அடிமைகளை விட கேவலமானவர்களைக் கொண்ட நாடு!

 

 

 

 

 



 

 


சீன நாட்டோடு இந்திய மக்கள் தம்மை இணைத்துக்கொள்ள முடியுமா என்றால் முடியாது. ஆனால், சில தற்செயலான தொடர்புகளைப் பற்றி பேசி மகிழ்ந்துகொள்ளலாம். பௌத்த மதம் இந்தியாவில் உருவானது. அதை, இந்து மதத்தில் இருந்து உருவானது என அரசு அமைப்பு பட்டியலிட்டுள்ளது. இந்துத்துவ முட்டாள்களும் அப்படியே பிரசாரம் செய்து வருகிறார்கள். கூடவே, அரசில் இணைந்து இன அழிப்பு செய்து பிற சிறுபான்மையினரை அழிக்க முயல்கிறார்கள்.

சர்க்கரை தயாரிப்பு, பட்டு ஆடைகள் உற்பத்தி, சீன மொழியில் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமொழி சொற்கள் ஆகியவை இந்தியாவுடனான தொடர்பை உறுதி செய்கிறது. சீனாவின் யுன்னானிலுள்ள டாய் எனும் சிறுபான்மை மக்கள் ராமாயணத்திற்கான தனித்த வடிவத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

1636-1912 காலகட்டத்தில் பிரிட்டிஷாரால் சீனாவுக்கு ஆபத்து ஏற்பட்டது. அப்போது பிரிட்டிஷ் படையில் பெருமளவில் இருந்தவர்கள், இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சீக்கியர்கள். இவர்கள் ஹாங்காங், ஷாங்காய், ஹாங்கூ ஆகிய பகுதிகளில் ஆங்கில அரசுக்கு ஆதரவாக படுகொலைகளை செய்தனர். எனவே, அன்று தொடங்கி சீனாவில், இந்தியா என்றால் அடிமைகளை விட கேவலமானவர்களைக் கொண்ட நாடு, தோற்றவர்களின் நாடு, தொலைந்த நூற்றாண்டின் மக்கள் என விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள். ரவீந்திரநாத் தாகூரையே இழிவு செய்து பேசியவர்களும் அதிகம்.

அதில் தவறு என்று கூற ஏதுமில்லை. அவர்கள் பாதிக்கும்படியான செயல்களை பிரிட்டிஷாரோடு இணைந்து செய்தது, இந்தியர்கள்தான். சீனா, ஜப்பான் போரின்போது, இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் ஜப்பானுக்கு எதிரான மனப்பான்மை இருந்தது. இதைப்பற்றி தேர்ட்டீன் மன்த்ஸ் இன் சீனா என்ற நூலில் புரட்சியாளர் கடாதர் சிங் எழுதியுள்ளார். ஜப்பான் சீனாவை ஆக்கிரமிக்க முயன்றபோது, சீனாவுக்கு நேரு, காந்திர ரவீந்திரநாத் தாகூர் ஆதரவளித்தனர். அதை சீனா இன்று மறந்துவிட்டது. இதைக் கடந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் காலனியாதிக்க காலகட்ட நினைவுகள் பொதுவானவை.

1947ஆம்ஆண்டு டெல்லியில் ஆசிய நாடுகளுக்கான மாநாடு நடத்தப்பட்டது. அதில், திபெத் சீனாவின் பகுதியாக வரைபடத்தில் குறிப்பிடப்படவில்லை. இதுபற்றி சீன பிரதிநிதிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்தியா தனது நாட்டில் இருந்து சீனாவுக்கு அதிகாரப்பூர்வமாக விஜயலட்சுமி பண்டிட்டை அனுப்பி வைத்த ஆண்டு, 1952, ஏப்ரல் 26. 1954ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே பஞ்சசீல கொள்கை ஒப்பந்தம் இடப்பட்டது. இதன்படி, இரு நாடுகளும் வேளாண்மை அறிஞர்கள், இளைஞர்கள், பொருளாதார அறிஞர்கள், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள், தொழிற்சங்க தலைவர்கள், மாணவர்களை பரிமாறிக்கொள்ளலாம்.

இ்ந்தியாவின் கவிஞர்களின் படைப்புகள், சீனாவில் பரவலாக நாடகங்களாக அரங்கேற்றப்பட்டுள்ளன. உலகளவில் சீனாவில் கலாசாரத்தை பிரசாரம் செய்ய இந்தியா உதவியுள்ளது. திபெத்தின் தலைவராக இருந்த தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. 1952ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்தது. இதெல்லாம் சீனாவுக்கும் இந்தியாவுக்கு அரசியல் உறவு கெட்டுப்போக முக்கியமான காரணங்கள்.

இதெல்லாம் கடந்து தொண்ணூறுகள் தொடங்கி கலாசார பரிவர்த்தனை ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையில் உள்ளது. கலை, கல்வி, விளையாட்டு, உடல்நலம் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனாவின் முதல் கலாசார விழா 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி, 1993ஆம் ஆண்டு ஜனவரி வரையில் நடைபெற்றது. இதில், பொம்மலாட்டம், புகைப்பட கண்காட்சி, திரைப்படம் சீன பாடல்கள், திரைப்படங்கள், அக்ரோபேடிக்ஸ் ஆகியவை இடம்பெற்றன. 1994 ஆம் ஆண்டு மே ஜூன் மாதம், இந்திய கலாசார விழா சீனாவில் நடைபெற்றது.

2013ஆம் ஆண்டு மே மாதம், இருநாடுகளிலும் உள்ள கலாசார முக்கியத்துவமான இலக்கியப்படைப்புகளை மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் சீனப் பிரதமர் லி கேகுயிங் பங்கேற்றார். இதன்படி இரு நாடுகளும் இருபத்தைந்து செவ்வியல் படைப்புகளை சீனமொழி, இந்தியில் மொழிபெயர்க்க முடியும். ஆனால் கால்வான் பகுதியில் ஏற்பட்ட எல்லைப் பிரச்னைகள் மேற்படி இலக்கிய செயல்பாட்டிற்கு சிக்கலை ஏற்படுத்தியது.  

சீனா, இந்தியாவில் உள்ள பல்வேறு அடிப்படை வேதங்கள், நீதிநெறி நூல்களை தனது மொழியில் மொழிபெயர்த்துவிட்டது.சீனாவில் உள்ள இலக்கியங்களை ஆய்வு செய்வது, முக்கிய செவ்வியல் இலக்கியங்களை இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பது பெரும்பணி. இந்திய அரசு, வணிகம் செய்தால் மட்டுமே போதும் வேறு செயல்பாடுகள் வேண்டாம் என நினைக்கிறது. எனவே, அந்த நாடு பற்றியும் கலாசாரம் பற்றியும் ஆழமாக நாம் அறிய முடியாமல் போய்விட்டது.


பி ஆர் தீபக்கின் கட்டுரையை அடிப்படையாக கொண்டது.

தி வீக்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்