பட்ஜெட் 2024 இல் தமிழ்நாட்டிற்கு பயன்தரும் விஷயங்கள்!
பட்ஜெட் 2024 இல் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எந்த நிதி ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. அறிக்கையில், அறிவிக்கப்பட்ட மற்ற திட்டங்களில் இருந்து ஏதேனும் பயன்கள் உண்டா என்று பார்ப்போம்.
வேளாண்மை
இத்துறையில் உள்ள ஆவணங்கள், தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் மாற்றப்படவிருக்கின்றன. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை வைத்து எளிதாக விவசாய கடன்களைப் பெறலாம். 102 வீரிய பயிர் ரகங்கள், காலநிலை மாற்றத்தை தாங்கும் 32 தோட்டப்பயிர் ரகங்கள் அறிமுகமாகியுள்ளன. பருப்பு, எண்ணெய் வித்துகள் ஆகியவற்றை பயிரிடவும் ஒன்றிய அரசு முனைந்துள்ளது. இயற்கை விவசாய பிரசாரமும் இதில் கூடுதலாக இணைந்துள்ளது. இவற்றை தமிழ்நாடு பயன்படுத்திக்கொள்ளலாம்.
சிறுகுறு தொழில்கள்
நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாக சிறு, குறு தொழில்கள் அதிகம் கொண்டதாக தமிழ்நாடு உள்ளது. வேலை சார்ந்த ஊக்கத்தொகையை ஒன்றிய அரசு வழங்கவிருப்பதால், புதிய பணியாளர்கள் சிறுகுறு தொழில்துறையில் அதிகம் சேரக்கூடும். புதிதாக படித்துவிட்டு தொழில்துறைக்கு வரும் அனுபவமில்லாதவர்களுக்கு பணி வாய்ப்பை வழங்குவது சிறுகுறுதொழில்துறை மட்டுமே. அண்மைக்காலமாக நிதி நெருக்கடி, போதிய பணியாளர்கள் இன்மை ஆகியவற்றால் இத்தொழில்துறை போராடிக்கொண்டிருந்தது. ஒன்றிய அரசின் அறிவிப்பு காரணமாக நிலைமை மாறலாம். புதிதாக படித்துவிட்டு வரும் பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு கிடைக்கலாம். எதிர்காலத்தில் சிறுகுறு தொழில்துறையும் மேம்படலாம்.
கடல் சார்ந்த பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி
நடப்பு ஆண்டில் தமிழ்நாடு 484 மில்லியன் டாலர்களுக்கு கடல் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. மீன் தீவனங்களுக்கு ஒன்றிய அரசு ஐந்து சதவீத வரியைக் குறைத்துள்ளது. இது கடல்பகுதி மாநிலமான தமிழ்நாட்டிற்கு ஆதரவாக அமைய வாய்ப்புள்ளது. இறால் பண்ணைகள், மீன் வளர்ப்பு ஆகிய தொழில்கள் மேம்பாடு அடையக்கூடும்.
மின்னணு உற்பத்தி
ஸ்மார்ட்போன்கள் , சார்ஜர், அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்ட் ஆகியவற்றுக்கு பிசிடி எனும் அடிப்படை சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது. லித்தியம், தாமிரம், சிலிகான் ஆகிய கனிமங்களுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளதால், அத்துறை சார்ந்த நிறுவனங்கள் வளர்ச்சி பெறக்கூடும். மின்னணு பொருட்களை உள்ளூர் அளவில் தயாரிப்பதற்கு ஒன்றிய அரசின் வரிகுறைப்பு உதவ வாய்ப்புள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் போனின் 14 மில்லியன் டாலர்கள் உற்பத்தியில் தமிழ்நாட்டிற்கும் முக்கியப் பங்குள்ளது.
ஜவுளி, தோல் பொருட்கள் உற்பத்தி
பல்வேறு வகையான தோல் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 4.70 பில்லியன் டாலர்களாக தோல், காலணி ஏற்றுமதி உள்ளது. இந்த வணிகம் 2030இல் 13.7 பில்லியன் டாலர்களாக மாறக்கூடும். பல்லாண்டுகளாக பருத்திக்கான இறக்குமதி வரியை முற்றிலும் நீக்க கோரி ஜவுளி உற்பத்தியாளர்கள் வேண்டுகோளை வைத்திருந்தனர். அக்கோரிக்கை, பட்ஜெட்டில் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. சுங்கவரி குறைப்பு, கடன் உத்தரவாதம் ஆகிய பட்ஜெட் அறிவிப்பால் ஜவுளிக்கான எந்திரங்களை ஒருவர் வாங்கிப் வணிகப் பயன்பெறக்கூடும்.
பெண்களுக்கான விடுதிகளை கட்டமைப்பது பற்றி ஒன்றிய அரசு கூறியுள்ளதால், பெண்களுக்கு வேலைவாய்ப்பு சந்தையில் கூடுதல் வாய்ப்பு கிடைக்கலாம்.
இந்தியாவில் உள்ள டாப் 500 நிறுவனங்களில், ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கலாம். இதற்கு அரசு, பணி உதவித்தொகையாக பதினோராயிரம் ரூபாயை வழங்குகிறது. இதில், ஐந்தாயிரம் மாதம்தோறும் வழங்கப்படும். ஆறாயிரம் ரூபாய் பணிக்காலத்தின்போது ஒருமுறை வழங்கப்படும்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா
#budget 2024 #highlights #incentive #internship allowance #msme #women workforce #hostels #textile #leather #custom duty #credit support #basic custom duty #mobile phones #minerals #tn #digitisation #agri #TAFE #CII #recruit #hiring #booster #marine products #shrimp #export #sustainable #infra
கருத்துகள்
கருத்துரையிடுக