. காவல்துறைக்கும் , பத்திரிகைத் துறைக்கும் அனுசரித்துச் செல்லும் உறவு எப்போதும் உண்டு.
பிணக்கூராய்வைக் கூட நேர்மையாக செய்யாத காவல்துறைக்கு பாராட்டு எதற்கு? விதிகளை மீறி ஆதிவாசிகளின் பண்டிகைகளில் உள்ளே புகுந்து மக்களை சுட்டுக்கொன்றவர்கள் யார்? அப்பாவிகளை கைது செய்து சிறையில் அடைத்து வாழ்க்கையை நிர்மூலமாக்குவது யார்? என வாசகர்கள் நூலாசிரியரிடம் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன.

மாவோயிஸ்டுகளின் நடவடிக்கை, அவர்களின் வாழ்க்கை, கனவு, இயக்கத்தின் சட்ட திட்டங்கள், திருமணம் என பல்வேறு விஷயங்களை நூல் மூலம் அறிந்துகொள்ளலாம். குறிப்பாக அவர்கள் தாக்குதல் நடத்தும் விதம் பற்றிய தகவல்களும் உள்ளன. நாட்டின் இயற்கை வளத்தைக் காக்க அல்லது அதை அபகரிக்க நடைபெறும் போட்டி என இருவருக்குமான மோதலைக் கூறலாம். இதே மாவோயிஸ்டுகள், சுரங்க நிறுவனங்களிடம் லஞ்சப்பணத்தை வாங்கி பிரித்துக்கொள்வதைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இதில் மாறுபட்ட கருத்துகள் வரும்போது, கொலைகள் விழுகின்றன. திருமணம் செய்வதில் சிலருக்கு விலக்கு. சிலருக்கு மட்டும் தண்டனை கிடைக்கிறது.

மாவோயிஸ்ட் அமைப்பில் சேர்ந்துவிட்டு குடும்ப வாழ்க்கைக்காக விலகுபவர்களுக்கு வாழ்க்கை எளிதாக இருப்பதில்லை. காவல்துறை, ரகசிய தகவல்களுக்காக நெருக்குவது ஒருபுறம். துரோகி என கூறப்பட்டு அவரது முன்னாள் இயக்க தோழர்களே வேட்டையாட துரத்துவது மறுபுறம் என வாழ்க்கை செல்லும். முன்னாள் நக்சல்கள் கிராமத்தில் தங்கி விவசாயம் பார்த்தால் மட்டும் உயிர் தப்ப வாய்ப்பு உள்ளது. இதையும் பரத்வாஜ் தனது எழுத்து மூலம் விவரித்துள்ளார். குழந்தை பெற்று அதை குடும்பத்தினரிடம் வளர்க்க கூறிவிட்டு இயக்கத்தில் இணைந்து போரிட்டு உயிரைவிட்ட தோழா்களும் உள்ளனர். இதில் குழந்தைகள் தந்தை, தாயை நெருக்கமாக பார்த்த கணம் கூட குறைவு. சில சம்பவங்களை வாசிக்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. ஒரு குழந்தை பெற்றோரை சிலமுறை மட்டுமே பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற சூழலை நினைத்துப் பாருங்கள். போர் என்பது நடைபெறும் நேரம் குறைவாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் ஆயுள் பரியந்தம் நடைபெறுவது என்பது மனதில் விரக்தியை உருவாக்குகிறது. அன்பிற்கான சற்று ஓய்ந்திருக்கலாமோ என்ற தவிப்பை ஏற்படுத்துகிறது.

மாவோயிஸ்ட் அமைப்பில் திருமணம் என்பதை எப்படி புரிந்துகொள்கிறார்கள்? அந்தப் பகுதி குழப்பமாக உள்ளது. தோழர்கள் காதலித்தால் அவர்களுக்கு தியாகிகளின் நினைவிடங்களில் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் தம்பதிகள் வேறு வேறு படைகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறார்கள். அப்புறம் எதற்கு திருமணம்? குழந்தை பிறந்தால் புரட்சிக் கனவு மறைந்துவிடுமாம். அதற்கு திருமணம் செய்து வைக்காமலேயே விட்டுவிடலாமே? ஒருவரை எதற்கு திருமணம் என்ற பெயரில் வதைக்க வேண்டும்? பிரித்து வைத்து தந்திரங்களை செய்யவேண்டும்? இதில் குடும்பக்கட்டுப்பாடு, கருக்கலைப்பு பிரச்னைகளும் உண்டு. இயக்கம் இதிலும் தலையிட்டு உத்தரவுகளை பிறப்பிக்கிறது. இதை பகடியாக ஆண்குறி, துப்பாக்கிக் குழலை ஒப்பிட்டு ஒரு உதாரணத்தை பத்திரிகையாளர் பரத்வாஜ் எழுதியுள்ளார்.

சமகாலத்தில் வலதுசாரி மதவாத ஆட்சியாளர்கள், தங்களது கருத்தியலுக்காக வடமொழியை அரசியலமைப்புச்சட்டத்தை சிதைத்து அனைத்திலும் புகுத்துகிறார்கள் அல்லவா? அதே ரீதியில் ஆதிவாசிகளிடையே கலாசாரத்தை பண்பாட்டை அழித்து ஒற்றை இந்து அடையாளத்தை உருவாக்க முனைகிறார்கள். ஆனால் அவை பயனளிப்பவையாக இல்லை. காட்டில் இருக்கும் வரை சரி. அங்கிருந்து வெளியேற்றப்படும்போது அவர்கள் நகரத்திற்கு அந்நியர்களாக இருப்பார்கள். இப்போதே தங்களது காடுகளை அழித்து உருவாகும் தொழிற்சாலைகளில் தினக்கூலிகளாக மாறத் தொடங்கிவிட்டனர். அதைப் பற்றி பரத்வாஜ் எழுதுவதை வாசிப்பதே வலியைத் தருவதாக உள்ளது.

நூல் முழுக்க நிறைய மனிதர்கள் சிறு பாத்திரங்களாக வந்து போகிறார்கள். அபுனைவு என்றாலும் அப்பாத்திரங்களின் குணங்கள் காரணமாக புனைவு போலத் தோன்றுகிறது. பரத்வாஜின் வீட்டுக்குள் வரும் தவளை, பிரபுல்ல ஜா என்ற மொழிபெயர்ப்பாளர், மருத்துவர் பிரகாஷ் ஆம்தே, மேஜர் சாப், ரெட்டி, ரஜ்னு, பத்மா, ஜாபிலி என மறக்க முடியாத பாத்திரங்கள் நிறைய உண்டு. இவற்றின் வழியாக ஒருவர் பல்வேறு கலவையான உணர்வுகளைப் பெற முடிகிறது.

நூலில் மாவோயிஸ்டுகள் கடிதம் அனுப்பி முக்கிய முடிவுகளை எடுக்கும் பகுதி ஒன்றுள்ளது. அதில், நிலைத்து நிற்கும் உண்மை பற்றி முனிவர் யாக்ஞவல்கியர் கூறும் கருத்து பிரமாதம். இயக்கத்தினர் பலவற்றையும் ஆவணப்படுத்திக் கொண்டே வருகிறார்கள். இதற்கடுத்து, ஆயுதம் தாங்கிய ராணுவப்படையினர் பற்றி ராமாயணத்திலிருந்து சீதை கூறுவது போல அமைந்த பகுதி, அரச பயங்கரவாதத்தை சாடையாக இடித்து சுட்டிக்காட்டுகிறது. நகரத்திற்கும், காட்டுக்குமான விதிகள் வேறுவேறு. அதை நகரவாசிகள் புரிந்துகொள்ளாமல் அங்குள்ளவர்களை அசுரர்களாக, அழிக்கப்பட வேண்டியவர்களாக கருதிக்கொள்கிறார்கள். சீதை, ஆயுதங்களை தரித்துள்ள ராமனை அவற்றைப் பயன்படுத்தும் அவசியமில்லை. நீங்கள் நீங்களாக இருங்கள் என கூறுகிறாள். ஆனால் அவனோ முனிவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்று சொல்லி காட்டிலுள்ள மக்களை அழிக்க உறுதி பூணுகிறான்.

ஆதிவாசிகளுக்கு மதம் என்பது இந்து மதம் அல்ல. அவர்கள் நகரவாசிகளிலிருந்து மாறுபட்ட கதைகளைக் கொண்டவர்கள். சில பழங்குடிகள் மகிஷாசுரன் இறந்துபோனதை துக்க நாளாக அனுஷ்டித்து விழா எடுக்கிறார்கள் என்ற தகவல் ஆச்சரியப்படுத்துகிறது. மாறுபட்ட கதைகளின் வழியாக தங்களது எதிர்ப்புணர்வைக் காட்டுவதாக வரும் பகுதி சிறப்பாக உள்ளது. புதிய செய்தியாக அவர்களை புரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு உதவக் கூடியது. பன்மை கலாசாரம்தான் இந்த நாட்டின் அடையாளம். அதை ஒற்றை பரிமாணமாக மாற்றுவது வியாபாரத்திற்கு உதவும். மக்களின் வாழ்க்கை மேம்பட உதவாது. ஓரிடத்தில் நக்சல் கேட்கிறார். சுதந்திர இந்தியாவை உருவாக்கிய நேரு இன்று வில்லனாக பார்க்கப்படுகிறார். இதை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் அல்லவா? நேருவி்ன் ஆட்சிக்காலத்தில் வடகிழக்கு மாநிலங்களில்  மக்களுக்கான வளர்ச்சிப்பணிகளில் காட்டிய அக்கறை வியப்பூட்டுகிறது. வெளிநாட்டு நிபுணர், ஆதிவாசிகளின் கலாசார செயல்பாடுகளைப் பற்றி புரிந்துகொண்டு கட்டுமானங்களை அப்படியே அமைக்கவேண்டுமென கூறுகிறார். ஆனால் இங்குள்ள மகான்களோ, நகரத்தில் உள்ளது போன்ற கட்டிடங்களை எழுப்பி நிறுவினர். இப்படி அமையக் கூடாது என நேரு கண்டித்து எழுதியிருக்கிறார். அந்த ஜனநாயகத்தன்மை இன்று காங்கிரசிலும் இல்லை என்பதே நகைமுரணாக உள்ளது.  

உண்மையில் இந்தியா தோற்றுக்கொண்டு இருக்கிறது. பாரதம் எழுச்சி பெற்றுக்கொண்டிருக்கிறதா? தெரியவில்லை. இந்து தீவிரவாத அமைப்புகள் செய்யும் இன அழிப்பு, கலவரங்களால் ஒன்றிய நாடு துண்டாடப்பட்டு வருகிறது. அதிகார வெறியும், பேராசையும் பல்லாயிரக்கணக்கான எளிய மக்களை பலி கொள்கிறது. அதை துணிச்சலாக பேச பத்திரிகையாளர் பரத்வாஜ் முன்வந்திருக்கிறார். இது ஒரு கட்டுரை நூல் மட்டுமல்ல. ஆதிவாசி மக்களின் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்கான ஆவணம் கூட.

இது ஒரு காட்டின் கதை, மரணத்தின் கதையாக எப்படி மாறியது என்பதைக் கூறும் நூல்.

கோமாளிமேடை டீம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்